ராஞ்சி, பிப்ரவரி 20 —
இந்தியா வளர்வது தன்னை பெரிய நாடு ஆக்கிக் கொள்வதற்காக அல்ல. அது தான் இந்தியாவின் சுபாவமே. எத்தனையோ நாடுகள் வளர்ந்தோங்கி பெரிய நாடுகளாகின, பிறகு வீழ்ச்சி அடைந்தன. உலகில் இன்று கூட பெரிய நாடுகள் உண்டு, அவற்றை வல்லரசுகள் என்கிறார்கள். நாமும் தான் பார்க்கிறோம், வல்லரசு ஆகி இந்த நாடுகள் அப்படி என்ன தான் செய்கின்றன? உலகம் முழுவதும் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்கின்றன. உலகம் முழுவதும் தங்கள் தர்பார் நடத்துகின்றன. உலகம் முழுவதன் வளவாய்ப்புகளை தாங்களே பயன்படுத்திக் கொள்கின்றன. உலகம் முழுவதிலும் தங்களது ஆட்சி நடக்குமாறு செய்ய நேரடியாகவும் மறைமுகமாகவும் முயற்சிி செய்கின்றன. உலகம் முழுவதும் தங்கள் நிறத்தைப் பூச முயற்சிக்கின்றன. இது போல நடந்தது, நடந்து கொண்டிருக்கிறது. எனவே தேசம் பெரிய தேசம் ஆவது உலகத்துக்கே ஆபத்தானது என்று உலகின் பெரும்பாலான பகுதிகளில் அறிஞர்கள் முடிவு கட்டினார்கள். இன்று உலகில் நேஷனலிஸம் என்பதற்கு நல்ல அர்த்தம் கிடையாது. சில ஆண்டுகளுக்கு முன் சங்க திட்டப்படி பிரிட்டன் சென்றேன். அங்கே தெரிவு செய்யப்பட்ட 40, 50 அன்பர்களோடு கலந்துரையாட வேண்டி இருந்தது. அந்த சமயம் இங்கிலாந்தில் இருந்த நமது சங்க ஊழியர் ஒரு விஷயம் சொன்னார்: ”சொற்களுக்கான அர்த்தம் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஆங்கிலம் நமது மொழி அல்ல. நாம் படித்த ஆங்கிலத்தில் இங்கே கலந்துரையாடினால் சொற்களுக்கு வேறு அர்த்தம் கற்பிக்கப்பட்டுவிடும். எனவே தாங்கள் நேஷனலிஸம் என்ற சொல்லைத் தவிர்த்து விடுங்கள். நேஷன் என்று சொன்னால் பிரச்சினை இல்லை, நேஷனாலிடி என்று சொன்னால் பிரச்சினை இல்லை, நேஷனலிஸம் என்ற சொல்லைப் பயன் படுத்தாதீர்கள். இங்கே அந்தச் சொல் ஹிட்லரையும் நாஜியிசத்தையும் பாசிசத்தையும் குறிக்கிறது. எனவே நேஷனலிஸம் என்ற சொல்லை பயன்படுத்த வேண்டாம்” என்று அந்த ஊழியர் என்னிடம் எடுத்துக் கூறினார். இன்று நேஷனலிஸம் என்ற அந்தச் செயலுக்கு அங்கே அப்படி ஒரு தவறான பொருள். ஆனால் ஒரு தேசம் என்கிற ரீதியில் இந்தியா பெரிய நாடு ஆன போதெல்லாம் உலகத்திற்கு அதனால் நன்மையே விளைந்தது என்பது நாம் அறிந்ததுதான். நமது சங்கப் பாடல் ஒன்றின் கருத்து இது: “உலகின் ஒவ்வொரு தேசமும் குழப்பத்தில் தடுமாறி நிற்கும் போது சத்தியத்தை தரிசிக்க இந்த மண்ணுக்குத் தான் வந்தது. ஒடுக்கப்பட்டவர்களை, தாழ்த்தப்பட்டவர்களை பரிவுடன் கைதூக்கி விடுவது இந்த நமது பாரத பூமிதான். அதுதான் இந்தியாவின் சுபாவம். அதாவது உலகத்துக்கு இன்று பாரதம் மிக மிக அவசியமாகியிருக்கிறது.
ஹிந்து சமுதாயத்தை ஒருங்கிணைப்பதைத் தவிர ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்திற்கு, அதாவது ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு வேறு பணி கிடையாது. ஹிந்துத்துவ உணர்வின் அடிப்படையில் தேசிய உணர்வுக்கு வலுவூட்டி சமத்துவ அடித்தளத்தில் சுரண்டலற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்குவது தான் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் ஒரே குறிக்கோள். சங்கத்தின் கொள்கைகளும் செயல்முறையும் சமுதாயம் பின்பற்றக் கூடியவை. உலகெங்கும் பரவி வரும் தீவிரவாதம் உலக அமைதிக்கு ஊறு விளைவிக்கக்கூடியது. உலக அமைதிக்கு வழி ஹிந்து சிந்தனையில் தான் பொதிந்துள்ளது. இன்று சங்க ஸ்வயம்சேவகர்கள் எல்லாத் துறைகளிலும் பரவி பணிபுரிந்து வருகிறார்கள். ஸ்வயம்சேவகர்கள் என்ற முறையில் அவர்களுடன் தொடர்பு உள்ளது, சந்திப்புகள் நடக்கும். இதை வைத்து ஆர்எஸ்எஸ் எல்லா விஷயங்களிலும் மூக்கை நுழைக்கிறது என்று பேசுகிறார்களே (இம்ரான் கானும் தான் பேசுகிறார்) அதற்கு அர்த்தம் அது அல்ல. ஆனால் ஸ்வயம்சேவகர்கள் தாங்கள் ஏற்றெடுத்த பணியில் முனைப்புடன் இருந்து வருகிறார்கள்.
(இவை ஆர்எஸ்எஸ் அகில பாரதத் தலைவர் டாக்டர் மோகன் பாகவத் பிப்ரவரி 20 அன்று ராஞ்சி மகாநகர் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் இடையே பேசுகையில் தெரிவித்த கருத்துக்கள்).