பாரதத் தீபகற்பத்தைப் பொருத்தவரை பல ஆயிரம் ஆண்டுகளாக பல போர்கள் நடந்துகொண்டேதான் இருந்திருக்கின்றன. பலப்பல அரசுகள் அவர்களின் ஆக்கிரமிப்பு வெறி, வீரத்தை நிலைநாட்டுதல் போன்ற காரணங்களுக்காக எப்பொழுதுமே போர்கள் இங்கே நடந்துகொண்டேதான் இருந்தன.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வட இந்தியாவில் மொகலாயர்கள் நுழைந்து ஆதிக்கம் செலுத்திய காலகட்டங்களில் கூட தென்னிந்திய மன்னர்கள் தங்களுக்குள் நித்தம் சண்டையிட்டு மடிந்தனரே தவிர முதலில் கொடூரமான அந்நியனை, நமது மண்ணை, நமது சமய நம்பிக்கைகளை அழிக்கவந்த கொடியவர்களை நாம் ஒன்றுகூடி அழித்துவிட்டுப் பிறகு நமது சண்டையைப் பார்த்துக்கொள்வோம் என்ற எண்ணம் எவருக்குமே எழவில்லை என்பதுதான் உண்மை, சில ராஜபுத்திர மன்னர்கள், ஹிந்து அரசர்கள் காலம் முழுவதும் மொகலாயர்களை எதிர்த்துப் போரிட்டு வந்திருந்தாலும் பல ஹிந்து அரசர்கள் தங்களுக்குள் இருந்த பகைகளால் அந்நியனுடன் மாறி, மாறி உறவாடியதே நீண்ட காலங்கள் இங்கே அவர்களால் நம்மை ஆள முடிந்தது.
மொகலாயர்கள் ஒன்றும் இங்கே வந்து நம்மை ஆளவேண்டும் என்று வரவில்லை. கொள்ளையடிக்க வந்த ஒரு கூட்டம் நம்மிடையே இருக்கும் ஒற்றுமையின்மையைப் பயன்படுத்தி நாட்டைப் பிடித்து நம்மை ஆண்டார்கள்.
அதேபோல்தான் வெள்ளைளையர்களும் இந்தியாவைக் கைப்பற்றி நம்மை ஆளவேண்டும் என்ற எண்ணத்தில் இங்கே வரவில்லை. வியாபாரம் செய்ய வந்தவனிடம்தான் நமது சிற்றசர்கள், சுல்தான்கள் மாற்றி, மாற்றி அவர்களிடம் நம் மண்ணையும் மக்களையும் அடமானம் வைத்தார்கள்.
முகமது அலியை எதிர்க்க சாந்தா ஷாகிப் ஃப்ரென்ச் ஆளுநர் டூப்ளேவிடம் சரணடைந்தான் என்றால் முகமது அலி பிரிட்டிஷ்காரன் கிளைவிடம் உதவி கேட்டான் வெறும் 200 வீரர்களுடன் கிளைவ் பல தந்திரங்கள் செய்து ஆற்காடு கோட்டையையும் திருச்சிக் கோட்டையையும் கைப்பற்றி நவாபாக மீண்டும் முகமது அலியை அமரவைத்த கிளைவ் கூலியாக மிகப்பெரிய தங்க, வைரப் புதையல்களைக் பெற்றுக்கொண்டாலும், ஆசை அடங்காமல் மேலும் கூலி கேட்க, அந்த நேரத்தில் தனக்குக் கட்டுப்படாமல் இருந்த பாளையங்களைக் கைகாட்டி வரிவசூலிக்கும் உரிமையை முதன்முதலாக வெள்ளையனுக்குத் தானமளித்தான் முகமது அலி.
அன்று அவர்களை எதிர்த்த பூலித்தேவன், அழகுமுத்துக்கோன் போன்ற பலரை நேர்மையற்ற தாக்குதல்களாலும், சூழ்ச்சிகளாலும் வென்று மெல்லமெல்ல தங்களது பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தினை உருவாக்க ஆரம்பித்தார்கள் ஆங்கிலேயர்கள். இதை வெறும் வெள்ளையன் மற்றும் பாளையங்களுக்கிடையான போராக மட்டும் பார்க்காமல், வெள்ளையர்களைக் கட்டுப்படுத்தி ஒழித்துக்கட்டாவிட்டால் நாளை இவர்கள் நமது பாரத தேசம் முழுவதும் அடிமைப்படுத்தி நமது கலாச்சாரம் பண்பாட்டைச் சிதைத்துவிடுவார்கள் என்று தீர்க்கதரிசனமாக உணர்ந்தவர் இருவர் அவர்கள்தான் மாமன்னர் மருதுபாண்டியர் சகோதரர்கள் ராணி வேலுநாச்சியாருடன் சேர்ந்து 15 வருடங்களாக தனது சிவகங்கைச் சீமைக்காக அவர்கள் போராடி வந்திருந்தாலும், போர்கள் பல கண்டிருந்தாலும், இது வெறும் தனது பாளையத்திற்கான சவால் அல்ல ஒட்டுமொத்த தேசத்திற்கான சவால் என்பதை உணர்ந்து 1801-ம் ஆண்டு ஜூன் மாதம் 16-ம் தேதி ஒட்டுமொத்த தேசத்திற்கான பிரகடணம் ஒன்றை வெளியிடுகிறார்கள் சின்னமருது பெயரால் திருச்சி, ஸ்ரீரங்கம் கோட்டை, கோவில்களில் ஒட்டப்பட்ட அந்தப் பிரகடணம் “ஜம்புத்தீவு” பிரகடணம் என்று அழைக்கப்பட்டது.
ஜம்புத் தீவு பிரகடணத்தில், அகண்ட பாரதம் என்ற உன்னத நோக்கத்தை அப்போதே வெளிப்படுத்தியுள்ளனர் மருது சகோதரர்கள். அதில், ‘ஜம்பு தீபகற்பத்திலுள்ள ஜம்புத் தீவில் வாழும் அந்தணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள், முசல்மான்கள் முதலான அனைவருக்கும் அறிவிப்பது என்னவென்றால், நவாப் முகமது அலி, முட்டாள்தனமாக ஐரோப்பியர்களுக்கு இடங்கொடுத்து விட்டதன் காரணமாக இப்போது அவர் ஒரு விதவைபோல் ஆகிவிட்டார்.
ஐரோப்பியர்களோ தங்களுடைய வாக்குறுதிகளை மீறி அரசாங்கத்தையே தங்களுடையதாக ஆக்கிக் கொண்டு நாட்டு மக்கள் அனைவரையும் நாய்களாகக் கருதி ஆட்சியதிகாரம் செய்து வருகிறார்கள். உங்களிடையே ஒற்றுமை இல்லாத காரணத்தால் ஐரோப்பியரின் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ளாமல், ஒருவரையொருவர் பழிதூற்றிக் கொண்டு, நாட்டை அந்நியரிடம் ஒப்படைத்து விட்டீர்கள்.
இந்த ஈனர்கள் ஆளும் பகுதிகளிலெல்லாம், மக்கள் ஏழ்மையில் உழல்கிறார்கள்; சோற்றுக்குப் பதில் நீராகாரம்தான் உணவு என்று ஆகிவிட்டது. துன்பப்படுவது தெரிந்திருந்தும் எதனால் இத்துன்பங்கள் ஏற்பட்டன என்பதைப் பகுத்தாராயவும் புரிந்துகொள்ளவும் இயலாத நிலையில் மக்கள் இருக்கின்றனர்.
ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தாலும் மனிதன் கடைசியில் செத்துத்தான் ஆகவேண்டும். ஆதலால் ஜம்புத்தீவு வாசிகள் ஒவ்வொருவரும் போர்க்கோலம் பூண்டு ஒன்றுபட வேண்டும். இந்த ஈனர்களின் பெயர்கள்கூட நாட்டில் மிஞ்சியிருக்காமல் செய்யவேண்டும். அப்போதுதான் ஏழைகளும் இல்லாக் கொடுமையால் அல்லல்படுவோரும் வாழ முடியும்.
இந்த ஈனர்களுக்கு தொண்டூழியம் செய்து சுகவாழ்வு வாழ விரும்புகிறவன் எவனாவது இருந்தால் அவர்கள் ஒழிக்கப்பட வேண்டும். ஆதலால், மீசை வைத்த அனைவரும் உங்களுக்கு வீரமிருந்தால், இந்த ஈனர்களை அழித்து விடவேண்டும். இந்த ஈனர்களுக்கு தொண்டூழியம் செய்கிபவனுக்கு இறந்தபின் மோட்சம் கிடையாது என்பதை நான் உறுதியாகக் கூறுவேன். எனவே, உடம்பில் ஐரோப்பியனின் ரத்தம் ஓடாத அனைவரும் ஒன்று சேருங்கள்.
இப்படிக்கு,
மருதுபாண்டியர்கள்.
ஆனால், இந்தப்பிரகடணத்தை ஏற்று அன்று இருந்த பாளையங்களும், சிற்றரசர்களும், நவாப்புகளும் ஒற்றுமையாகப் போராடியிருந்தால் வெள்ளையர்களைக் கூண்டோடு விரட்டியடித்திருக்கலாம். ஆனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம்மிடையே இருக்கும் அந்த ஒற்றுமையின்மை, துரோகம் போன்ற குணங்களால் அன்றும் மருதுபாண்டியர் துரோகத்தால் தோற்றுப்போனார்கள். ஆம் பல பாளையக்காரர்கள் வெள்ளையனிடமே விலைபோய் மருதுபாண்டியர்களைக் காட்டிக்கொடுத்தார்கள்.
ஜம்புத்தீவு பிரகடணத்தின் வீரியத்தை உணர்ந்த வெள்ளையர்கள் அதே ஆண்டு (1801) காளையார்கோவில் கோபுரத்தை இடித்துவிடுவதாகக் கூறி சரணடையச் செய்து தூக்கிலிட்டனர்.
ஒருவேளை அந்த மாவீரர்களின் தீர்க்கதரிசனத்தை உணர்ந்து அந்த மாபெரும் பிரகடணத்தை ஏற்றுக்கொண்டிருந்தால் நாம் 300 ஆண்டுகள் ஆங்கிலேயர்களுக்கு அடிமைகளாக இருந்திருக்க மாட்டோம், என்ன செய்வது பல ஆயிரம் ஆண்டுகளாக நம்மிடையே நிலவும் ஒற்றுமையின்மை, சுயநலம் மட்டுமே நம்மை அடிமைகளாக வைத்திருந்தது, வைத்திருக்கிறது.
ஆம், இன்று நாடு ஒன்றாக இருந்தாலும் நாட்டில் யாரிடமும் ஒற்றுமையில்லை இந்த மண்ணின் பண்பாடு கலாச்சாரத்தை, கோவிலைக் காக்க உயிர்களை விட்ட மருதுசகோதரர்கள் கூறும் செய்தி மற்றுமொரு முறை இந்த நாடு அடிமையாகாமல் இருக்கவேண்டும் என்றால் ஹிந்துக்கள் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்பதுதான். _
அன்று வெள்ளையர்கள் நம்மை அடிமைப்படுத்திவிடுவார்கள் என்று அஞ்சி ஜம்புத்தீவு பிரகடணம் செய்த மருதுசகோதரர்கள் இன்று இருந்திருந்தால் நிச்சயமாக கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் கூட்டுச்சேர்ந்து ஹிந்துக்களை அடிமைகளாக்கி ஆள நினைக்கிறார்கள் என்ற உண்மையைப் பிரகடணப்படுத்தியிருப்பார்கள்.
–ந.முத்துராமலிங்கம்