Thiru Muruga Kirupanandha Variyar: A Saint For All Times

VSK TN
    
 
     

கிருபானந்த வாரியர்

தமிழ் இலக்கியம் மற்றும் இந்து சமய ஆன்மிகச் சொற்பொழிவில் தனக்கென தனிப் பெயரை ஏற்படுத்திக் கொண்ட மிகச் சிறந்த சொற்பொழிவாளர் கிருபானந்த வாரியார். இவர் சொற்பொழிவைக் கேட்க எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். எந்தச் சொற்பொழிவாக இருந்தாலும் அதில் நகைச்சுவை கலந்து, மகிழ்ச்சியைச் சேர்த்து வழங்கும் தனித்திறன் அவருக்குண்டு. சின்னக் குழந்தைகளைக் கூட தன் பேச்சால் கவர்ந்து வயப்படுத்தி வைத்திருந்த மகான் இவர். இந்தியா மட்டுமில்லாது, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளிலும் சிறப்பான சொற்பொழிவுகளை நிகழ்த்தி உலகத் தமிழர்கள் அனைவரது மனத்திலும் தனக்கென நீங்கா இடம் பெற்றிருந்தார் என்றால் அது மிகையில்லை.

பிறப்பும் கல்வியும்

வேலூர் மாவட்டம், காட்பாடிக்கு அருகில் பாலாற்றங்கரையில் அமைந்த காங்கேயநல்லூர் எனும் கிராமத்தில் மல்லையதாசர் – கனகவல்லி தம்பதியருக்கு மொத்தம் பதினோரு குழந்தைகள் பிறந்தனர். இவர்களுள் 1906 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதியில் நான்காவது குழந்தையாகப் பிறந்தவர் கிருபானந்த வாரியார். இவருக்கு, இசையாலும், புராணச் சொற்பொழிவாலும் இறைவன் புகழ்பாடி வந்த மல்லையதாசர் முருகப்பெருமானின் பல நாமங்களில் ஒன்றான “கிருபானந்த வாரி” எனும் பெயரைச் சூட்டினார்.

“கிருபை” என்றால் கருணை என்றும், “ஆனந்தம்” என்றால் இன்பம் என்றும், “வாரி” என்றால் பெருங்கடல் என்றும் பொருள். இவர் பெயருக்கேற்ப கருணையே உருவாக, பிறரை தன் சொற்பொழிவால் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் பெருங்கடலாகத் திகழ்ந்தார். எட்டு வயதிலேயே கவிபாடும் ஆற்றல் பெற்ற இவர் தேவாரம், திருப்புகழ், திருவருட்பா, கந்தபுராணம், கம்பராமாயணம், வில்லிபாரதம் முதலான நூல்களில் பத்தாயிரம் பாடல்களுக்கு மேல் அவர் மனப்பாடம் செய்துவிட்டார். கற்றறிந்த புலவருக்கே கடினமாக இருக்கும் அஷ்டநாக பந்தம், மயில், வேல், சிவலிங்கம், ரதம் முதலான பந்தங்கள், சித்திரக் கவிகள் முதலியவைகளை இயற்றினார்.

சொற்பொழிவாளர்

பதினெட்டு வயதில் சொற்பொழிவைத் தொடங்கிய வாரியாரின் பேச்சு, எளிமையான உரைநடையில் இருந்ததால் அதைப் படிப்பறிவே இல்லாதவர்கள் கூட எளிமையாகப் புரிந்து கொண்டார்கள். சிறுபிள்ளைகள் கூட இவருடைய சொற்பொழிவு என்றால் கேட்க விரும்புவார்கள். அவ்வளவு எளிமையாக இருக்கும். சொற்பொழிவில் அதிகமான நகைச்சுவைகள் அர்த்தத்துடன் இருக்கும்.

பொதுவாக இவர் சொற்பொழிவாற்றும் கூட்டங்களில் சிறுபிள்ளைகள் முன் வரிசையில் அமர்ந்திருப்பார்கள். சொற்பொழிவின் இடையிடையே எளிமையான கேள்விகளைக் கேட்பார். அந்தக் கேள்விகளுக்கு முதலில் பதிலளிக்கும் சிறுபிள்ளைக்கு விபூதியும், சிறிய கந்தசஷ்டிக் கவசப் புத்தகம் ஒன்றும் பரிசாக அளிப்பார். இந்தப் பரிசைப் பெற சிறுவர்களுக்கிடையே ஆர்வம் அதிகமிருக்கும். இதற்காக முன் வரிசையில் இடம் பிடிக்கப் போட்டியும் இருக்கும். வாரியார் சொற்பொழிவில் கூட்டம் கலைவது என்பது குறைவாகவே இருக்கும். கலையும் அந்தக் குறைவான கூட்டத்தையும் தக்க வைக்கும் கலையையும் அவர் கற்றிருந்தார்.

வாரியார் ஒரு சமயம் ஒரு ஊரில் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார். அவர் மிகுந்த சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்த போது பாதியில் ஒவ்வொருவராக எழுந்து போய்க் கொண்டிருந்தனர்.

அவர்களைப் பார்த்து வாரியார் சொன்னார், ”ராமாயணத்தில் அனுமனை “சொல்லின் செல்வர்” என்று குறிப்பிடுவார்கள். இந்த ஊரிலும் சொல்லின் செல்வர்கள் பலர் இருப்பதைப் பார்க்கிறேன்.”என்றார்.

போய்க் கொண்டிருந்தவர்கள் யாரைச் சொல்லப் போகிறார் என்று தெரிந்து கொள்ள ஆவலுடன் நின்றனர்.

வாரியார் தொடர்ந்து, ”நான் நல்ல பல விஷயங்களைச் சொல்லின் அதைக் கேட்காமல் செல்பவரைத் தான் சொல்கிறேன் .” என்றார். இடையில் எழுந்து சென்ற அவர்கள் மீண்டும் அவர்கள் இடத்திற்கு வந்தமர்ந்தனர்.

 

பெண்களை மதித்தவர்

வாரியார் சொற்பொழிவில் கூட்டத்திற்குக் குறைவு இருக்காது. இந்தக் கூட்டத்தில் பெண்கள் எண்ணிக்கைக்கும் குறைவு இருக்காது. பெண்களைக் குறைவாகப் பேசுவதை வாரியார் விரும்ப மாட்டார். குழந்தைகளுக்குப் பெற்றெடுத்த தாயின் பெயரை முதலெழுத்தாக (இன்சியலாக) போடவேண்டும் என்று பெண்களை முன்னிறுத்தும் கருத்தை முதன் முதலாகச் சொல்லியவரும் வாரியார்தான்.

 

முருகப் பெருமான்

வாரியார் தன் சொற்பொழிவில் அடிக்கடி முருகப்பெருமான் தோற்றம் குறித்து சொல்வார். உலகம் தோன்றிய நாள்தொட்டுத் தாய்மார்கள் குழந்தைகளைப் பெறுவார்கள். அப்பா பெயர் வைப்பார். ஆனால் அப்பா குழந்தை பெற்று அம்மா பெயர் வைக்கின்றாள். இது ஒரு புரட்சி. உலகத்திலே எங்குமே ஆண்கள் மருத்துவ விடுதி கிடையாது. ஓர் ஆண் பிள்ளை குழந்தை பெற்றான் என்ற சரித்திரம் கிடையாது. கைலாயத்தில்தான் சிவபெருமான் நெற்றிக்கண்ணிலிருந்து முருகப் பெருமானை உண்டாக்குகின்றார். எனவே “ஆண்பிள்ளை” முருகபெருமான் ஒருவர்தான். நாமெல்லாம் பெண்பிள்ளைகள். பெண் வயிற்றிலிருந்து பிறந்தால் பெண் பிள்ளைகள்தானே.

இசைப்பயிற்சி

வாரியாருக்கு 23 வயதான போது, சென்னையில் உள்ள யானைக்கவுனி தென்மடம் பிரம்மஸ்ரீ வரதாசாரியாரிடம் ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் வீணைப் பயிற்சி பெற்றார். இதன் பிறகு இசை ஞானத்தால் இசைச் சொற்பொழிவு செய்யும் பொழுது திருப்புகழ், தேவாரம், திருவாசகம் முதலான தோத்திரப்பாக்களை இன்னிசையுடன் பாடினார்.

 

சைவ சித்தாந்தம்

சுவாமிகள் சைவ சித்தாந்தத்திலும் பெரும் புலமை பெற்றவர். அபரிதமான நினைவாற்றலும், நாவன்மையும் பெற்றவர். அவர் கூறும் நுட்பங்களைக் கேட்டு கல்வியில் சிறந்த புலவர்களும் தங்களுக்கு இது தெரியாதே என்றபடி வியந்து பாராட்டினார்கள். சுவாமிகள் திருமுருகாற்றுப்படை, திருவாசகம், தேவாரம், திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், திருவகுப்பு, திருவருட்பா முதலான தோத்திர நூல்களில் இருந்து பல பாடல்களை, பாடல் வரிகளை தம்முடைய சொற்பொழிவுகளில், ஏற்ற இடங்களில் தட்டுத் தடங்கல் இல்லாமல் இசையோடு பாடுவார். கூட்டத்திலிருப்பவர்கள் மெய்மறந்து கேட்டுக்  கொண்டிருப்பார்கள்.

இசுலாமியர் கருத்து

ஒருமுறை திருப்பரங்குன்றத்தில் வாரியார் சுவாமிகள் சொற்பொழிவு நிகழ்த்திய போது கூட்டத்தில் இருந்த ஒருவர் எழுந்து நின்று, “சுவாமி! இத்திருப்பரங்குன்றத்தை சிக்கந்தர் மலை என்று பெயர் மாற்றம் செய்யவேண்டும் என்று இசுலாம் சமயத்தைச் சார்ந்த சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்துத் தங்களின் கருத்து என்ன?” என்று கேட்டார்.

அதற்கு வாரியார், “இதில் என்ன தவறு இருக்கின்றது. அவர்கள் சிக்கந்தர் மலை என்று பெயர் வைத்தால் வைத்துக் கொள்ளட்டுமே.” என்று கூற “அனைவரும் அது எவ்வாறு பொருந்தும்? என்ன சுவாமி தாங்களே இவ்வாறு கூறினால் சமுதாயத்தில் குழப்பம் ஏற்பட்டு சமயச் சண்டையாக இது மாறிவிடாதா?” என்று கேட்டனர்.

இதனைக் கேட்ட வாரியார், “முருகனின் தந்தையார் பெயர் என்ன? சிவபெருமான். முருகனுக்கு வழங்கும் வேறு பெயர் என்ன? கந்தன். இதனைத்தான் சி.கந்தன், சிக்கந்தர் என்று குறிப்பிட்டு சிக்கந்தர் மலை என்று கூற முற்படுகின்றனர். இதில் தவறில்லை” என்று கூற, கூட்டத்தினர் ஆராவாரித்து மகிழ்ந்தனர். பெயர் மாற்ற நினைத்த இஸ்லாமியர்கள் தலைகுனிந்து சென்றனர்.

 

தமிழ் பற்றாளர்

நம்முடைய வாழ்க்கை நான்கு வகையாகும். கிடத்தல், இருத்தல், நிற்றல், நடத்தல். படுத்திருபோம்; எழுந்து உட்காருவோம்; நிற்போம்; நடப்போம். இந்த நான்கைத் தவிர வேறு கிடையாது. யுகங்கள் நான்கு. கிருதயுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம். நிலம் நான்கு. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல். பெண்மைக்கு நான்கு. அச்சம், மடம், பயிர்ப்பு, நாணம். ஆண்களுக்கு புருஷார்த்தங்கள் நான்கு. அறம், பொருள், இன்பம், வீடு. எழுத்து நான்கு. உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய்யெழுத்து, ஆயுத எழுத்து. சொல் நான்கு பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல். பாட்டு நான்கு. வெண்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா, கலிப்பா. எல்லா மொழிகளிலுமே நான்கில்தான் அடக்கம். சுழி, பிறை, நேர்க்கோடு, குறுக்குக்கோடு. இரண்டு நேர்கோடு போட்டால் “ப” இப்படி போட்டால் “H” . இப்படிப் போட்டல் “L”. இப்படிப் போட்டால் “ட”. அறிவுக்குச் சிந்தனை. “அ” கரத்தில் இந்த நான்கும் வைத்தார்கள்.

ஒருமுறை ஒரு சொற்பொழிவில் ஒரு பாடலைப் பாடி இந்தப் பாடல் முழுவதும் ஒரு மாத்திரையிலேயே எழுதியிருக்கிறார் அருணகிரிநாதர் என்று சொன்னார்.

அந்தப் பாடலில் “அம்மை” என்று ஒரு சொல் வந்தது. சொற்பொழிவு முடிந்து திரும்புகையில் “சுவாமி! “அம்மை” யில் வரும் “ஐ” இரண்டு மாத்திரையாயிற்றே!” என்று ஒருவர் கேட்டார். அதற்கு உடனே வாரியார், “ஆம், “ஐ” க்கு 2 மாத்திரைதான், ஆனால் இந்த ‘ஐ’க்கு பெயர் ஐகாரக் குறுக்கம், எனவே ஒரு எழுத்து தான்” என்று விளக்கினார்.

வாரியார் ஆன்மிகச் சொற்பொழிவாற்றினாலும் சரி இலக்கியச் சொற்பொழிவாற்றினாலும் சரி தமிழ் வளர்ச்சிக்கும், தமிழ் உயர்வுக்கும் முன்னின்றவர் என்பதை இன்றும் யாரும் மறுக்க முடியாது. இவரிடம் திருமணம் மற்றும் விழாக்களுக்கு அழைப்பிதழ் கொடுத்தவுடனே அவர்களுக்கு வெண்பா மூலம் உடனுக்குடன் வாழ்த்துப்பாடல் அளிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

எழுத்தாளர்

வாரியார் சுவாமிகள் இலக்கியம் மற்றும் ஆன்மிகச் சொற்பொழிவுகள் நிகழ்த்துவதில் மட்டுமில்லாமல் எழுதுவதிலும் சிறப்பு பெற்று விளங்கினார். வாரியார் 1936-ஆம் ஆண்டு தைப்பூசத் திருவிழாவுக்காக வடலூர் சென்றிருந்தார். அங்கு சத்திய ஞான சபையில் அமர்ந்து “திருப்புகழ் அமிர்தம்’ என்ற மாதப் பத்திரிகையை வெளியிடக் கருதினார். அதற்காக “கைத்தல நிறைகனி” என்று தொடங்கும் திருப்புகழ் பாவுக்கு உரை எழுதினார். அது முதல் “திருப்புகழ் அமிர்தம்” எனும் மாத இதழைத் தொடங்கினார். இந்த இதழை சுமார் முப்பத்தேழு ஆண்டுகள் தொடர்ந்து நடத்தினார். இந்த இதழில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திருப்புகழ் பாடலுக்கு விளக்கவுரையும், கந்தர் அலங்கார உரையும், கற்பு நெறிக்கதையும், வேறு பல கட்டுரைகளும் எழுதினார்.

சாதாரணமாக எழுதப் படிக்கத் தெரிந்த பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படியாக 500-க்கும் அதிகமான ஆன்மிகக் கருத்துக்களைக் கொண்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். இவையனைத்தும் இலக்கியத்தரம் வாய்ந்தவை மட்டுமன்றி, தெளிவான நடையில் அமைந்தவையும் ஆகும். இவர் 150க்கும் அதிகமான நூல்களையும் எழுதியுள்ளார். இவற்றுள் சிவனருட்செல்வர், கந்தவேள் கருணை, இராமகாவியம், மகாபாரதம் போன்றவை சிறப்பு பெற்றவை. இவரது சொற்பொழிவுகளில் 83 குறுந்தகடுகளாகவும் வெளியிடப்பட்டிருக்கின்றன என்பதும் இங்கு குறிப்பிடத் தகுந்தது.

இறை வழிபாடும் இறை சேவையும்

வாரியார் சுவாமிகள் வாழ்நாள் முழுவதும் கோயில், பூசை, சொற்பொழிவு என்று ஆன்மிக வழியில் சரியாகச் சென்று கொண்டிருந்தார். ஒருநாள் கூட முருகனுக்குப் பூசை செய்யாமல் இருந்ததில்லை. இவரின் மூச்சு கூட முருகா! முருகா!! என்றுதான் இருந்தது. தனி மனித ஒழுக்கத்தையும், பல நல்ல உபதேசங்களையும் வழங்கிய வாரியார் அதன்படி வாழ்ந்தும் காட்டினார்.

உலகில் எங்கெங்கு முருகன் கோவில் இருக்கிறதோ, அங்கெல்லாம் சென்று முருகனை வழிபட்டவர் வாரியார். ஆனாலும் வயலூர் முருகன் மீது அவருக்கு தனி ஈடுபாடு உண்டு. வாரியார் தனது சொற்பொழிவை தொடங்கும் போதெல்லாம் “வயலூர் எம்பெருமான்…” என்று கூறிதான் சொற்பொழிவை தொடங்குவது வழக்கம்.

தான் அணிந்திருந்த தங்க நகைகளை காங்கேய நல்லூர் முருகனுக்குக் காணிக்கை ஆக்கினார். ஏழை எளிய குடும்பத்து மாணவர்களின் கல்விச் செலவுக்காக இவர் பல நன்கொடைகளைக் கொடுத்திருக்கிறார். இவர் பிறந்த காங்கேயநல்லூரில் பல கல்வி நிறுவனங்களைத் தொடங்கியிருக்கிறார். இன்றும் இவருடைய பெயரால் மேல்நிலைப் பள்ளிகள் பெண்களுக்கும், ஆண்களுக்கும் தனித்தனியாக நிறுவியிருப்பதைக் காணலாம்.

வாரியார் சுவாமிகள் ஏராளமான கோவில்களுக்கு திருப்பணி செய்து கொடுத்த பெருமையும் இவருக்கு உண்டு. இவர் திருப்பணி செய்ய உதவி புரிந்த கோயில்களின் எண்ணிக்கை எண்ணிலடங்காது.

இறைவனை ஏன் வணங்க வேண்டும்? இறைவனை வணங்காவிடில் கடவுளுக்கு என்ன நஷ்டம்? மனித வாழ்வில் இறையுணர்ச்சி இல்லாமல் வாழ முடியாதா? என்ற கேள்விகளை நாத்திகப்  கேட்கிறார்கள். விலங்குகளும் உண்கின்றன. உறங்குகின்றன; உலாவுகின்றன; இனம் பெருக்குகின்றன; மனிதர்களாகிய நாமும் உண்கிறோம். உறங்குகிறோம். உலாவுகிறோம்; இனம் பெருக்குகிறோம். இவை விலங்குகட்கும், மனிதர்கட்கும் ஒன்றாகவே அமைந்திருக்கின்றன. விலங்குகளினின்றும் மனிதன் உயர்ந்து விளங்குவது தெய்வ உணர்ச்சி ஒன்றினாலேயாகும்என்று இறைவழிபாட்டிற்கான காரணத்தைச் சொன்னார் வாரியார்.

 

மறைவு

உள்நாட்டில் மட்டுமின்றி, அமெரிக்கா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, லண்டன், சுவிட்சர்லாந்து என பல நாடுகளில் சொற்பொழிவுகளை நிகழ்த்தி இருக்கிறார். இதற்காகப் பல பட்டங்களையும், விருதுகளையும் பெற்றிருக்கிறார். இவற்றில் கலைமாமணி, திருப்புகழ்ஜோதி, பிரவசன சாம்ராட், இசைப்பேரரசர், அருள்மொழி அரசு போன்றவைகளைக் குறிப்பிடலாம். இப்படி பல பட்டங்களையும் விருதுகளையும் வாங்கிச் சேர்த்த வாரியார் சுவாமிகள் 1993 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதம் லண்டன் நகருக்குச் சொற்பொழிவாற்றச் சென்றார். அங்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்றுக் கொண்டு நவம்பர் மாதம் 6 ஆம் தேதி லண்டனிலிருந்து திரும்பினார். 7 ஆம் தேதி அதிகாலை மும்பை வந்து சேர்ந்தார். அங்கிருந்து காலை 6 மணிக்கு சென்னைக்கு விமானத்தில் கிளம்பினார். சென்னை வருவதற்கு முன்பாகவே அவர் உயிர் இறைவனிடம் சென்று சேர்ந்துவிட்டிருந்தது. நவம்பர் 8 ஆம் தேதியில் அவர் சமாதி நிலையடைந்தார்.

சிறப்புகள்

கிருபானந்த வாரியாரின் சொந்த ஊரான வேலூரை அடுத்துள்ள காங்கேயநல்லூருக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டது. காங்கேய நல்லூரில் உள்ள முருகன் கோவில் எதிரே “சரவண பொய்கை குளம்” என்ற மண்டபம் ஒன்றை கிருபானந்த வாரியார் ஏற்கனவே உருவாக்கி இருந்தார். அந்த மண்டபத்தில் உயரமான மேடை அமைத்து அதில் உட்கார்ந்த நிலையில் வாரியார் உடல் வைக்கப்பட்டது. தற்போது இது “திருமுருக கிருபானந்த வாரியார் திருக்கோயில்” ஆகியிருக்கிறது.

காங்கேயநல்லூரில் அவர் வாழ்ந்த வீடு இன்று நினைவில்லமாக்கப்பட்டு இருக்கிறது. இந்திய அரசு இவருடைய உருவம் பொறித்த தபால்தலையை 2006 ஆம் ஆண்டில் வெளியிட்டு சிறப்பு செய்திருக்கிறது.

சிங்கபுரி நடராஐர் சன்னதி பிரகாரத்தில் வடகிழக்கே திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமி திருமேனி நிருவப்பட்டுள்ளது.

 

64 வது நாயன்மார்

அறுபத்து நான்காம் நாயன்மார்  என்றழைக்கப்பட்டவர் திருமுருக கிருபானந்த வாரியார். வாரியாரும் நாயன்மார்களைப் போல் இறைவனிடம் எதையும் வேண்டாத பெரியாராகவேதான் வாழ்ந்தார். மனித வாழ்க்கையில் பிற்காலத்திலும் நினைத்துப் போற்றக்கூடியவர்களாக வாழ்பவர்கள் சிலரே. அந்த மிகச் சிலருள் வாரியார் சுவாமிகளும் ஒருவர் என்பதை நாமும் நினைவில் கொள்வோம்.

-திரு.சக்தி

Next Post

M M.DANDAPANI DESIKAR

Sat Aug 27 , 2022
VSK TN      Tweet    எம்.எம்.தண்டபாணி தேசிகர் (1908 – 1972) “என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா” “காண வேண்டாமோ” “தில்லை என்றொரு தலமிருக்குதாம்” என்ற பாடல்களை கேட்கும்போது நந்தனார் திரைப்படத்தில் நடித்த திரு.எம்.எம்.தண்டபாணி தேசிகர் அவர்களின் நினைவு வரும். பரம்பரை பரம்பரையாக சிவத்தொண்டு புரிந்துவந்த ஓதுவார்கள் குடும்பத்தில் முருகையா தேசிகரின் குமாரர் முத்தையா தேசிகரின் மகனாக எம்.எம்.தண்டபாணி தேசிகர் 1908 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதி நன்னிலம் […]