VIPULANANDHAR – TAMILNADU’S VIVEKANANDHAR

VSK TN
    
 
     

ஸ்வாமி விபுலானந்தர்

எம் ஆர் ஜம்புநாதன்

தமிழகத்தின் சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்   1933ம் ஆண்டில் ஒரு நாள். அன்று வளாகமே விழாக் கோலம் பூண்டிருந்தது. காரணம், பட்டமளிப்பு விழாவிற்கு  தலைமை ஏற்று நடத்த மெட்ராஸ் பிரசிடென்சியின் பிரிட்டிஷ் ஆளுநர் ஜார்ஜ் பிரெட்ரிக் ஸ்டான்லி வருகை புரிகிறார். சுதந்திரப் போராட்டக் கனல் வீசிக் கொண்டிருந்த நேரம். பல்கலைக்கழகத்தின் உள்ளேயும் விடுதலை உணர்வு மேலோங்கியிருந்தது. ஆளுநரை வரவேற்க காத்திருந்தவர்கள் திடுக்கிடும் வகையில், அலுவலர் குடியிருப்பில் தமிழ்த் துறை பேராசிரியர் வீட்டின் மேலே இந்திய தேசிய காங்கிரஸ் கொடி ஏற்றப் பட்டிருந்தது.

அதன் விளைவு என்னவாகியிருக்கும் என்று சொல்ல வேண்டுமா என்ன? கொடியேற்றிய அந்த பேராசிரியர் பெருமகனாரே கவலைப் படவில்லை. அவர் தான் ‘நாமார்க்கும் குடியல்லோம், நமனையும் அஞ்சோம் ‘ என்று மன உறுதியுடன் பற்றற்று வாழும் துறவி ஆயிற்றே!

நிபந்தனைக்குப் பின்னே நின்றது சேவை உள்ளம்

அவர் அந்த பல்கலைக்கழக பணியில் சேர்ந்த விதமே தனிச் சிறப்பானது. அவர் அந்த பணிக்கு மனுப் போடவில்லை. அவருடைய திறமைகளை, சாதனைகளை அறிந்த அண்ணாமலை பல்கலைக்கழகத்தை நிறுவிய ராஜா அண்ணாமலை செட்டியார் விரும்பி இந்த துறவிக்கு தமிழ்த் துறை பொறுப்பை  அளித்தார். ஏற்றுக் கொள்ளும் முன் இரண்டு நிபந்தனைகளை முன் வைத்தார். அவை என்ன? முதலாவது,  காலை 10 மணி முதல் 5 மணி வரை போன்ற கால கட்டுப்பாடுகளுக்குள் தன்னை சிறைப்படுத்தக் கூடாது.  இரண்டாவது, துணைவேந்தர் ஊதியத்தை விட தனக்கு ஒரு  ரூபாய் அதிகம் வழங்கப்பட வேண்டும். அண்ணாமலை செட்டியார் ஒரு நாள் மட்டுமே எடுத்துக் கொண்டார் ஒப்புக் கொள்ள. செட்டியார் அந்த துறவியை- பேராசிரியரை மிகவும் மதித்தாலும், மற்ற பொறுப்பாளர்களுக்கும் சகாக்களுக்கும் ‘ இவர் என்ன சந்நியாசி போல காவி உடை தரித்திருக்கிறார், ஆனால் பணத்தின் மீது இத்தனை ஆசை இவருக்கு இருக்கிறதே ‘ என்று நேரிலும் முதுகுக்குப் பின்னும் பேசினார்கள். ஆனால், ஸ்வாமிஜி ஒரு சிறிய புன்முறுவலுடன் கடந்து போய் விடுவார். (194) அவர் நேரக் கட்டுப்பாட்டு கூடாது என்று சொல்லிவிட்டு தாமதமாக வந்து அரைகுறையாக பணி செய்து விட்டு சொந்த வேலைக்காக பாதி நாளில் வீட்டிற்கு சென்று விடும் சாமானிய ஆசிரியராகவா செயல் பட்டார். நேர்மாறாக, காலையில் சீக்கிரம் தன் துறை அலுவலக அறைகளை கைப்பட சுத்தம் செய்வார். அங்குள்ள செடிகளைப் பராமரிப்பதில் – நீர் பாய்ச்சுவதில் ஈடுபடுவார். அன்றைக்குத் தான் எடுக்க வேண்டிய பாடங்களுக்கு தயார் படுத்திக் கொள்ளுவார். முதல் நபராக அலுவலகத்தில் வருவார். இறுதி நபராக வீட்டிற்கு கிளம்புவார். அந்த காலகட்டத்தில், தமிழ் தாத்தா உ வே சாவுடன் மிகுந்த அன்பும் மதிப்பும் கொண்டிருந்தார்.

இவை எல்லாம் சரி, எதற்கு  துணைவேந்தரை விட கூடுதல் ஊதியம் கேட்டார்? மாலை வேளைகளில், அருகில் இருந்த ஏழைகள் வாழும் குடிசைப் பகுதிகளுக்கு சென்று சிறுவர்- சிறுமியர்களுக்கு இலவசமாக கல்வி கற்றுக் கொடுப்பார். கூடவே பக்தி பாடல்களையும் கதைகளையும் விளக்கிச் சொல்லுவார். அப்படி கல்வியைக் கொடுபதில் அவர் ஒரு தந்தை. போகும் பொது வெறும் கையுடன் போக மாட்டார். இரண்டு பெரிய பைகள் முழுவதும் அவல். பொரி,  கடலை, பிஸ்கட்டுகள் , பழங்கள் போன்ற தின்பண்டங்களைக் கொடுத்து குழந்தைகள் பசியுடன் இருக்கக் கூடாது என்பதில் அக்கறை காட்டுவதில் தாயாகவும் இருந்தார். அப்படி அவர் சேவைப் பணிகளுக்காக குடிசைப் பகுதிகளுக்கு போகையில், பல முறை அவருடன் அவரது அண்டை வீட்டுக் குழந்தைகளும் மாணவர்களும் உடன் செல்வதுண்டு. அப்படி உயர்ந்த வசதியில் வாழ்ந்த ஒரு சில மாணவர்களின் பெற்றோர்களுக்கு இவையெல்லாம் பிடிக்கவில்லை. அவர்களில் ஒரு மாணவனின் தாய் அவர் மீது சாணியைக் கரைத்து ஊற்றினாள். மேலும் சில புண்ணியவான்கள் அவர் வீட்டிற்கு குடிநீர் விநியோகத்தைத் தடுத்தனர். அவர் இதையெல்லாம் கண்டு சிறிதும் அலட்டிக் கொள்ளவில்லை. அருகிலிருந்த குளத்தின் உப்பு நீரைக் காய்ச்சிப் பயன்படுத்தினார். இவற்றை எல்லாம் நேரில் கண்டு பின்னாளில் பதிவு செய்தார் அரங்கநாதன் என்ற ஒரு மாணவர் . அந்த மாணவன்தான் பின்னர் துறவியாகி  கந்தசாமித் தம்பிரான், அருணாசல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் போன்ற தீட்சா நாமங்களால் அழைக்கப் பெற்ற குன்றக்குடி அடிகளார்.

ஆஹா, எத்தனை பொருத்தம்!

இந்த விதமாக, தேசிய சிந்தனை, ஆன்மீக நாட்டம், தமிழ்ப் பணி, சமுதாயத் தொண்டு என்று கணம்தோறும் தன் புலமைகளையும் திறமைகளையும் பிறர் நலனுக்கே என்று வாழ்ந்து வழிகாட்டியவர் தான் ஸ்வாமி விபுலானந்தர், விபுலம் என்றால் விசாலம், உயர்வு, உன்னதமான என பல பொருள் சமஸ்கிருத அகராதியில் காணலாம். விசாலமான அறிவும் இதயமும், குணத்தில் உயர்ந்த சிகரம், ஏற்றுக் கொண்ட துறைகளில் எல்லாம் உன்னதம் என்று வாழ்ந்த அவருக்கு விபுலானந்தர் என்ற நாமகரணம் சூட்டிய ஸ்வாமி சர்வானந்தரை என்ன சொல்லி பாராட்ட!

வாழ்க்கை வரலாறு

விபுலானந்தரின் இயற்பெயர் மயில்வாகனன். 27 மார்ச் 1892 அன்று சாமித்தம்பி- கண்ணம்மா தம்பதியின் மகனாக இலங்கையின் காரைதீவில் (அன்றைய மட்டக்களப்பு- இன்றைய அம்பாறை மாவட்டம்) பிறந்தார். சைவ நெறியில் தோய்ந்த குடும்பம். இயற்கையாகவே ஆழ்ந்த இறை நம்பிக்கை, நன்னடத்தை, கல்வியில் ஆர்வம் மிக்கவராய் இருந்தார். பள்ளிப் படிப்பு முதல் லண்டன் பல்கலைக் கழகத்தில் அறிவியலில் இளம்கலைப் பட்டம் வரை அனைத்திலும் உயர் மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர்களின் அன்புக்குச் சொந்தக்காரர் ஆனார். மதுரை தமிழ் சங்கத்தின் தமிழ் பண்டிதர் பட்டம் பெற்ற முதல் இலங்கை வாழ் தமிழர் என்ற சிறப்பு இவருக்கு உண்டு. தமிழும் ஆங்கிலமும் அன்றி சிங்களம், சமஸ்கிருதம், கிரேக்க, லத்தீன் மொழிகளும் அவருக்கு அத்துப்படி.

 

இயல் என்று எடுத்துக் கொண்டால் பன்மொழிப் புலமை காரணமாய் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளை நமக்கு தமிழில் கொடுத்த வள்ளல் அவர். குறிப்பாக ஸ்வாமி விவேகானந்தரின் உரைகள், ரவீந்திரநாத் தாகூரின் கவிதைகள் போன்றவை சிறப்பானவை. அதே போல சங்க இலக்கிய பாடல்கள், பண்டிதமணி கதிரேசன் செட்டியாரின் பயணக் கட்டுரைகளை ஆங்கிலத்திலும் கொண்டு சேர்த்தார்.

கவிதைகளில் நாட்டம் உண்டு. பல கவிதைகளைப் புனைந்தவர்.

இசைத் துறையில் வீணை, யாழ், வயலின் போன்ற  தந்திக் கருவிகளை அறிவியல் பூர்வமாக- கணித -இயற்பியல் துணைகொண்டு  ஆய்வு செய்து யாழ் நூல் என்ற நூலை வெளியிட்டார். இந்த நூலை மேற்கோள் காட்டி இசை வல்லுநர்கள்-ஆய்வாளர்கள் பல மேடைகளில் இன்றளவும் சங்கீத சீசன்களில் பேசக் கேட்கலாம்.

தெருக்கூத்து வடிவத்திலிருந்து நவீன மேடை நாடக தோன்றுவதற்கு இவரும் ஒரு முக்கிய காரணமானவர். கிரேக்க – ஆங்கில- சம்ஸ்கிருத ஞானம் கைகொடுத்த வகையில் ஷேக்ஸ்பியரின் 12 நாடகங்களை மதங்க சூளாமணி என்ற பெயரில் நூலாக வெளியிட்டார். அதனை ஒரு பாட நூல் என்று இலக்கிய விமர்சகர்களும் கொண்டாடுகின்றனர்.

இப்படியாக,  இயல்- இசை – நாடகம் மூன்றிலும் சிறந்து விளங்கியதால் இவர்  முத்தமிழ் வித்தகர் என்று தமிழ் அறிஞர்களால் அன்புடன் அழைக்கப் பெற்றார். (இந்த கௌரவம் எல்லாம் அரசியல் -பதவி – பணத்தினால் வந்த ஒன்று அல்ல என்பதைக் கவனிக்க வேண்டும்).

 

ஆன்மீக அருளாளர்

மயில்வாகனன் என்ற இளைஞன் ஸ்வாமி விபுலானந்தராக மலர்ந்ததற்கு காரணம் ராமகிருஷ்ணா இயக்கமே ஆகும். குடும்பச் சூழலால் ஏற்பட்ட இறை நாட்டமும் சுப்பிரமணிய பாரதியின் எழுத்துக்களால் தோன்றிய தேச பக்தியும் சமுதாயத் தொண்டு ஆர்வமும் அவரை ஸ்வாமி விவேகானந்தரிடம் இட்டுச் சென்றன. விவேகானந்தரின் எழுத்துக்களைப் படிக்க படிக்க அவருக்கு மனதில் தன் எதிர்காலத்தைப் பற்றி பனிக்கால காலை போன்று அரைகுறையாக ஒரு கருத்து தோன்ற உருவாகியது.  நல்வாய்ப்பாக 1916ம் வருடம் சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடத்தின் தலைவர் ஸ்வாமி சர்வானந்தர், இலங்கை கொழும்புவிற்கு விஜயம் செய்தார். அப்பொழுது அவரைச் சென்று தரிசித்தார் மயில்வாகனன். அடுத்த ஆண்டும் ஸ்வாமிஜி யாழ்ப்பாணத்திற்கு வருகை புரிந்தபோது மயில்வாகனன் இனி என் எதிர்காலமே இந்த இயக்கத்துடன் தான் என்று முடிவு செய்து உடனடியாக சென்னை மயிலை மடத்துக்கு வந்து ஸ்வாமிஜியை வணங்கி தன சந்நியாசிய ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.

சென்னையிலும் பேலூர் தலைமையிடத்திலும் அவருக்கு பயிற்சி முடிந்து 1924ல்  ஸ்வாமி சர்வானந்தரால் விபுலானந்தர் என்ற துறவு வாழ்விற்கான திருநாமம் அளிக்கப்பட்டது. (அந்தப் பெயரை அளித்தவர் ராமகிருஷ்ணரின் நேரடி சீடரான ஸ்வாமி சாரதானந்தா என்றும் ஒரு தகவல் உண்டு). ராமகிருஷ்ணா இயக்கத்தின் கல்விப் பணிகளுக்காக தன்னை முற்றிலுமாக ஒப்படைத்துக் கொண்டார். தமிழகத்திலும் இலங்கையிலும் பல கிளைகளில் இவரது கல்வித் தொண்டு தொடர்ந்தது.

1925 முதல் இலங்கையின் பள்ளிக் கல்வி நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்று திறம்பட செயலாற்றுகிறார். யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு உள்ளிட்ட நகரங்களிலும் பல சிற்றூர்களிலும் கிராமங்களிலும்  என்று மெல்ல விரிவடையக் காரணமாகிறார் ஸ்வாமிஜி. இரண்டு உண்டு-உறைவிடப் பள்ளிகள் – முதலில்  யாழ்ப்பாணத்தில் சிறுவர்களுக்காக வைத்தீஸ்வர வித்யாலயமும் இரண்டாவதாக மட்டக்களப்பில் சிறுமியருக்காக சிவானந்தா வித்யாலயாவும் இவரது முன்னெடுப்பில் அமைந்தன.

ஸ்வாமி விவேகானந்தரின் கருத்தை ஒட்டி ஆரம்பக் கல்வி தமிழில் தான் அமைய வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார்.  பிரிட்டிஷ் ஆளுகையின் கீழ் இலங்கையில் கிருத்துவ மதமாற்றங்கள் தாராளமாய் நடைபெற்றுக்கொண்டிருந்ததை பெருமளவு மட்டுப்படுத்த ஸ்வாமி விபுலானந்தரின் தொண்டுப்பணிகள் காரணமாய் அமைந்தன. சாதி மத பேதமின்றி கல்வியை அனைவருக்கும் அளித்ததால் அனைவரின் நன்மதிப்பையும் ஆதரவையும் பெற்றார். இவரால் ஊக்கம் பெற்ற அபூபக்கர் முகமது அப்துல் அஸீஸ் முஸ்லீம்களிடையே கல்விப் பணியாற்றிய முன்னவர். பின்னாளில் பிரிட்டிஷ் அரசின் இடைக்கால அரசின் கல்வித் துறை மந்திரியாக விளங்கியவர். அவரும் ஸ்வாமிஜியைப் போற்றி பல தருணங்களில் பேசியும் எழுதியுமிருக்கிறார்.

ஸ்வாமிஜி  மடத்தின் தமிழில் ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் , ஆங்கிலத்தில்  வேதாந்த கேசரி, பிரபுத்த பாரத்   ஆகிய இதழ்களுக்கு ஆசிரியராக பல்வேறு காலகட்டங்களில் செயலாற்றினார். இவர் மேடைப் பிரசங்கங்களில்  சிங்க நாதம் போன்று கணீரென்று தெளிவாக துணிவாக கருத்துக்களை முன்னெடுத்து வைப்பார். இப்படி பன்முகத் திறமையாளரான ஸ்வாமிஜியின் வாழ்க்கைச் சரிதத்தை வாசிப்பவர்கள்  55 வயதுக்குள் இத்தனை சாதனைகளா என்று வியப்படைவார்கள். இறுதிக் காலத்திலும் ஓயாமல் தொண்டாற்றி வந்த ஸ்வாமிஜி 20 ஜூலை 1945ல் இறைவனடி சேர்ந்தார்.

விவேகானந்தர் காட்டிய வழியில் தாய்நாட்டுப் பற்றும் , தமிழ் பற்றும், பிறமொழிகளை மதிக்கும் பாங்கும்,  உலக அறிவும் ஒரு சேரப் பெற்ற விபுலானந்தர் போன்ற அறவோர் இன்றைய தமிழகத்திற்கு மிகவும் தேவைப்படுகின்றனர். அத்தகையோரே   இன்றைய இளைய சமுதாயத்தை பிரிவினைவாத-நாத்திக வாத விஷச்சூழலில் இருந்து மீட்டு தேசிய- தெய்வீக உணர்வை மேலோங்கச் செய்ய முடியும்.

========================================   ===================== ====

 

Next Post

ABVP CONDEMNS TELANGANA GOVT’S AUCTION OF HCU LAND AND ITS VIOLENT SUPPRESSION OF STUDENT’S PROTEST

Tue Apr 1 , 2025
VSK TN      Tweet    MARCH 31, 2025 ABVP CONDEMNS TELANGANA GOVT’S AUCTION OF HCU LAND AND ITS VIOLENT SUPPRESSION OF STUDENT’S PROTEST ABVP STANDS FIRM IN SAFEGUARDING THE LAND FOR EDUCATIONAL PURPOSES AND PROTECTING STUDENT’S RIGHTS AGAINST AUTHORITARIAN MEASURES The Akhil Bharatiya Vidyarthi Parishad (ABVP) vehemently condemns the barbaric actions of the Congress-led […]