உலகின் முதல் செய்தியாளர் நாரத முனிவர்

VSK TN
    
 
     
உலகின் முதல் செய்தியாளர் நாரத முனிவர்
நாரத ஜெயந்தி: மே 9.
தமிழன் அறிந்த நாரதன்
நாரதர் கொண்டுவந்த ஞானப் பழத்துக்காக பிள்ளையாரும் முருகனும் போட்டி போட்ட கதையை சுதைச் சிற்பமாக சித்தரிக்காத கோயில் உண்டா தமிழகத்தில்?
நாரதரை தேவ பிரம்மா என்கிறது யாழ் அகராதி.
நாரதர் மகதி என்ற வீணையை இசைப்பதாக பிரமோத்தர புராணம் தெரிவிக்கிறது.
சிலப்பதிகாரம் நாரத வீணை பற்றி குறிப்பிடுகிறது.
’நாரத கீதக் கேள்வி’ என்ற ஒரு தொன்மையான இசை நூல் பற்றி பேசுகிறது பெருங்கதை என்ற காப்பியம்.
தணிகைப்புராணம் தணிகை மலைக்கு ’நாரதப்பிரியம்’ என்று பெயர் சூட்டி மகிழ்கிறது.
நாரதர் ’பஞ்ச பாரதீயம்’ என்ற ஓர் இசைத் தமிழ் நூலை இயற்றியதாகத் தெரிவிக்கிறது சிலப்பதிகார உரைப்பா.
108 உபநிடதங்களில் ஒன்றின் பெயர் ’நாரதபரிவிராசகம்’ என்கிறது தமிழ்ப் பேரகராதி (லெக்சிகன்)
நாரதரை ’யாழ்முனிவன்’ என்று அழைக்கிறது பாகவத நூல்.
நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்ற பழமொழி நாரதரால் ஏற்படும் நன்மையைத் தெரிவிக்கவே வந்தது.
**********************************
கே ஜி சுரேஷ்
மனித குல வரலாற்றின் முதல் செய்தியாளராக போற்றப்படுபவர் நாரதர் இவர் தெய்வீக இசைக் கலைஞர்களான கந்தர்வர்களின் தலைவர் என்றும் சப்தரிஷிகளில் ஒருவர் என்றும் மதிக்கப்படுபவர் நாரதர் போல தகவல் தெரிவிப்பதில் ஈடு இணையற்றவர் உலகில் வேறு எந்த நாட்டிலும் நாகரீகத்திலும் பாரம்பரியத்திலும் புராணத்திலும் கிடையாது. நாரதர் கலகம் விளைவிப்பவர், தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் சண்டை மூட்டி விடுபவர், அவர் ஒரு கோமாளி என்று இந்திய திரைப் படங்களிலும் டிவி சீரியல்களிலும் சித்தரிக்கப்படுவது நாரத முனிவரின் மேன்மை குறித்த அறியாமையின் விளைவு. சத்திய நாட்டத்துடன் மூன்று உலகங்களிலும் சஞ்சரித்த நாரதரின் தகவல் பரப்பு உத்திகள் பற்றிய அறியாமையும் இதனோடு சேர்ந்து கொள்கிறது.
இன்றைய மீடியா உலகம் சித்தாந்த பாசறைகளாக சிதறுண்டு கிடக்கிறது. ஆனால் தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், கின்னரர்கள், வானரர்கள் என்று எல்லாத் தரப்பினரிடமும் ஒன்றுபோல பழகிய நாரதர் இந்த அத்தனை சமூகங்களின் அன்பையும் பெற்றவர் என்பது தகவல் பரப்பும் நுட்பத்தில் நாட்டமுடைய எவருக்கும் தேவையான படிப்பினை.
அவர் கோள் சொல்பவர் அல்ல. மனித குலத்தையும் முனிவர்களையும் அசுர சக்திகள் கொடுமைப் படுத்திய போது இந்த விஷயத்தை பிரம்மா விஷ்ணு சிவன் என்ற மும்மூர்த்திகள் உள்பட தேவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று வெகுஜன மக்கள் துயர் துடைக்கும் சேவை செய்தவர் நாரதர். தகவலை விரைவாக துல்லியமாக பாரபட்சமில்லாமல் கொண்டு செல்லும் அரிய இதழியல் பண்பு வாய்ந்தவர் அவர்.
எளிமையானவர் அவர் படாடோபம் இல்லாமல் அயராமல் மூன்று உலகங்களிலும் சஞ்சரித்தபடியே இருந்தவர். சம்பவம் நடக்கும் இடத்திற்கு சென்று கண் எதிரேயே கண்டு செய்தி சொல்பவர் நாரதர். . இன்று ஏசி அறையில் அமர்ந்தபடி உலகச் செய்திகளை ஒருவழி செய்கிறார்களே அதற்கும் தலைசிறந்த பீல்டு ரிப்போர்ட்டர் ஆன நாரதருக்கும் காததூரம்.
நாரதர் எவரையும் நல்லவர் கெட்டவர் என்று முன்கூட்டியே கணிப்பவர் அல்ல பழகிய பின்பு தன்மையை உணர்ந்து கொள்வார். அவர் தண்டனை கொடுப்பவர் அல்ல அது கடவுளர் வேலை. அவர் செய்வதெல்லாம் எது தர்மம் எது அதர்மம் எது பொய் எது உண்மை என்பதை உலக நன்மையைக் கருத்தில் கொண்டு விண்டு வைப்பதுதான் அவர் பணி.
நாரதர் விஷய ஞானம் உள்ளவர், தகவல் களஞ்சியம். நுனிப்புல் மேய்கிற ஜர்னலிஸ்ட் அல்ல அவர். ஆழ்ந்த ஆராய்ச்சியும் உலக ஞானமும் அனுபவமும் கொண்டு 25,000 ஸ்லோகங்கள் கொண்ட நாரத புராணம் வழங்கிய நூலாசிரியர் அவர்.
சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் ஆகி ஆகிவிட்டன. இன்னும் பத்திரிகையாளன் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறி முறையை நாம் வகுத்துக் கொள்ளாமல் தடுமாறுகிறோம். ஸ்ரீ கிருஷ்ணன் நாரதர் பற்றி சொல்லியதில் நமக்கு நல்ல வழிகாட்டுதல் கிடைக்கிறது. கிருஷ்ணரின் பாட்டனார் உக்கிரசேனன் கிருஷ்ணரிடம் “ஏன் உனக்கு நாரதரிடம் அவ்வளவு அன்பு?” என்று கேட்டார். கிருஷ்ணர் கூறலானார்
“சாட்சாத் பிரம்மதேவரின் மடியில் தோன்றிய நாரதர் பல கலைகளில் வல்லவர். ஆனால் தலைக்கனம் இல்லாதவர். அதுமட்டுமல்ல, நாரதருக்கு ஈடுபாடின்மை, ஆத்திரம், சஞ்சல புத்தி, பயம் இவை எதுவும் கிடையாது. அடக்கமான சுபாவம் கொண்டவர். ஒத்திப் போடும் பழக்கம் அவரிடம் கிடையாது. ஆன்மிக நெறி நிற்பதில் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கம் தவறாதவர். சொன்ன சொல்லைக் காப்பாற்றுகிறவர். பேராசையால் மாற்றிப் பேசாதவர். புலனடக்கம் வாய்ந்தவர். பாவம் தீண்டாதவர். அவர் உடுக்கும் உடை, உண்ணும் உணவு, சொல்லும் சொல் எல்லாமே நன்னெறிக்கு உட்பட்டவை. செல்வம் சேர்ந்தால் அகந்தை கொள்வது, வறுமை வந்தால் வாடிப் போவது அவரிடம் கிடையாது. நற்பண்புகள் நிறைந்த அவருக்கு அபார திறமை உண்டு. குறிப்பறிந்து செயல்படுபவர். நியாயத்தின் பாதை எது என்று நன்கு உணர்ந்தவர். எனவே நாரத முனிவர் என் அன்பிற்கு உரியவர்” – இவ்வாறு சொல்லி முடிக்கிறார் ஸ்ரீகிருஷ்ணன்.
நல்லொழுக்கம், நற்பண்பு இவற்றிலிருந்து நான்கு காதம் போய்விட்ட இன்றைய ஊடக உலகம், கலங்கரை விளக்கமாகத் திகழும் நாரதர் வாழ்விலிருந்து கற்றுக் கொள்ள ஏராளமான படிப்பினைகள் உண்டு.
கிருஷ்ணனே நாரதரின் அரிய பண்புகளை பார்த்து வியந்து, பகவத்கீதையில் அர்ஜுனனிடம் ’தருக்களில் நான் அரசு, முனிவர்களில் நான் நாரதர்’ என்று சொன்னார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!
(கட்டுரையாளர் மூத்த பத்திரிகையாளர்; இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் அமைப்பின் முன்னாள் டைரக்டர் ஜெனரல்)

Next Post

என் “தேசம்” என் “கடமை” மூன்றெழுத்தில் தேசத்தின் மூச்சுக் காற்று ஆன ஆர்.எஸ்.எஸ்

Fri May 8 , 2020
VSK TN      Tweet     ஆர்.எஸ்.எஸ் காரங்க மைதானத்துல கபடி விளையாடுவாங்க, ராணுவம் மாதிரி அணிவகுப்பு ஊர்வலம் போவாங்க, தேசபக்தியை உயர்த்திப் பிடிப்பாங்க, இயற்கை பேரிடர் சமயங்களில் யாரும் கேட்காமலே போய் சேவை செய்வாங்க – இதை எல்லாத் தரப்பு மக்களும் உணர்ந்து விட்ட காலகட்டம் இது. ஆம்! அதுக்கு, கொரோனா பாதிப்பு நாட்களும் விதிவிலக்கல்ல. நோய்த்தொற்று பரவி அதிகரிக்காமல் இருக்க, அரசாங்கம் ஊரடங்கு அறிவித்த மார்ச் 22 தொடங்கி, இந்த தகவல் […]