“சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பிறந்ததாக மைசூர் மன்னர் ஹைதரலியிடம் சொல்,” என்று கர்ஜித்தான் அந்த இளைஞன். அன்றிலிருந்து அவன் தீரன் சின்னமலை என்று அழைக்கப்பட்டான்!
ஈரோடு காங்கேயம் அருகே மேலப்பாளையத்தில் 1756 ஏப்ரல் 17ம் தேதி இரத்தினசாமி கவுண்டர் – பெரியாத்தாவுக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு தீர்த்தகிரி என பெயரிட்டனர். வசதியான செல்வாக்கு மிக்க குடும்பம், பழைய கோட்டை பட்டக்காரர்கள் வம்சாவழியைச் சேர்ந்த கவுண்டர் தம்பதி, புலவர்களை ஊக்குவித்து அவர்களுக்கு நண்கொடைகள் கொடுத்தனர். புலவர்கள் தீர்த்தகிரிக்கு சர்க்கரை என்ற பெயரும் சூட்டினர்.
தீர்த்தகிரி இயற்க்கையாகவே தலைமை திறன்களை கொண்டவனாக இருந்தான். இளம் வயதில் பல போர் கலைகளை கற்று தேர்ச்சி பெற்றான். சிலம்பம், வாள் வித்தை, அம்பு வில்லு, குஸ்தி என பல வித்தைகள் கற்றிருந்தான். மேலும் அவனுடைய பல நண்பர்களுக்கும் இந்த வித்தைகளை கற்றுக்கொடுத்தான்.
கொங்கு நாடு மைசூர் சுல்தானின் கீழ் இருந்த காலம் அது. ஹைதர் அலி புதிய வரி இட்டு அதை தன்னுடைய நாட்டு மக்களிடமிருந்து வசூலிக்க திட்டமிட்டான். இந்த திட்டத்தின் படி, ஒவ்வொரு ஊராக அவனுடைய ஆட்கள் சென்று வரி வசூலித்துக்கொண்டு வந்தனர்.
மேலப்பாளையத்துக்கு வந்த ஹைதர் அலியின் ஆட்கள் அந்த ஊர் மக்களை வற்புறுத்தி வரி வசூலித்தனர். இதை கேள்விப்பட்ட தீர்த்தகிரி, அவன் நன்மார்களை ஒன்று சேர்த்து ஹைதர் அலியின் ஆட்களை தாக்கி, அவர்கள் சேர்த்த வரியை திருப்பி எடுத்துக்கொண்டார்கள். தீர்த்தகிரி அதை ஒரு நண்பனிடம் கொடுத்து, “இதை மீண்டும் நம் மக்களிடமே திருப்பிக் கொடுத்துவிடு,” என்று கூறி, ஹைதர் அலியின் ஆட்களிடம், “நீங்கள் போய் வரலாம், எங்களுக்கு உங்கள் உதவி தேவையில்லை. எங்கள் ஊரை நாங்களே காப்பாற்றிக்கொள்கிறோம்!” என்றான்.ஹைதர் அலியின் ஆட்களுக்கு ஒன்றும் பண்ண முடியவில்லை, “நாங்கள் மன்னரிடம் என்னவென்று சொல்வது?” என்று கேட்க, தீர்த்தமலை, “சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பிறந்ததாக மைசூர் மன்னர் ஹைதரலியிடம் சொல்,” என்று சிம்மம் போல கர்ஜித்தான்.
அதற்குப்பின் அவன் தன் ஊர் தலைவரிடம் சென்று, “நீங்கள் மைசூர் ராஜாவிற்கு கொடுக்கும் வரியில் ஒரு பகுதி மட்டும் எங்களிடம் கொடுத்தால் போதும், நம் மக்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளலாம்,” என்று சொன்னான்.
பிரிட்டிஷ்காரர்கள் தங்களின் செல்வாக்கை பெருக்கி நம் நாட்டு ராஜாக்களின் மீதான கட்டுப்பாட்டை அதிரித்துக்கொண்டிருந்த காலகட்டம் அது. அவர்களின் செயல்களையம் நோக்கங்களையும் அறிந்து தீரன் சின்னமலைக்கு கோபம் பொங்கியெழுந்தது. அவர்களை எப்படியாவது ஒழித்துக்கட்டவேண்டும் என்று அவனுக்கு எண்ணம் இருந்தது.
அந்த நேரத்தில் வீரபாண்டிய கட்டபொம்மு வெளிநாட்டவரான பிரிட்டிஷார் விதித்திருந்த வரிகளை எதிர்த்து நின்றிருந்தார். தீர்த்தகிரியின் வீரத்தை பற்றி கேள்விபட்டு அவனுக்கு அழைப்பு கொடுத்தார். இருவரும் சேர்ந்து பிரிட்டிஷார்களை தாக்கினார்கள். இது முதல் பாளையக்காரர் போர் என்று அழைக்கப்படுகிறது. இதில் கட்டபொம்முவும் தீர்த்தகிரியும் அவர்களுடன் இனைந்து போரிட்டவர்களும் மிக வீரமாக சண்டையிட்டனர், பல பிரிட்டிஷார்களை வீழ்த்தினார், அனால் வெற்றி பெரும் தருணத்தில், புதுக்கோட்டை ராஜா செய்த த்ரோகத்தினால் கட்டபொம்முவை பிரிட்டிஷார் பிடித்து கொன்றுவிட்டனர். இது தீர்த்தகிரியை மிகவும் பாதித்தது.
கட்டபொம்முவின் சகோதரரான ஊமைதுரையும் சிவகங்கையை சேர்ந்த மருது சகோதரர்களும் தீர்த்தகிரியுடன் சேர்ந்து மீண்டும் போருக்கு தயாரானார்கள். 1782ல் ஹைதர் அலி இறந்து, அவன் மகன் திப்பு சுல்தான் மைசூர் ராஜாவாக ஆனான். அவன் பிரிட்டிஷாருக்கு எதிராக யுத்தம் இடும் எண்ணமுடையவன் என்று அறிந்து, ஹைதர் அலியின் மகனாக இருந்தாலும் அவனுடன் தீரன் சின்னமலை சேர்ந்து பிரிட்டிஷாரை எதிர்த்து போரிட்டான். அவர்கள் பிரெஞ்சு மன்னர் நெப்போலியன் போனபார்ட்டின் உதவியுடன் பீரங்கி மற்றும் துப்பாக்கி சூட்டில் பயிற்சிபெற்று பிரிட்டிஷார்களை எதிர்க்கிறார்கள். இது இரண்டாம் பாளையக்காரர் போர். இந்த போரிலும் தீர்த்தகிரி கூட்டணி பிரிட்டிஷாரை வீழ்த்தி வென்றுவிட்ட்டார்கள் ஆனால் திப்பு சுல்தான் கொல்லப்பட்டான்.
மூன்றாம் முறை கூட்டணி தீர்த்தகிரி தலைமையில் அமைகிறது. அவர் மராட்டியர்களும் கேரளத்தின் பழசி ராஜாவுடனும் கூட்டணி அமைத்துக் கொண்டு கோயம்புத்தூரில் பிரிட்டிஷை தாக்க திட்டமிட்டனர் ஆனால் இந்த ரகசிய விஷயம் எப்படியோ வெளியாகி தீர்த்தகிரியின் ஆட்களைத் தவிர மற்ற அனைத்து கூட்டணி சக்திகளும் அவர்களால் தடுக்கப்படுகின்றன. அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர், ஆனால் தீர்த்தகிரி தப்பிக்கிறார். இது மூன்றாம் பாளையக்காரர் போர்.
இதற்குப் பிறகு அவர் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக 1801-ல் காவிரி போர், 1802-ல் ஓடநிலை போர் மற்றும் 1804-ல் அரச்சலூர் போர் உட்பட பல போர்களில் வெற்றி கொண்டார்.
ஆங்கிலேயர்கள் பின்பற்றும் கள்ள கபட உத்திகளைப் புரிந்துகொண்டு, போர் விதிகளை மீற முடிவு செய்து, கொரில்லாப் போரை நடத்தத் திட்டமிடுகிறார். தீரன் சின்னமலையின் சக்தியை உணர்ந்து பிரிட்டிஷார் அவரை குறிவைக்கின்றனர். தலைமறைவாக இருந்தவன் நல்லப்பன் என்ற சமையற்காரன் வீட்டில் சாப்பிட்டு வந்தவன் என்ற விஷயத்தை பிரிட்டிஷாருக்கு தெரிய வருகிறது. நல்லப்பனை மிரட்டி தங்களுக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறார்கள். அவரும் அவ்வாறே செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அவரைப் பிடிக்க ஒரு பெரிய படை திரட்டப்படுகிறது, அவரை பிடிக்கிறார்கள். தீரன் சின்னமலை 1805-ம் ஆண்டு, 49 வயதில் சேலத்தில் உள்ள சங்கரியில் தூக்கிலிடப்படுகிறார்.
தீர்த்தகிரியின் நினைவாக சென்னை சைதாப்பேட்டையில் அவர் பெயரில் சின்னமலை என்ற இடம் அமைந்திருக்கிறது. [இதனை இன்று ஆங்கிலத்தில் Little Mount என்று தவறாக மொழிபெயர்க்கப்படுகிறது]. அவரை நினைவுகூரும் வகையில் அவர் சிலை சென்னை கிண்டியில் அரசு அமைத்துள்ளது. அவருக்கு ஒரு எழில்மிகு நினைவாலயம் ஈரோடு ஓடாநிலையில் தமிழக அரசு அமைத்துள்ளது.
அவரை நினைவுகூரும் வகையில் அவருக்கு ஒரு எழில்மிகு நினைவாலயம் ஈரோடு ஓடநிலையில் தமிழக அரசு அமைத்துள்ளது. மேலும் சென்னை கிண்டியில் அவருடைய சிலையுருவமும் சேலத்திற்கும் ஈரோட்டிற்கும் இடையில் உள்ள சங்ககிரி கோட்டையில் அவருக்கு ஒரு நினைவுத்தூணும் அரசு அமைத்துள்ளது.
தீரன் சின்னமலையின் வீரமும் சக்தியும் செல்வாக்கும் திட்டமிட்டு செயல்படுத்தும் திறனும் ஒன்று சேர்ந்து இருந்ததை பார்த்தல் இன்றும் வியப்பூட்டுகின்றன. இவை அனைத்தும் அவர் துளியும் சுயநலமில்லாமல் தேசத்திற்க்கென்று செய்தார் என்பதை நாம் என்றும் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்!
கட்டுரையாளர்:- திருமதி. யமுனா ஹர்ஷா