VSK TN
ராஷ்டிரீய ஸ்வயம்சேவக சங்கம் தமிழ்நாடு
பத்திரிக்கை செய்தி
22.04.2020
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய மாநில அரசுகளின், காவல்துறை, மாவட்ட நிர்வாகம் போன்ற பல்வேறு துறைகள் எடுத்துவரும் நடவடிக்கைகளை ஆர்.எஸ்.எஸ் பாராட்டுகிறது.
குறிப்பாக தமிழநாட்டில் கொரோனா பாதித்த நோயாளிகளைக் காப்பாற்றும் பொருட்டு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவத்துறை பணியாளர்கள் தங்கள் குடும்பத்தை மறந்து உயிரைப்பணயம் வைத்து ஆற்றிடும் உயிர் காக்கும் சேவைகளை முழு சமுதாயமும் நன்றியோடு எண்ணிப்பார்க்கிறது.
இதற்கிடையில் ஒரு சிலர் சிகிச்சையளிக்கும் வேளையில் கொரோனா தொற்றுக்கு பலியாகிவிடுவது துரதிருஷ்டமாகும். அப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டு காலமான சென்னையை சேர்ந்த இரண்டு மருத்துவர்களின் சடலங்களை அங்குள்ள மயானத்தில் நல்லடக்கம் செய்ய உள்ளூர் மக்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்து அடக்கம் செய்வதைத் தடுத்துள்ளனர் என்ற செய்தி அதிர்ச்சியையும் ஆழ்ந்த வருத்தத்தையும் அளிக்கிறது.
கொரோனாவால் இறந்த பிறகு மருத்துவர்களால் அவ்வுடல் பக்குவப்படுத்தப்படுகிறது. மேலும் உடலில் உள்ள கிருமிகள் அழிந்து போகும் வண்ணம் மருந்துகள் சேர்க்கப்பட்டு மிகவும் பாதுகாப்பான முறையில் அவ்வுடல் நல்லடக்கத்திற்கு தயார்செய்யப்படுகிறது என்பதே உண்மை.
இப்படி மருத்துவர்களால் பக்குவப்படுத்தப்பட்ட இறந்த உடலில் இருந்து எவ்வகையிலும் கொரோனா தொற்று ஏற்படாது என்பது விஞ்ஞான பூர்வமான சான்று. இதை பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும்
நோயாளிகளின் உயிரைக் காப்பதில் இறைவனுக்கு அடுத்து மருத்துவர்களே முக்கியப் பங்கு வகிக்கின்றனர், நெருக்கடியான இத்தருணத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோரது மகத்தான சேவையை மதிப்பதும் உளமாறப் பாராட்டுவதும் ஒட்டுமொத்த சமுதாயத்தின் கடமையாகும்.
இனிமேல் இப்படிபட்ட சம்பவம் நடைபெறாது பார்த்துக்கொள்வோமாக. உயிரிழந்த மருத்துவர்களின் ஆன்ம சாந்தியடைய ப்ரார்த்திக்கிறோம், அவர்களது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்
இப்படிக்கு
R.V.S மாரிமுத்து , தென்தமிழக தலைவர்
K.குமாரசாமி ,வடதமிழக தலைவர்