சாவர்க்கர் 1914ல் கொடுத்த மனு !

VSK TN
    
 
     

வீர் விநாயக் தாமோதர் சாவர்கர் அவர்கள் பாரத தேச சரித்திரத்தின் பக்கங்களை அலங்கரிக்கப்பட வேண்டிய ஒரு மாபெரும் நாயகனை தூரோகச் சதியால் புறக்கணிக்கப்பட்டு வரலாற்றில் இருந்து மறக்கடிக்கப்பட்ட மாபெரும் சுதந்திர போராட்ட வீரர், தியாகத்தின் இலக்கணம். ஊழல் அரசியல்வாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய மாவீரன் என்பதே உண்மை.

ஆங்கிலேய ஆட்சியின் அடக்குமுறைக்கும், சொந்த நாட்டின் சுயநல அடிவருடிகளின் சூழ்ச்சிக்கும் இரையாகி பாரத சுதந்திர வேள்வியில் தன் வாழ்க்கை, குடும்பம் அனைத்தையுமே இழந்து வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத துயரத்தை அனுபவித்த ஓர் ஆகச்சிறந்த சித்தாந்தங்களின் தந்தை வீர் சாவர்க்கர் அவர்கள்.

உலக வரலாற்றிலேயே விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டதற்காக இரட்டை அயுள் தண்டனை பெற்ற அரசியல் கைதி இவர் ஒருவரே, மேலும் தனது எழுத்துக்களாலே பிாிட்டிஷ் அரசை குலைநடுங்க செய்த மிகச்சிறந்த இலக்கியவாதியும் ஆவாா்.

சட்டம் பயில கல்லூரி மாணவராக லண்டனில் சாவர்க்கர் கழித்த ஐந்தாண்டுகளில், பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து முழுமையான விடுதலையை முன்னிறுத்தி புரட்சிகர இயக்கம் ஒன்றை அமைத்து ஒத்த சிந்தனை கொண்ட பல இளைஞர்களை ஒன்றிணைத்து அவர் ஊக்கப்படுத்தினார். அவரின் அதீத முயற்சியால் இந்தியா மட்டுமில்லாது ஐரோப்பா, அமெரிக்கா, ஐரிஷ், பிரஞ்சு, இத்தாலி, ரஷ்ய வரையிலும், அவரால் வழிநடத்தப்பட்ட பல தலைவர்கள், புரட்சியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி, பிரிட்டிஷ் அரசு இந்தியாவை விட்டு செல்ல வேண்டிய அவசியத்தை உலகப் அரங்கில் பேசு பொருளாக கொண்டு வந்தது அவர் மீதான பார்வை ஆங்கிலேய அரசிற்கு அச்சுறுத்தலாக இருந்தது.

ஆதலால் பிரிட்டிஷ் அரசாங்கம் அவரை மிகவும் ஆபத்தான தேசத்துரோக நபராக வகைப்படுத்தி அரசாணை பிறப்பித்தது. மேலும் 1881 ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் தப்பியோடிய குற்றவாளிகள் பட்டியலில் (FOA) இவரை சேர்த்தது. ஆனால் அவர் லண்டனில் ஒரு நேர்மையான மாணவராக இருந்ததால் அவருக்கு அந்த சட்டம் பொருந்தாது ஏனென்றால் அவர் தப்பியோடியவர் அல்ல. சாவர்க்கர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு அவரால் மேல்முறையீடோ அல்லது தனக்காக வாதாடும் உரிமையோ இல்லாமல் இருந்தார்.

பிறகு சாவர்க்கருடன் அவரின் மூத்த சகோதரர் கணேஷ் தாமோதர் சாவர்க்கரையும் சேர்ந்து அந்தமானின் செல்லுலார் சிறையில் அடைக்கப்பட்டு, மொத்தம் 50 ஆண்டுகள் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவரது இருப்பே பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு ஒருவித பயத்தை ஏற்படுத்தி இருந்தது என்பதை அவர்களின் ஆவணங்களில் தெள்ள தெளிவாக உள்ளது. எனவே சாவர்க்கரை இந்திய நிலப்பரப்பில் இருந்து முடிந்தவரை தொலைவில் வைத்திருக்க விரும்பினர்.

செல்லுலார் சிறையில் அவருக்கு மிக கொடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டன. சங்கிலியால் பிணைக்கப்பட்டும், கசையால் அடிக்கப்பட்டும், ஆறுமாத தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். நாள் முழுவதும் எண்ணெய் எடுக்க வைக்கப்பட்டு, செக்கிழுக்கும் மாடுகளை போல் கட்டப்பட்டு, பலநாட்கள் கைவிலங்கிடப்பட்டு தண்டிக்கப்பட்டார். கழிவறை, தண்ணீர் போன்ற அடிப்படை மனித தேவைகள் ஏதும்மின்றி, உணவுகளில் பூச்சி துண்டுகளை கலந்து துர்நாற்றத்துடன் கொடுக்கப்பட்டது.

1913 வாக்கில், இந்த மனிதாபிமானமற்ற நடத்தைக்கு எதிராக சாவர்க்கரும் பல கைதிகளும் உண்ணாவிரதப் போராட்டங்களையும் சிறையில் ஒத்துழையாமையையும் தொடங்கினர். காலா பானியில் தங்கள் தோழர்கள் சந்தித்த சித்திரவதைகளை இந்தியாவின் பிற பகுதி மக்கள் அறியவில்லை. எனவே, இந்திய செய்தித்தாள்களில் வெளியிடுவதற்காக கட்டுரைகள் கசிந்தன. போர்ட் பிளேயரில் வெடிகுண்டு தயாரிப்பைத் தொடங்க சாவர்க்கரின் ரகசிய முயற்சிகள் அதிகாரிகளை பீதியடையச் செய்தது.
இறுதியாக, அக்டோபர் 1913ல், சர் ரெஜினோல்ட் எச். க்ராடாக், இந்திய அரசாங்கத்தின் உள்துறை உறுப்பினராக செல்லுலார் சிறைக்குச் சென்று அரசியல் கைதிகள் சிலரை நேர்காணல் செய்து அவர்களின் குறைகளைக் கண்டறிய முடிவு செய்தார். சாவர்க்கர் மற்றும் பிற அரசியல் கைதிகள் – பேரின் கோஸ், நந்த் கோபால், ஹிருஷிகேஷ் கஞ்சிலால் மற்றும் சுதிர் குமார் சர்க்கார் ஆகியோர் நேர்காணல் செய்யப்பட்டு மனுக்களை சமர்ப்பிக்க அனுமதிக்கப்பட்டனர். இந்த செயல்முறை பிரிட்டிஷ் இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கைதிகளுக்கும் ஒரு சட்டபூர்வமான கருவியாக இருந்தது, ஒரு வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தில் தங்களை தற்காத்துக் கொள்ளும் வாய்ப்பாக கருதினர். ஒரு பாரிஸ்டராக, சாவர்க்கர் சட்டத்தை நன்கு அறிந்தவராக இருந்தார், மேலும் அதன் கீழ் உள்ள அனைத்து விதிகளையும் பயன்படுத்தி தன்னை விடுவித்துக் கொள்ள அல்லது சிறையில் உள்ள தனது நிலைமையைத் தணிக்க விரும்பினார். சுதந்திரப் போராட்டத்துக்குத் திரும்புவதற்கும் தாய்நாட்டிற்குச் சேவை செய்வதற்கும் பிரிட்டிஷ் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதே ஒரு புரட்சியாளரின் முதன்மைக் கடமை என்று சாவர்க்கர் அடிக்கடி மற்ற அரசியல் கைதிகளுக்கும் அறிவுறுத்தினார்.

1913 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி க்ராடாக்கிற்கு அளித்த மனுவில், கற்பழிப்பு, கொலை, திருட்டு மற்றும் பிற குற்றம் புரிந்த பொதுவான குற்றவாளிகளுக்கு அவர்களின் நன்னடத்தையின் அடிப்படையில் சில சலுகைகளும் அல்லது சில மாதங்களுக்குப் பிறகு வேலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர் என்று சாவர்க்கர் வாதிட்டார்.

ஆனால் அவருக்கு ‘சிறப்பு வகுப்பு கைதி’ என்பதால் அந்த சலுகைகள் கிடைக்கவில்லை. அதேநேரம் அவர் தூய்மையான உணவு மற்றும் சிகிச்சையை கேட்டபோது, ‘சாதாரண குற்றவாளி’ என்ற அடிப்படையில் அவருக்கு மறுக்கப்பட்டது. அவர் இந்திய சிறையில் அரசியல் கைதியாக இருந்திருந்தால், அவர் விடுதலை பெற்றிருப்பார் அல்லது அவருக்கு அதிகமாக எழுதுவதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கும். இந்த இருவேறுபாடான அணுகுமுறை அவருக்கு இரு முனைகளிலும் பாதகமாக அமைந்தது.

மேலும் அவர் “எந்தவொரு முன்னுரிமையான சிகிச்சையையும் நான் கேட்கவில்லை,” என்று கூறினார், “ஒரு அரசியல் கைதியாக” உலகின் சுதந்திர நாடுகளில் உள்ள எந்த நாகரீக நிர்வாகத்திலும் இத்தகைய குறைந்தபட்ச எதிர்பார்ப்பு நியாயமானதே. இது கிட்டத்தட்ட பிரிட்டிஷ் இந்தியா நாகரீகமற்றதாக இருப்பதையே எடுத்துக்காட்டியது.

*சாவர்க்கர் அவர்களின் இந்த தார்மீக உரிமையை இன்று ஏளனமாக சாடும் அதே மனித உரிமை ஆர்வலர்கள்(கயவர்கள்)தான் இன்று கசாப், யாகூப் மேமன் போன்ற பயங்கரவாதிகளுக்கும், தேசத்திற்கு எதிரான நாச வேலைகளில் ஈடுபடும் நக்சல்களுக்கும் ஆதரவாக செயல்படுகிறார்கள்.*

இந்தியாவுக்குத் திரும்பும் வழியில், க்ராடாக் கப்பலில் தனது அறிக்கை ஒன்றை எழுதினார். அதில் சாவர்க்கர் “தன் செயலுக்காக எந்தவொரு வருத்தத்தையோ அல்லது மன மாற்றத்தையோ வெளிப்படுத்தவில்லை” என்று கூறியுள்ளார். அவர் இந்தியாவின் மிகவும் முக்கியமான தலைவர் ஆதலால் அந்தமானில் உள்ள செல்லுலார் சிறைக்கு வெளியே இருக்க அவரை அனுமதித்தால், அவரின் நண்பர்கள் உதவியோடு தப்பிப்பது உறுதி என்று குறிப்பிட்டுள்ளார். ஆகவே ஆங்கிலேய அரசு அவரின் மனுவை நிராகரித்து சாவர்க்கரை விடுதலை செய்ய மறுத்துவிட்டது.

முதல் உலகப் போர் துவங்கிய சமயம், 1914 அக்டோபரில் சாவர்க்கர் அவர்கள் மற்றொரு மனுவை தாக்கல் செய்தார். அதில் தற்போதய யுத்தத்தில் ” இந்திய அரசாங்கத்திற்கு ஆதரவாக தன் இயன்ற சேவையை செய்ய தயாராக இருப்பதாக” கூறியிருந்தார். அதே மனுவில், “இந்தியாவில் அரசியல் குற்றங்களைச் செய்ததற்காக தண்டனை பெற்ற அனைத்து கைதிகளையும்” பொது விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர் கோரினார். இது மற்ற ஆங்கிலேய காலனிகளில் பின்பற்றப்பட்ட நடைமுறையாகும்.

சுவாரஸ்யமாக, இந்த முக்கியமான காலகட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் வெளிப்படையாக பிரிட்டனை ஆதரித்தது. போர் வெடித்தபோது, மகாத்மா காந்தி இங்கிலாந்தில் இருந்தார், அங்கு போயர் போரின்போது ஆங்கிலேயர்களுக்கு உதவ அவர் தலைமை தாங்கிய படையைப் போலவே மருத்துவப் படையை ஏற்பாடு செய்யத் தொடங்கினார், மேலும் விசுவாசத்திற்காக தங்கப் பதக்கத்தையும் வென்றார். செப்டம்பர் 22, 1914 தேதியிட்ட ஒரு சுற்றறிக்கையில், அவர் தனது ஆம்புலன்ஸ் களபயிற்சிப் படைக்கு ஆட்சேர்ப்பு செய்ய அழைப்பு விடுத்தார். ஜனவரி 1915ல் அவர் இந்தியாவுக்குத் திரும்பியதும், காந்திஜி, போரில் பிரிட்டிஷ் முயற்சிகளுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கினார், மேலும் இது பிரிட்டனை சங்கடப்படுத்தவோ அல்லது இந்திய விடுதலைப் போராட்டத்தை மேம்படுத்துவதற்கான அவரது சிக்கலான சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ளவோ இது நல்ல நேரம் அல்ல என்று நம்பினார். “இங்கிலாந்தின் தேவையை எங்களின் வாய்ப்பாக மாற்றிவிடக் கூடாது என்றும், போர் நீடிக்கும் போது நமது கோரிக்கைகளை வலியுறுத்தாமல் இருப்பது மிகவும் தொலைநோக்குடையது” என்றும் காந்தி கூறினார். குஜராத்தில் கிராமம் கிராமமாக ஊர்வலம் சென்று, ஆங்கிலேயர்களுக்கு போரில் உதவ தன்னார்வலர்களை நியமித்தார்.

“இங்கு கவனிக்க வேண்டிய ஒன்று சாவர்க்கர் 1914ல் கொடுத்த மனுவிலிருந்து காந்தியின் இந்த முடிவு எப்படி வேறுபட்டதாகும்? இரண்டையும் ஒரே தராசில் வைத்துப் பார்ப்பதே சரியான அனுகுமுறையாகும். ”

தனது பல்வேறு சிறைப் போராட்டங்களுக்கு பின் சாவர்க்கர் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்களுக்கு எதிராக 20 மார்ச் 1920 தேதியிட்ட மனு மூலம் மேல்முறையீடு செய்தார். இந்த மனுக்கள் எதிலும் அவர் தனது கடந்த கால புரட்சிகர நடைவடிக்கைக்கு எவ்வித மன்னிப்பும் கேட்டதாகக் கூறவில்லை.

செல்லுலார் சிறை மூடப்படவிருந்தபோதுதான், மே 1921இல் சாவர்க்கரை ரத்னகிரி சிறைக்கு நாடு கடத்த ஆங்கிலேயர்கள் முடிவு செய்தனர். அதற்குள் சாவர்க்கர் போர்ட் பிளேயரில் குறிப்பிடத்தக்க சிறைச் சீர்திருத்தங்களைச் செய்தார், அவை நூலகம் அமைத்தல், குற்றவாளிகளுக்கு கல்வி மற்றும் கட்டாய மதமாற்றங்களை நிறுத்துதல் போன்றன.
மேலும் அவர் அந்தமானில் பெற பாடுபட்ட இந்த நன்மைகள் அனைத்தும் ரத்னகிரியில் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது என்று உணர்ந்தார், மேலும் அவர் சிறைப் பயணத்தைத் தொடங்கிய இடத்திற்குத் திரும்பினார்.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஜனவரி 6, 1924 அன்று சாவர்க்கர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால் ரத்னகிரி மாவட்டத்தின் எல்லைகளுக்குள் கடுமையான கண்காணிப்பில் வைக்கப்பட்டு, அரசியல் நடவடிக்கைகளில் இருந்து விலக்கி வைக்கப்பட்டார். அவர் தனது வாழ்க்கையின் அடுத்த 13 ஆண்டுகளை இப்படியே கழித்தார். ஆனால் சாதி அமைப்பை உடைக்க ரத்னகிரியில் தொடர் சமூக சீர்திருத்தங்களைத் தொடங்குவதில் இருந்து அவர் ஒருபோதும் விலகவில்லை. ஹரிஜன இயக்கம் மற்றும் பி.ஆர். அம்பேத்கரின் தெளிவான அழைப்பின் பேரில், சாவர்க்கர் சாதிகளுக்கு இடையேயான சமபந்தி போஜன முறையை தொடங்கி அதை அனைவரையும் பின்பற்ற அறிவுறுத்தினார், மேலும் ரத்னகிரியில் அனைத்து சாதியினரும் நுழைய வழிபட “பதித் பவன்” கோவிலையும் கட்டினார்.

பாரத தேச சேவையே தன் முழு மூச்சாக கொண்டு எந்தவித எதிா்பாா்ப்புமின்றி வாழ்ந்தவா், ஹிந்துக்களின் அறியாமையை போக்குவதால் மட்டுமே இந்த தேசம் எழுச்சி பெறும் என தீா்க்கமாய் முழங்கியதோடு, அதற்கான பணிகளில் தன் இறுதிவரை தன்னை அா்பணித்து உறுதியோடு வாழ்ந்த மாமனிதன் வீர் சாவர்க்கர்.
— திரு.சுந்தர்

Next Post

Chandra Shekhar Azad !

Mon Feb 27 , 2023
VSK TN      Tweet     நம் தேசத்தை அடிமைப்படுத்திய பரங்கிய அரசுக்கு எதிராக போராடியதாகக் குற்றம் சாட்டப்பட்டு பதினைந்து வயது சிறுவன் நீதிபதிக்கு முன்னால் நிறுத்தப்பட்டு இருக்கிறான். விசாரணை தொடங்கியது. நீதிபதி : உனது பெயர் சிறுவன் : விடுதலை ( ஆஸாத் ) நீதிபதி : உனது தந்தையின் பெயர் சிறுவன் : சுதந்திரம் நீதிபதி : உனது இருப்பிடம் சிறுவன் : சிறைச்சாலை இப்படி பதில் கூறும் சிறுவனிடம் என்ன […]