பஞ்சாமிர்தம் – 2024 மே 7

VSK TN
    
 
     

பஞ்சாமிர்தம்

இன்று (2024 மே 7) அமாவாசை. எனவே இதோ பஞ்சாமிர்தம்

1.வெப்பத்தில் ‘உருகிய தளிர்கள்’

செங்கல்பட்டு பேருந்து நிலையம் அருகே சாலையோரத்தில் சிறு வியாபாரம் செய்யும்  வியாபாரிகளுக்கு, கோடை வெப்பத்தை சமாளிக்கும் பொருட்டு, 30 க்கு 8 அளவு கொண்ட பெரிய குடையை செங்கல்பட்டு விவேகானந்தா வித்யாலயாவை  சேர்ந்த 4 ஆசிரியர்களும் 4 மாணவ மாணவிகளும் இணைந்து வழங்கினார்கள். குடைகளை  பெற்றுக் கொண்ட  வியாபாரிகள்  20 பேரும் மிகவும் மகிழ்ச்சியடைந்து, மாணவச் செல்வங்களுக்கு ஆசி வழங்கினார்கள்.

ஆதாரம்: விஜயபாரதம்

2 ஊர் ஒன்றுபட்டது, உதயமானது பூரண மதுவிலக்கு

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மீசல் கிராமத்தில் 300 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கே மது அருந்துபவர்கள், போதை பொருள் பயன்படுத்துபவர்களால் அவ்வப்போது சில சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட்டன. பெண்களும் குழந்தைகளும் அச்சத்தில் இருந்தனர். கிராம மக்கள் ஒன்று கூடி, “ஊருக்குள் மது அருந்துவதற்கும் போதைப் பொருட்களை பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்படுகிறது. மீறி செயல்பட்டால் போலீசில் புகார் அளிக்கப்படும்” என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள். இது தொடர்பாக மீசல் பஸ் ஸ்டாப் அருகே அறிவிப்புப் பலகையும் வைக்கப்பட்டது. “போதைப் பொருட்களை ஊருக்குள் விற்பனை செய்யக்கூடாது, மீசல் கிராமத்தின் வழியாக செல்பவர்கள் மது அருந்தினால் கூட நடவடிக்கை எடுக்கப்படும். இதை கடைபிடிக்க தவறினால் போலீசில் புகார் அளிப்போம்” என அந்த ஊர் மக்கள் சொல்கிறார்கள். மதுவுக்கும் போதைக்கும் தடைவிதித்து மீசல் கிராமத்தினர் கடந்த ஆறு மாத காலமாக பின்பற்றி வருவது மற்ற ஊர்களுக்கும் முன்னுதாரணமாக உள்ளது. அரசு அதிகாரிகளும் மீசல் கிராமத்தினரை பாராட்டி வருகிறார்கள். தீர்மானத்தை கடைபிடித்ததால் இந்த ஊரில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அந்த கிராமத்துப் பெண்கள் நிம்மதியாக உள்ளனர்.

ஆதாரம்: டெய்லிஹண்ட் ABP NADU

3 இதுதான் சனாதன தர்மம்

டாக்டர் அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்தபோது ஜகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் (காஞ்சி சங்கராச்சாரியார்) ராஷ்டிரபதி பவனுக்கு வருகை புரிந்த போது நடந்த சம்பவம்:

“ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம், துறவிக்கு (ஜகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி) உரிய மரியாதை செய்ய விரும்பியதால், அவர் என்னை தனது அலுவலகத்திற்கு அழைத்து, ராஷ்ட்ரபதி பவனின் பாரம்பரிய நெறிமுறைகள் பற்றி என்னிடம் கேட்டார். நான் அவரிடம், ” ஸ்வாமிகளை நான் ராஷ்டிரபதி பவனின் வாசலில் வரவேற்று உள்ளே அழைத்து வருகிறேன்” என்று சொன்னேன். சில நிமிட ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு, அவர் என்னிடம் கேட்டார்: “ஸ்வாமிகளை நான் வரவேற்றால் என்ன நடக்கும்?’ நான் சொன்னேன், “ஐயா, அது ஜனாதிபதியை விட துறவி மேல் என்று ஆகும்” என்றேன். அவர் சிரித்தார். ஆனால் எதுவும் சொல்லவில்லை. பின்னர் அலுவலகத்திற்குள் சென்றோம். “ஐயா, நான் அவரை இங்கே அழைத்து வருகிறேன், இந்த வருகையாளர் சோபாவில் அவரது புலித்தோல் இருக்கையை வைத்து, அவரை அமருமாறு கேட்டுக்கொள்கிறேன். ஜனாதிபதி தனது வழக்கமான சோபா நாற்காலியில் அமர்ந்திருப்பார்.” அவர் இரண்டாவது முறையாக என்னிடம் கேட்டார்: “நான் அவரை என் சோபா நாற்காலியில் அமர வைத்தால் என்ன நடக்கும்?” நான் பதிலளித்தேன்: “ஐயா, தேசத்தின் அதிபரை விட துறவிக்கு அதிக மரியாதை வழங்குவதாய் ஆகும்”. மீண்டும் அவர் சிரித்தார், எனக்கு எந்த கட்டளையும் இடவில்லை. முப்பது நிமிடங்களுக்குப் பிறகு, ஸ்வாமிகள் வரவிருந்த வேளை; எனக்கு ஒரே ஆச்சரியம், வாயிலில் டாக்டர் அப்துல் கலாம் மாலையுடன் எனக்குப் பின்னால் வந்து நிற்பதைக் கண்டேன். நான் உடனடியாக அவர் பின்புறம் சென்று நின்றேன். நாங்கள் ஸ்வாமிகளை வரவேற்று, ராஷ்டிரபதி பவனின் வரவேற்பறை வழியாகச் சென்றோம். நாங்கள் முன்பு விவாதித்தபடி ஜனாதிபதி அறையில் ஸ்வாமிகளின் இருக்கையை (புலித்தோலை) வருகையாளர் சோபாவில் விரித்தேன். அதை ஜனாதிபதியின் இருக்கையில் விரிக்குமாறு டாக்டர் அப்துல் கலாம் என்னைப் பணித்தார். அவரின் இந்த எளிய, அடக்கமான சமிக்ஞையால் நான் அதிர்ச்சியடைந்தேன். அவரோ சிரித்துக்கொண்டே, “பாரத ஜனாதிபதியின் இருக்கை, துறவியின் ஆன்மீக சக்தியால் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்பதற்காக, பின்னர் இங்கு அமரும் எவரும் ஸ்வாமிகளின் ஆசீர்வாதத்தைப் பெற வேண்டும் என்பதற்காக” என்று கூறினார். என் ஆன்மிக குரு கலாமின் வார்த்தைகளை நான் வெகுவாக ரசித்து, “ஐயா, நீங்கள் ஒரு சிறந்த விஞ்ஞானி மட்டுமல்ல, ஒரு துறவியும் கூட” என்றேன். வழக்கம் போல் அர்த்தமுள்ள புன்னகை சிந்தினார் கலாம் அவர்கள்”.

உபயம்: லெப்டினன்ட் கர்னல் அசோக் கினி, SM, VSM (குடியரசுத் தலைவர் பாரத ரத்னா டாக்டர் ஏபிஜே. அப்துல் கலாமின் ஏடிசி).

நன்றி: டாக்டர் பிரேமா லட்சுமிநாராயணா @GEEMS71 அவர்களின்  X (ட்விட்டர்) பதிவு; 2024 மே 4.

4. மோகினி விற்பது பழம், காப்பது தேசம்

ஏப்ரல் 29 அன்று  அதிகாலையில் கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டம் சிர்சி வந்த பிரதமர் மோடி, அங்கோலா நகர பேருந்து நிலையத்தில் பழங்கள் விற்கும் மோகினி கவுடாவை சந்தித்தார். தூய்மை பாரதம் (ஸ்வச் பாரத்) திட்டத்திற்காக மோகினி செய்து வரும் நல்ல பணிகளை தெரிந்து கொண்டு அவரைப் பாராட்டினார். மோகினி கவுடா இலைகளில் சுற்றப்பட்ட பழங்களை விற்கிறார். பழங்களைச் சாப்பிட்டுவிட்டு இலைகளை யாராவது வீதியில் எறிந்தால், அவர் அவற்றை எடுத்து குப்பைத் தொட்டியில் சேர்க்கிறார். இந்த குணத்தால் ஊரில் தனக்கென ஒரு தனி அடையாளம் ஏற்படுத்திக் கொண்டவர் அவர். பிரதமர் சந்திப்பும் பாராட்டும் மோகினி அம்மையாரின் பணியை உலகறியச் செய்ய சமூக ஊடகம் உதவியது. “பிரதமர் மோடியின் ஸ்வச் பாரத் இயக்கத்திற்கு மக்கள் பங்களிக்கும் இதுபோன்ற எடுத்துக்காட்டுகள் மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும்” என்று X (ட்விட்டரில்) ஒரு பதிவர் எழுதினார்.

ஆதாரம்: இணையதளம் Mangalorean.com”

5. விவேகானந்தர் வழிகாட்டுதலில் இவர் ஐ.ஏ.எஸ்

திருப்பூர் இடுவம்பாளைம் பகுதியைச் சேர்ந்த தாரணி, UPSC தேர்வில் தேசிய அளவில் 250வது இடத்தைப் பெற்று ஐ.ஏ.எஸ் ஆகியுள்ளார். பல் மருத்துவப் படிப்பு முடித்த தாரணி, ஆறு மாத மருத்துவப் பணிக்கு பிறகு, 4 ஆண்டுகளாக யு.பி.எஸ்.சி .தேர்வுக்கு ஆயத்தம் செய்தார் (தாய் பள்ளி ஆசிரியை, தந்தைக்கு துணிக்கடை வியாபாரம்). தன் தங்கை நீட் தேர்வுக்கு ஆறு மாதம் தயார் செய்து வெற்றி பெற்று மருத்துவக் கல்லூரியில் சேர்ந்ததைப் பார்த்து தனக்கு ஐ.ஏ.எஸ் ஆர்வம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கிறார் தாரணி. “ஐ ஏ எஸ் அதிகாரிகள் பலர் வழிகாட்டுதல் கிடைத்தது. “ஒரு ஐடியாவை எடுத்துக் கொண்டு அதை உன் வாழ்க்கையின் நோக்கமாக உருவாக்கிக் கொள் என்ற சுவாமி விவேகானந்தரின் அருள் மொழி தான் எனக்கு என்றும் வழிகாட்டுதல்” என்கிறார்.

ஆதாரம்: Etv Bharat

Next Post

पंचाम्रित - 2024 मई 7

Tue May 7 , 2024
VSK TN      Tweet    ।। पंचाम्रित ।। (संस्कृत में पंच का अर्थ पाँच होता है। अम्रित अच्छी है) आज (2024 मई 7) अमावास्या है और आपके समक्ष ‘पंचाम्रित’! 1. गर्मी में पिघल गए ‘अंकुर’। विवेकानंद विद्यालय, चेंगलपट्टू के 4 शिक्षकों और 4 छात्र-छात्राओं ने गर्मी से निपटने के लिए चेंगलपट्टू बस स्टैंड के […]