ஆங்கிலத்தில் s என்று ஆரம்பிக்கும் பெயர்கள் தான் அதிகம். அது போல தமிழ் மொழியில் சுப்ரமணியம் என்று பெயர் வைத்துக் கொண்டவர்கள் அதிகம்.
சுதந்திரம் எங்கு நசுக்கப்படுகிறதோ, அங்கே நான் சென்று என்னால் முடிந்த அளவு பாடுபட்டு சுதந்திரதிற்காக போராடுவேன் என்று எங்கு அதர்மம் தலை தூக்குகிறதோ அங்கு நான் தோன்றுவேன் என்று கிருஷ்ண பரமாத்மா போல் முழங்கியவர் தான் நம் சுதந்திர போராட்ட வீரர் சுப்ரமணிய சிவா அவர்கள்.
1884 அக்டோபர் மாதம் 4ம் தேதி, ராஜம், நாகலக்ஷ்மி தம்பதியருக்கு மகனாக பிறந்தார் சுப்ரமணிய சிவா. திண்டுக்கல் மாவட்டம் வத்தல குண்டுவில் பிறந்த சுப்பரமணிய சிவா, சிறு வயதிலேயே, தன் தாத்தாவின் தாக்கத்தால், ராமாயணம், மகாபாரதம் மற்றும் பல இதிகாசங்களை கேட்டு வளர்ந்தார்.
இவரின் தாத்தா கிராம முன்சீப்பாக இருந்ததால், கிராம மக்களிடம் வசூல் செய்த பணத்தை எண்ணி கொண்டிருக்கும் போது, குழந்தையான சுப்ரமணிய சிவா அருகில் வந்து பணத்தை தொடும்போது, தாத்தா எவ்வளவு வேணுமானாலும் எடுத்துக்கோ என சிரிப்புடன் சொல்ல, குழந்தை சிவா, புரட்டி புரட்டி பார்த்து வெறும் ஒரு பைசா நாணயத்தை கையிலெடுத்ததை கண்டு, இவனுக்கு பொருள் மேல் பற்றே இல்லை என்று சொன்னார் இவரின் தாத்தா.
அது போலவே சுப்ரமணிய சிவாவும் பணத்தின் மீது பற்று வைக்காமல், நாட்டின் மீது பற்று வைத்து உயர்ந்த சுதந்திர போராட்ட வீரர் ஆனார்.
12வது வகுப்புவரை மதுரையிலும், பிறகு திருவனந்தபுரத்திலும் படித்தார். சுப்ரமணிய சிவா நாட்டுப்பற்று கொண்டு, தன்னிச்சையாக திரிந்ததை கண்டு அவரின் பெற்றோர் மீனாட்சி என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். ஆனாலும் சுப்ரமணிய சிவாவின் சுதந்திர வேட்கை தனியவில்லை.
நெல்லையில் கூட்டங்களில் எழுச்சி உரையாற்றினார. இதனால் பல இளைஞர்கள் இவரின் பேச்சால் ஈர்க்கப்பட்டு சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒட்டப்பிடாரத்தில் சுதந்திரத்திற்காக போராடி வந்த வ.ஊ. சிதம்பரம் பிள்ளை, கவிஞர் சுப்ரமணிய பாரதி இவர்களின் நட்பு கிடைத்தது. மூன்று பேரும் சேர்ந்து ஆங்கில ஏகாதிபத்ய அரசை எதிர்த்து குரல் கொடுத்தனர். ஆங்கில அரசு இவர்கள் மூவரையும் பிடிக்க முயன்று சுப்ரமணிய சிவாவையும், வ.ஊ. சிதம்பரம் பிள்ளை அவர்களையும் கைது செய்து, 10 வருட கடுங்காவல் தண்டனை விதித்தனர்.
சிறையில் பல இன்னல்களை அனுபவித்தனர். பிறகு மேல் முறையீடு செய்ததன் விளைவாக விடுதலை செய்யப்பட்டனர். அப்போது கலெக்டராக இருந்த வின்சென்ட் துரை முன் சென்று, தடை செய்யப்பட்ட வந்தே மாதரம் என்ற முழுக்கத்தை தைரியமாக ழுழங்கினர்.
1912ம் ஆண்டு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட சுப்ரமணிய சிவா, மீண்டும் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார். சிறையில், மாடு இழுக்கும் செக்கில் மாடு போல் பூட்டப்பட்டு செக்கில் எண்ணை எடுக்கும் கடுமையான வேலைக்கு உட்படுத்தப்பட்டார்.
பதப்படுத்தப்படாத கம்பளியை சரிசெய்தல் மிருகங்களின் தோல்களை ஊற வைத்து பதப்படுத்துதல் போன்ற கொடுமையான வேலைகளை செய்ததால் சுப்ரமணிய சிவாவின் உடல் பலவீனம் அடைந்தது. தன் கைப்பிடித்த மனைவி, குழந்தையை பற்றி நினைவே இல்லாமல் இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்குவதே தன் லட்சியம், குறிக்கோள் என்று இருந்தார். 1915ல் சென்னையில் அவரின் மனைவி மீனாட்சி இறந்தார். சென்னைக்கு வந்த சிவா, ஞானபானு, தேசாந்திரி என்னும் பத்திரிகைகளை ஆரம்பித்து, சுதந்திர கருத்துக்களை தொடர்ந்து தீவிரமாக பரவச் செய்தார். இதனால் மீண்டும் கைது செய்யப்பட்டு 1921 முதல் 1922 வரை சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் பல இன்னல்களை அனுபவித்த சுப்ரமணிய சிவா கொடுமையான தொழுநோயால் பாதிக்கப்பட்டதால் விடுதலை செய்யப்பட்டார். தொழுநோயால் பாதிக்கப்பட்ட சுப்ரமணிய சிவா இனி சுதந்திர போராடத்தில் ஈடு படமாட்டார் என பிரிட்டிஷ் அரசு எண்ணியது.
ஆனால் சுப்ரமணிய சிவா எப்போதும் போல் ஊர் ஊராகச் சென்று கூட்டம் அதிகம் இருக்கும் பகுதிகளை தேர்ந்தெடுத்து சுதந்திர உரையாற்றினார். தொழுநோயால் பாதிக்கப்பட்ட சுப்ரமணிய சிவாவை பிரிட்டிஷ் அரசு, ரயில்களிலோ, பேருந்துகளிலோ பயணம் செய்ய அனுமதிக்கவில்லை. ஆனாலும் சோர்வடையாத சுப்ரமணிய சிவா கட்டை வண்டியிலும், கால் நடையாகவும் சென்று சுதந்திரம் என்னும் வேள்வி தீயை பரப்பிக் கொண்டிருந்தார். பாரத மாதாவுக்கு ஒரு கோயில் அமைக்க வேண்டும் என்று கருதி பல கனவான்களின் உதவியுடன், 23.01.1923ம் ஆண்டு பாப்பாரப்பட்டி, தருமபுரி மாவட்டத்தில் அடிக்கல் நாட்டினார்.
தொழுநோய் முற்றி இறுதியில் 1925ம் ஆண்டு, ஜூலை 23ம் தேதி சுப்ரமணிய சிவா, சுதந்திரம் இன்னும் கிடைக்கவில்லை என்ற ஏக்கத்துடன், ஆனால் கண்டிப்பாக சுதந்திரம் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையுடன் இறைவனடி சேர்ந்தார்.
சுப்ரமணிய சிவா, ஆங்கிலம், தமிழ், சமஸ்கிருதம் மொழிகளில் சிறந்து விளங்கினாலும் தமிழின் பால் அதீதி பற்று கொண்டிருந்தார். தன் ஞானபாநு பத்திரிகையில், சுத்த தமிழில் சமஸ்கிருதம், ஆங்கில எழுத்துக்கள் சொற்கள் கலக்காமல் திருக்குறள் பற்றி கட்டுரை எழுதுபவர்களுக்கு ரூபாய் ஐந்து சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
சுப்ரமனிய பாரதியால், சுப்ரமணிய சிவா, சிவாஜி என்று அன்போடு அழைக்கப்பட்டார். ராமானுஜ விஜயம் பக்தவிஜயம் என பல நூல்கள் எழுதினார் சுப்ரமணிய சிவா.
தான் இறப்பதற்கு முன் என் மனத்துள் எரிந்து கொண்டிருக்கும் சுதந்திர தீயை அணைக்க முடியாது. அந்த தீயை உங்களிடம் பற்ற வைத்து செல்கிறேன், என்றாவது ஒரு நாள் அந்த தீ கொழுந்து விட்டு எரிந்து, இந்த அரசாங்கத்தினை அழித்து விடும் என்று ஒரு ஆசிரமவாசிக்கு எழுதி சென்றார்.
அதன்படி நம்நாடு சுதந்திரம் அடைந்துவிட்டது. ஆனால் சுப்ரமணிய சிவா கனவு கண்ட அந்த சுதந்திரம் கிடைந்து விட்டாலும், சுய நல அரசியல்வாதிகளின் கையில் இந்திய திருநாடு அகப்பட்டு மீண்டும் அடிமையாகி விட்டதா?
மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம் தேவையா? பாமர மக்கள் மீண்டும் சுதந்திரம் பெறுவார்களா?
காலம் தான் பதில் சொல்லும்
ஜெய் ஹிந்த், வந்தே மாதரம்
திரு.சௌம்யா நாராயணன்
எழுத்தாளர்