நிகழாண்டு, சுதந்திரத்தின் அம்ருத மகோத்சவத்தை (பவள விழா ஆண்டு) பாரதம் கொண்டாடி வருகிறது. தேசம் தன் சுயத்தன்மையை மீட்க நடைபெற்ற பல நூற்றாண்டு கால போராட்டத்தையும் சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் சிறப்பான முறையில் நினைவுகூர்வதற்கான கொண்டாட்டம் இது. வெறும் அரசியல் கிளர்ச்சியாக அல்லாமல் தேசிய வாழ்வின் அனைத்து அம்சங்களையும் தொட்ட, சமுதாயத்தின் எல்லா தரத்தினரும் பங்களித்த சமூக – கலாசார இயக்கமாக திகழ்ந்ததுதான் பாரத சுதந்திர போராட்டத்தின் மகத்தான அம்சமாகும். நமது அடையாளத்தின், அதாவது நமது வாழ்வின் அடிப்படை அம்சத்தை, அதாவது தேசிய சுயத்தன்மையை மேலோங்கச் செய்யும் முயற்சியின் தொடர்ச்சி என்றே தேச விடுதலை இயக்கத்தைக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.
காலனிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு வணிக ரீதியான நோக்கங்களோடு, பாரதத்தை அரசியல் ரீதியாகவும் ஏகாதிபத்திய முறையிலும் மதரீதியாகவும் அடிமைப்படுத்துவதே முக்கிய குறிக்கோளாக இருந்தது. பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பாளர்கள் பாரத மக்களிடம் அடிப்படையிலேயே இருந்த ஒருமைப்பாட்டை சீர்குலைத்து நமது தாய்நாட்டின் மீதான உணர்வுபூர்வமான, ஆன்மிக ரீதியிலான தொடர்பை பலவீனமடையச் செய்தனர். நமது உள்நாட்டு பொருளாதார – அரசியல் முறைகள், வழிபாட்டு நம்பிக்கைகள், கல்விமுறைகள் ஆகியவற்றைத் தாக்கி சீர்குலைக்க அவர்கள் முயன்றனர்.
ஒட்டுமொத்த பாரதத்தையும் உள்ளடக்கியதாக இந்த தேசிய இயக்கம் இருந்தது. ஸ்வாமி தயானந்த சரஸ்வதி, ஸ்வாமி விவேகானந்தர், மகரிஷி அரவிந்தர் போன்ற ஆன்மிகத் தலைவர்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கான எதிர்ப்பை தக்கவைக்க பாடுபட்டனர். கலை, கலாசாரம், இலக்கியம், அறிவியல் என தேசிய வாழ்க்கையின் அனைத்து பிரிவினரிடத்திலும் பெண்கள், பழங்குடியின மக்கள் மத்தியிலும் விடுதலை உணர்வை இந்த இயக்கம் தட்டியெழுப்பியது. லாலா லஜ்பத்ராய், பால கங்காதர திலகர், விபின் சந்திர பால், மகாத்மா காந்தி, வீர சாவர்க்கர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், சந்திரசேகர ஆசாத், பகத்சிங், வேலு நாச்சியார், ராணி கைடினில்யு போன்ற எண்ணற்ற விடுதலைப் போராட்ட வீரர்கள் தன்மான உணர்வையும் தேசியத்தன்மையையும் மேலும் பலப்படுத்தினார்கள். தீவிர தேசபக்தரான டாக்டர் ஹெட்கேவாரின் தலைமையில் ஸ்வயம்சேவகர்களும் விடுதலைப் போரில் தங்கள் பங்களிப்பை செய்தார்கள்.
ஒரு சில காரணங்களால் விடுதலை இயக்கத்தின்போது சுயத்தன்மை படிப்படியாக பலவீனப்பட்டதால் தேசப் பிரிவினையின் கொடூரத்தை இந்த நாடு சந்திக்க நேர்ந்தது. விடுதலைக்குப் பிறகு சுயத்தன்மையை தேசிய வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் வெளிப்படுத்தும் வாய்ப்பை நம்மால் எந்த அளவுக்கு செயல்படுத்த முடிந்திருக்கிறது என்பதை கணிக்க இதுவே சரியான தருணம்.
பாரத சமுதாயத்தை ஒரே நாடாக நிலைநிறுத்தி எதிர்கால சோகங்களிலிருந்து நாட்டை பாதுகாக்கவேண்டும் என்றால் சுயத்தன்மையுடன் வாழும் கனவை நனவாக்குவது அவசியம். இந்த வழியில் தொடர்ந்து அர்ப்பணித்துக் கொள்ள சுதந்திரத்தின் 75வது ஆண்டு நமக்கு நல்ல வாய்ப்பு.
தடைகள் பல இருந்தபோதிலும் தொடர்ந்து பல்வேறு துறைகளில் பாரதம் வளர்ச்சி அடைவது திருப்தியளிக்கிறது. ஆனால் பாரதத்தை முழு சுயத்தன்மையுடன் திகழச் செய்யும் இலக்கை இன்னும் எட்டியாகவில்லை என்பதே உண்மை. எனினும் தொலைநோக்குப் பார்வையுடன், சுயத்தன்மையுடைய பாரதத்தைப் படைக்க நாடு சரியான திசை நோக்கி ஆயத்தமாகி வருகிறது. இந்த மாபெரும் முயற்சியில் மாணவர்களையும் இளைஞர்களையும் ஈடுபடுத்துவது அவசியமாகும். பாரதிய கண்ணோட்டத்தை மையமாகக் கொண்ட கல்வி திட்டத்தை திறம்பட அமல்படுத்துவதன் மூலம் அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கவேண்டும். இதன்மூலமே பாரதத்தை உலகின் குருவாக உயர்த்த முடியும்.
நமது வேர்களுடன் தொடர்புகொள்ளும் வாய்ப்பை அளிக்கக்கூடிய, நமது சுயத்தன்மையை மீட்டெடுத்து தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்திட சுதந்திரத்தின் அம்ருத மகோத்சவ வேளையில் நாம் உறுதி ஏற்கவேண்டும்.
ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலர்