நம் பாரத நாட்டில் இந்து பஞ்சாங்கம் படி, ஒவ்வொரு ஆண்டும் மார்கசிர்ஷ மாதத்தில் (தென் மாநிலங்களில் கார்த்திகை மாதத்தில்) வரும் சுக்ல பக்ஷம் ஏகாதசி தினத்தன்று அன்று கீதை ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் தான் கிருஷ்ண பகவான் அர்ஜுனனுக்கு கீதா உபதேசத்தை செய்ததாக நம்பப்படுகிறது.
இந்துக்களின் புனித நூலான ஸ்ரீமத் பகவத் கீதை உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரே புத்தகம். இந்த ஆண்டின் கீதை ஜெயந்தி மகோத்சவம் டிசம்பர் 3ம் தேதியான இன்று சர்வதேச அளவில் கொண்டாடப்படுகிறது.
பாரதத்தின் மாபெரும் காவியமான மகாபாரதத்தின் ஒரு சிறிய ஆனால் மிகவும் விவாதிக்கப்பட்ட மற்றும் ஆராய்ச்சி செய்யப்பட்ட பகுதி தான் பகவத் கீதை.
இதில் மனித வாழ்க்கையின் முக்கிய அம்சங்கள் மிக விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன. சுமார் 1,10,000 வசனங்களைக் கொண்ட மகாபாரதம், உலக இதிகாச நூல்களான இலியாட் மற்றும் ஒடிஸியை விட ஏழு மடங்கு பெரியது. பைபிளை விட மூன்று மடங்கு பெரியது.
காவியத்தின் ஆறாவது பாகத்தில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே பெரும் போர் தொடங்குவதற்கு சற்று முன்பு, பகவத் கீதைக்கான கதைக்களம் வருகிறது.
குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் அர்ஜுனனின் தேரோட்டியாக மாறிய பகவான் கிருஷ்ணர், உறவுகளுடன் போர் புரிய அர்ஜூனன் தயங்குவதை கண்டு அவருடைய கர்மாவையும் கடமையையும் உணர்த்தி, வாழ்க்கையின் யதார்த்தத்தை எதிர்கொள்ள செய்தார். அந்த சமயம் அவர் அர்ஜூனனுக்கு கூறிய போதனைகள் தான் பகவத் கீதை.
பகவத் கீதை உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு உத்வேகம் அளிக்கிறது. முதலில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட கீதையில் 700 ஸ்லோகங்கள் உள்ளன. இந்த நூல் இன்றும் மக்களுக்கான சிறந்த வழிகாட்டி புத்தகமாக உள்ளது. சரி மற்றும் தவறுக்கு இடையிலான வேறுபாட்டை எவ்வாறு புரிந்துகொள்வது, வாழ்க்கையை எப்படி சரியாக வாழ்வது போன்றவற்றை கற்று தருகிறது.
பகவத் கீதை இதுவரை 80 க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதன் செல்வாக்கு எல்லைகளை கடந்து பல நாடுகளில் பரவி பல தத்துவ விவாதங்களின் பிரதானமாக மாறியுள்ளது.
உலகெங்கிலும் உள்ள பல பிரபலங்கள் இந்த புத்தகம் தங்கள் வாழ்க்கையை முழுவதுமாக மாற்றியமைத்ததாகக் கூறியுள்ளனர்.
அவர்களில் குறிப்பிட்ட சிலர் பிரபல விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், அன்னி பெசன்ட் அம்மையார், இயற்கை ஆர்வலரான ஹென்றி டேவிட் தோரோ, அணுகுண்டின் தந்தை என்று அழைக்கப்படும் ராபர்ட் ஓபன்ஹைமர், அமெரிக்க ஆன்மீகவாதியான தாமஸ் மெர்டன், பிரபல அமெரிக்க கவிஞரான டி.எஸ் எலியட், அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், ஆஸ்திரிய தத்துவவாதியும் சமூக சீர்திருத்தவாதியுமான ருடால்ஃப் ஸ்டெய்னர், ஆங்கிலேய ஆட்சியின் போது வங்காளத்தின் முதல் கவர்னர் ஜெனரலாக இருந்த வாரன் ஹேஸ்டிங்ஸ், பிரபல ஹாலிவுட் நடிகர் ஹூ ஜேக்மன், பிரபல இசை கலைஞார் பிலிஃப் கிளாஸ் ஆகியோர் கீதையால் ஈர்க்கப்பட்டவர்களின் பட்டியலில் சிலர்.
விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் “நான் பகவத்-கீதையைப் படித்து, கடவுள் இந்த பிரபஞ்சத்தை எவ்வாறு படைத்தார் என்பதைப் பற்றி சிந்திக்கும்போது மற்ற அனைத்தும் மிகவும் மிதமிஞ்சியதாகத் தெரிகிறது” என்று கூறியுள்ளார்.
பகவத் கீதையை மொழிபெயர்த்தவர்களில் அன்னி பெசன்ட் அம்மையாரும் ஒருவர். அவரது பகவத் கீதையின் மொழிபெயர்ப்பு ‘இறைவனின் பாடல்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அவரது புத்தகத்தில் “ஆன்மீக மனிதன் தனிமையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. உலக விவகாரங்களுக்கு மத்தியில் தெய்வீக வாழ்க்கையுடன் ஐக்கியம் அடையலாம். அந்த சங்கத்திற்கான தடைகள் நமக்கு வெளியில் இல்லை, ஆனால் நமக்குள் உள்ளன என்பது பகவத் கீதையின் மையப் பாடம்” என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன.
அமெரிக்க இயற்கை ஆர்வலரும், எழுத்தாளாருமான ஹென்றி டேவிட் தோரோ தனது ‘வால்டன்’ என்ற புத்தகத்தின் பல இடங்களில் பகவத் கீதையை குறிப்பிட்டுள்ளார். புத்தகத்தின் முதல் அத்தியாயத்தில் “கிழக்கின் அனைத்து இடிபாடுகளையும் விட பகவத் கீதை மிகவும் போற்றத்தக்கது” என கூறியுள்ளார்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீரராங்கனை சுனிதா வில்லியம்ஸ் அதிக நேரம் விண்வெளியில் நடந்த பெண் என்ற சாதனையை படைத்தவர். சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அவர் பயணம் மேற்கொண்ட போது தன்னுடன் ஒரு விநாயகர் சிலை மற்றும் பகவத் கீதை புத்தகத்தை விண்வெளிக்கு எடுத்துச் சென்றார்.
19ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆஸ்திரிய தத்துவ ஞானியும், ஆன்மீகவாதியுமான ரூடால்ஃப் ஸ்டெய்னர் “பகவத் கீதை போன்ற உன்னதமான படைப்பை முழு புரிதலுடன் அணுகுவதற்கு, நம் ஆன்மாவை அதனுடன் இணைக்க வேண்டியது அவசியம்” என்று கூறியுள்ளார்.
மேலும் பகவான் கிருஷ்ணர் பற்றி கூறும் போது “தனி மனிதன் தன்னைப் பயிற்றுவித்து, ஞானத்துடன் செயல்படுவதன் மூலம் எந்த அளவுக்கு உயர முடியும் என்பதற்கு உதாரணம் தான் கிருஷ்ணர். பூமிக்குரிய பரிணாம வளர்ச்சியில் கிருஷ்ணரைப் போன்ற தனி மனித ஆன்மா வேறு எவரும் இல்லை” என்று ஸ்டெய்னர் பிரமிப்புடன் தெரிவித்துள்ளார்.
வங்காளத்தின் முதல் கவர்னர் ஜெனரலான வாரன் ஹேஸ்டிங்ஸ் பகவத் கீதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த சார்லஸ் வில்கின்ஸின் முயற்சிக்கு முழு ஆதரவு கொடுத்தார். பின் மொழிபெயர்க்கப்பட்ட பகவத் கீதையின் பிரதியை கிழக்கு இந்திய தலைவருக்கு பரிசாக அளித்தார். அப்போது வாரன் ஹேஸ்டிங்க்ஸ் “உண்மையான பெரும் செயல்திறன், கருத்தாக்கம், பகுத்தறிவு அடங்கிய சொற்பொழிவுகளை கொண்டது. மனிதகுலத்தின் அறியப்பட்ட அனைத்து மதங்களுக்கிடையில் ஒரு விதிவிலக்கு’’ என்று பகவத் கீதை குறித்து கூறியுள்ளார்.
அமெரிக்க இசை கலைஞரான பிலிஃப் கிளாஸ் ஒருமுறை மகாத்மா காந்தியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு, சமஸ்கிருதத்தில் பாடப்பட்ட பகவத் கீதையின் உரையை உள்ளடக்கிய ‘சத்யாகிரகா’ என்ற தலைப்பில் ஒரு இசை கச்சேரியை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய சிறப்பு மிக்க பகவத் கீதையை கிருஷ்ணர் நமக்கு வழங்கிய நாளை தான் பகவத் கீதை ஜெயந்தியாக சர்வதேச அளவில் கொண்டாடி வருகிறோம்.
அதன்படி இந்த வருடம் டிசம்பர் 3ம் தேதி 5,159ம் ஆண்டு ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அந்த நன்னாளில் நாடு முழுவதும் உள்ள கிருஷ்ணர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படும். கிருஷ்ண பக்தர்கள் குருக்ஷேத்திரம் சென்று அங்குள்ள சன்னிஹித் சரோவர் மற்றும் பிரம்ம சரோவரில் புனித நீராடுவார்கள்.
குழந்தைகளுக்கு கீதை படிக்கும் ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதமாக மேடை நாடகம் மற்றும் கீதை பாடும் போட்டிகள் நடத்தப்படும். யோகிகள், துறவிகள் மற்றும் கற்றறிந்த அறிஞர்கள் கீதையின் முக்கியத்துவத்தை பற்றி மக்களுக்கு கூறுவார்கள்.. கீதையின் சாரம் அடங்கிய கடிதங்கள், சிறு புத்தகங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன. இந்த புனித நாளில் கீதையின் இலவச பிரதிகளை விநியோகிப்பது புனிதமான செயலாக கருதப்படுகிறது.
திருமதி.நிரஞ்சனா.