பாரத நாட்டின் விடுதலைக்காக படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரர், மாணவர், இளைஞர் முதியவர் என அனைத்து தரப்பினரும் போராடினர். அப்படி போராடி இன்னுயிர் நீத்த பல்லாயிரக்கணக்கானவர்களின் பெயர்களும் உருவங்களும் கூட நம்நாட்டு பிள்ளைகளின் பாடத்திட்டத்தில் கூட இல்லாமல் போயிற்று என்பது வருந்தத்தக்க உண்மையாகும். இன்றைய பள்ளி அல்லது கல்லூரி மாணவரிடம் சென்று சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயரை கேட்டால் முழி பிதுங்கி நிற்பார்கள். அதே மாணவரிடம் சினிமா நட்சத்திரங்களின் பெயரை கேட்டால் அவர்களது பெயர், ஊர், பிறந்த தேதி, ஏன் ஜாதகம் வரை ஒப்புவிப்பது இன்றைய தமிழகத்தின் இழி நிலை என்பதை மறுக்க இயலாது.
செயற்கரிய செயல்களை செய்து அதற்கான தடயத்தை கூட விட்டுச் செல்லாமல் சென்ற மாவீரர்களின் பட்டியலில் வீர வாஞ்சிநாதனும் அடக்கம்.
அன்றைய திருநெல்வேலி மாவட்டத்தில் செங்கோட்டையில் வாழ்ந்து வந்த ரகுபதி ஐயர் என்ற ஏழை பிராமணரின் மகன் தான் வாஞ்சிநாதன். சிறுவயது முதலே தேசிய இயக்கத்தில் பற்று கொண்டவன் விவேகானந்தரின் வீராவேச பேச்சுகளிலும், போதனைகளும், பாரதியாரின் கவிதைகளிலும் ஆழ்ந்த மோகம் கொண்டவன் வீர சாவர்க்கரின் வீரர்களிலும் வஉசிதம்பரனார், சுப்பிரமணிய சிவா ஆகியோரின் கனல் தெறிக்கும் சொற்பொழிவுகளிலும் மனதை பறி கொடுத்தவன். திருவனந்தபுரம் (பாரஸ்ட் ரேஞ்ச் ) காட்டிலாகா அலுவலகத்தில் சாதாரண எழுத்தர் வேலை பார்த்து வந்த வாஞ்சிநாதன். பாரத மாதா சங்கம் என்ற ஒரு சங்கத்தை அமைத்து பல இளைஞர்களை சேர்த்து இரவும் பகலும் தேசபக்தி ஊட்டியும் பத்திரிக்கைகளையும், தேசத்தலைவர்களின் வசனங்களையும் படித்துக் காட்டுவதையே வேலையாக கொண்டிருந்தான்.
1908 ஆவது ஆண்டில் நடந்த திருநெல்வேலி கலவரத்தின்போது துணை கலெக்டர் ஆஷ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பல இளைஞர்கள் மரணமடைந்ததையும் தியாகத் தலைவர்கள் சிதம்பரனார் மற்றும் சுப்பிரமணிய சிவாவையும் கைது செய்ததையும் மேலும் அவர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்க காரணகர்த்தாவாக இருந்த ஆஷ் மீது ஆறாத சினமும் பகைமையும் கொண்டான்.
கண்ணனூர் கோவை சிறைகளில் சிதம்பரனார் கல்உடைத்ததையும், செக்கிழுத்ததையும் பத்திரிகைகளில் படித்த வாஞ்சிநாதன் ஆஷை சுட்டுப் பொசுக்கி ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு பாடம் புகட்ட வேண்டும் என்று முடிவு செய்தார்.
1911 ஜனவரி 9ஆம் தேதி பாண்டிச்சேரிக்கு புறப்பட்டுச் சென்ற வாஞ்சிநாதன் அங்கு பாரதியாருடன் தஞ்சம் ஆனார். வவேசு ஐயர் பல நாட்டு புரட்சி வீரர்களைப் பற்றியும் புரட்சி இயக்கங்கள் பற்றியும் வாஞ்சிநாதனுக்கு விளக்கினார். வாஞ்சிநாதனின் லட்சியத்தை நிறைவேற்றும் வழிமுறைகளை போதித்தார்.
பின் செங்கோட்டை சென்ற வாஞ்சிநாதன் தன் இளம் மனைவி பொன்னம்மாள் இடம் சில சாக்கு போக்குகளை சொல்லிவிட்டு தான் பார்த்து வந்த எழுத்தர் வேலைக்கு மூன்று மாதம் விடுப்பும் போட்டுவிட்டு திருமணம் ஆகி ஓரிரு ஆண்டுகளே ஆன தன் மனைவியை தகப்பனார் வீட்டுக்கு அனுப்பிவிட்டு பாண்டிச்சேரிக்கு புறப்பட்டார்.
அங்கு அவருக்கு பாரதியார் மூலம் தேசபக்தி பாடல்களும் வவேசு ஐயர் மூலம் ஆயுதப் பயிற்சியும் அளிக்கப்பட்டது.
1911 மே மாத இறுதியில் பாண்டிச்சேரியிலிருந்து துப்பாக்கி, மற்றும் துண்டுபிரசுரங்கள் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு வாஞ்சிநாதன் திருநெல்வேலிக்குப் புறப்பட்டார். 1908ஆம் ஆண்டு வஉசி, சுப்பிரமணிய சிவா ஆகியோரை கைது செய்து வழக்குப் போட காரணகர்த்தாவாக விளங்கிய ஆஷ் முதலில் துணை கலெக்டராக இருந்தார் 1909 ஆவது ஆண்டில் கலெக்டர் வின்ச் ஓய்வு பெற்றதும் 1910இல் ஆஷ் நெல்லை கலெக்டராக நியமிக்கப்பட்டார்.
1911 ஜூன் 17 தேதியன்று கலெக்டர் ஆஷ் கோடை வெயிலுக்கு இதம்தேடி கொடைக்கானலுக்கு தன் மனைவியோடு செல்வதற்காக திருநெல்வேலி சந்திப்பில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டார்.
10.45 மணிக்கு மணியாச்சி ரயில் நிலையம் வந்தடைந்தார். அங்கு
காக்கி மேல் சட்டையும், கால் சட்டையும் அணிந்து இருந்த வாஞ்சிநாதன் கொடைக்கானல் ரயிலில் ஏறி கலெக்டர் ஆஷ் அமர்ந்திருந்த முதல் வகுப்புப் பெட்டியில் மின்னலென பாய்ந்தார்.
கையில் மின்னிக் கொண்டிருந்த பிரவுனிங் பிஸ்டலின் கடும் விசையை தட்டிவிட்டு கலெக்டர் ஆஷ் மார்பை குறி வைத்து 3 முறை சுட்டார் வாஞ்சிநாதன்.
கலெக்டர் ஆஷ் பிணம் ஆகிவிட்டான் இனிமேல் பிழைக்கவே மாட்டான் என்பது உறுதியாக தெரிந்த பின்னரே வாஞ்சிநாதன் அந்த ரயில் பெட்டியை விட்டு இறங்கி பக்கத்து கழிவறையில் புகுந்தார். அடுத்த சில விநாடிகளுக்குள் கழிப்பறையில் இருந்து இரண்டு குண்டுகள் வெடித்த சத்தம் கேட்டது. தன் முகம் கூட தெரியாத வகையில் வாயினில் துப்பாக்கியை வைத்து சுட்டதால் தலை தெறித்து மடிந்தார் வீர வாஞ்சிநாதன்.
அந்த கழிப்பறைக்குள் நுழைய அடுத்த ஒரு மணி நேரத்திற்கு எந்த போலீஸ்காரருக்கும் தைரியம் பிறக்கவில்லை.
திருமதி ஆஷ் தனது வாக்குமூலத்தில் வாஞ்சிநாதனை பற்றி கூறும் பொழுது “அவனது கண்கள் சினம் ஏறிய சிறுத்தையின் விழிகளைப் போல சிவந்து இரண்டு செர்ரி பழங்களை மின்னின” என்று குறிப்பிட்டார்.
வாஞ்சிநாதனின் சட்டைப் பையில் அவர் கைப்பட எழுதிய ஒரு கடிதமும் மேடம் காமாவின் வந்தே மாதரம் பத்திரிகையிலிருந்து கிழித்து எடுக்கப்பட்ட ஒரு பக்கமும் இருந்தது.
கடிதத்தில் ஆஷை சுட்டது ஏன்? என்பதை வாஞ்சிநாதன் விளக்கியிருந்தார்.
“அசோகச் சக்கரவர்த்தி முடிசூடி அரசோச்சிய பாரத மண்ணில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னன் முடிசூட்டு விழா நடத்துவதற்காக வரை இருக்கும் இந்த வேளையில் அவரது ஆட்சியின் சின்னமான நெல்லை மாவட்ட ஆட்சியாளர் கொடுங்கோலன் ஆஷை சுட்டுப் பொசுக்கி பிணம் ஆக்குகிறேன் புண்ணிய பாரத பூமியில் அடிமைப்படுத்தி ஆள என்னும் இவர்களுக்கு என்ன கதி ஏற்படும் என்பதை உணர்த்தவே நான் சுட்டேன்.
பாரத அன்னைக்கு என் எளிய காணிக்கையாக என் உயிரையும் அர்ப்பணிக்கிறேன். இதற்கு நானே முழுப்பொறுப்பு.
இந்தியாவில் முடிசூட்டு விழா நடத்த இருக்கும் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரை இந்த மண்ணில் கால் வைத்ததும் நரகத்திற்கு அனுப்புவதற்காக 3000 வீரர்கள் காளி மாதாவின் முன்பு சபதம் எடுத்து ரத்தச் சத்தியம் செய்துள்ளனர்.
அவர்களில் மிகவும் சிறியவனான, மிகவும் எளியவனான நான் அந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் நடமாடும் சின்னமாக திகழ்ந்தவனும் எங்கள் தலைவர் சிதம்பரனாரின் சுதேசி கப்பல் கம்பெனியை நிர்மூலப் படுத்தி அழித்தவனும், எண்ணரும் தேசபக்தர்களை வெஞ்சிறையில் பூட்டி, வேதனையில் மாட்டி, செக்கிழுத்து சிந்தை நோக செய்த செருக்கணும், அரக்கனும் ஆன கலெக்டர் ஆஷை சுட்டுப் பொசுக்கவும் அதன்மூலம் முடிசூட்டிக் கொள்ள முகமலர்ச்சியோடு வர இருக்கும் ஆங்கிலேய மன்னனுக்கு இந்திய மக்களின் சார்பில் நான் விடுக்கும் முதல் எச்சரிக்கை தான் இந்தச் செயல்”
என்று வாஞ்சிநாதன் விவரித்திருக்கிறார்.
ஆஷ் சுடப்பட்ட உடன் ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதன் ஆல் பறக்கவிடப்பட்ட துண்டு நோட்டீஸ் போலீஸ் தரப்பினரால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது அதில் குறிப்பிட்டிருந்த செய்தி வருமாறு :
“ஆரியர்களுக்கு ஒரு வார்த்தை:
அன்னிய மிலேச்சர் களுக்கு அடிமைப்பட்டு அவரது ஆட்சியின் கீழ் அவதியும் அவமானமும் பட்டுக் கொண்டிருக்கும் நம் புனிதமான தாயகத்தை மீட்போம் என்று கடவுளின் முன்னால் சத்தியம் செய்து உறுதி எடுத்துக்கொள்ளுங்கள்.
மிலேச்சரின் ஆட்சியை நமது புண்ணிய பாரத பூமியில் அனுமதிக்கிற வரை சகித்துக் கொள்கிற காலம் வரை நாம் உயிரோடு இருப்பதில் அர்த்தமில்லை. உயிர் இருந்தும் பிணங்கள் போல வாழும் நடைப்பிண வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா?.
ஆகவே வெள்ளைப் பரங்கியரை பார்க்கும் இடத்திலெல்லாம் வெறி நாயை அடிப்பது போல கத்தியோ, கல்லோ, கம்போ, வேறு எதுவோ கையில் கிடைத்ததைக் கொண்டு அடித்துக் கொல்லுங்கள்.
ஆயுதம் எதுவும் கிடைக்காத இடமாக இருந்தால் கடவுள் கொடுத்த கைகளாலேயே அவர்களை கொன்று தீருங்கள்.
என்று எழுதப்பட்டிருந்தது.
வீர வாஞ்சிநாதனின் மனைவி பொன்னம்மாள் இறுதிவரை அனாதையாய் ஆட்சியாளர்களிடம் யாசகம் வாங்கி சாப்பிடுவது வாஞ்சியின் மனைவிக்கு கேவலம் என்று நினைத்தோ என்னவோ பென்சன் கூட வாங்காமல் இறந்து போனார்.
வீர வாஞ்சிநாதனின் வாழ்க்கை ஒரு தியாக வரலாறாகும். துரதிஷ்டம் என்னவென்றால் நாம் சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்காக மடிந்துபோன எண்ணிலடங்கா வீர வாஞ்சிநாதர்களின் வீர வரலாறுகள் நமக்கு பாடப்புத்தகங்களில் கூட கற்றுக் கொடுக்கப்படவில்லை.
அந்நிய நாட்டு தலைவர்களை கொண்டாடத் தெரிந்த நம் தமிழக பிள்ளைகளுக்கு இறக்குமதி செய்யப்பட்ட தலைவர்கள் தேவை இல்லை.
நமது ஊரில் பிறந்து உலகமே மெச்சும் வகையில் வாழ்ந்த நம்மவர்களின் வீர தீர வரலாற்றை கற்றுக் கொடுப்போம்.
மொழியால், ஜாதியால், மாநிலத்தில் பிரிவினை பேசி பிரிந்தது போதும்.
சாதித்த தலைவர்களை ஜாதிக்குள் அடக்காமல் நமது சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்து புது வரலாறு படைப்போம் நம் முன்னோர்களின் ஆசி நம்மை வழிநடத்தும்.
ஜெய்ஹிந்த்.
லி.முத்து ராமலிங்கம்
மாநில அமைப்பாளர்,
ABVP தென் தமிழகம்.