ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்
அகில பாரதிய பிரதிநிதி சபா 2025 (பொதுக்குழுக் கூட்டம்)
மார்ச் 21-23, 2025
ஜனசேவா வித்யா கேந்திரம், சன்னேனஹள்ளி, பெங்களூரு
பாரதத்தின் ஒப்பற்ற விடுதலை வீராங்கனைகளில் ஒருவரான மஹாராணி அப்பக்கா அவர்களின் 500-வது பிறந்தநாளை முன்னிட்டு சர்காரியவா தத்தாத்ரேய ஹோசபலே அவர்களின் அறிக்கை.
பாரதத்தின் தன்னிகரற்ற விடுதலை வீராங்கனைகளில் ஒருவரான தென் கர்நாடகத்தில் உள்ள உல்லால் சமஸ்தான மஹாராணி, அப்பக்கா ஒரு தலைசிறந்த ஆட்சியாளர், சிறந்த போர் வீராங்கனை, சாலச்சிறந்த நிர்வாகி. மஹாராணி அப்பக்கா அவர்களின் 500-வது பிறந்தநாளில் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங் அவர்களின் நினைவைப் போற்றி, அன்னாரது வீர பராக்கிரமங்களை நினைவுகூருகிறது.
அக்காலத்தில் உலகில் தோற்கடிக்க முடியாத மிகப்பலமான ராணுவங்களில் ஒன்றான போர்த்துகீசியப் படையை பலமுறை தோற்கடித்துத் துரத்திய பெருமை பொருந்திய மஹாராணி, அப்பக்கா. இப்படி தன் உல்லால் சமஸ்தானத்தின் விடுதலையை போற்றிப் பாதுகாத்த அவர் வடக்கு கேரளப் பகுதிகளை ஆண்ட சாமுத்திரி மன்னருடன் நட்புறவு பேணி, அந்நிய அச்சுறுத்தலை மிகச் சாதுரியமாக சமாளித்தார். சரித்திர ஆர்வலர்கள் இவரை “அபயராணி” அல்லது “பயம்கொள்ளா அரசி” என்று அழைக்கின்றனர்.
மஹாராணி அப்பக்கா, பாரத கலாச்சாரத்தின் மூலக்கூறான “யாவரும் கேளிர்” என்ற தத்துவத்தின் படி அனைவரையும் அரவணைத்து, சமஸ்தானத்தில் வசித்த அனைத்து மதத்தினரையும் ஒரு தாய்ப்பிள்ளைகளாய் பாவித்து நல்லாட்சி செய்தார் – சமுதாயத்தின் அனைத்து தரப்பினருக்குமான வளர்ச்சிக்காக தன்னை அர்பணித்துக்கொண்டார். மஹாராணி அப்பக்கா, பல சிவன் கோவில்களையும் தீர்த்தஸ்தலங்களையும் புனர்நிர்மாணம் செய்து பராமரிக்க வழிவகை செய்தார். மஹாராணி அப்பக்கா விட்டுச்சென்ற மரபு கர்நாடக மாநிலத்தில் இன்றும் தொடர்கிறது, அன்னாரின் வீர சரித்திரம் – யக்ஷ கான பரம்பரையிலும், நாட்டுப்புறப் பாடல்களாகவும், பாரம்பரிய நடனங்களாகவும், சிறு கதைகளாகவும் இன்றும் போற்றிப் பேணப்படுகிறது.
மஹாராணி அப்பக்காவின் இணையில்லா வீரத்தையும், தர்மத்திற்கும் தேசத்திற்கும் அவர் செய்த மாசற்ற பணிகளையும் போற்றும் விதமாக பாரத அரசு 2003ல் ஒரு தபால் தலை வெளியிட்டது. 2009ல் பாரத அரசு, கடலோரக்காவல் படையின் ஒரு ரோந்து கப்பலுக்கு ICGS மஹாராணி அப்பக்கா என்று பெயரிட்டு பெருமைசேர்த்தது.
மஹாராணி அப்பக்காவின் வரலாறு நம் பாரத தேசத்தில் அனைவருக்குமான ஒரு கிரியாஊக்கி, நம்மை வழிநடத்தும் கலங்கரை விளக்கம். அவரது 500-வது பிறந்த தின ஜெயந்தியை முன்னிட்டு அவர் புகழ் போற்றி வணங்குவதில் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங் பெருமிதம் கொள்கிறது. மஹாராணி அப்பக்காவின் வீர வரலாறு பாரத மக்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு. அது நமக்குச் சொல்லும் பாடங்கள் பாரதத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்லும் நம் முயற்சிக்கு ஒரு நல்ல உத்வேகத்தை கொடுக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.