ப ஞ் சா மி ர் த ம்
இன்று (2024 ஜூலை 21) பௌர்ணமி; பஞ்சாமிர்தம் வாசியுங்கள்
1 சித்தம் சிவ மயம், செய்தொழில் அற்புதம்
கடந்த 10 ஆண்டுகளாக மயிலாடுதுறை மயூரநாதர் சிவன் கோயிலின் நான்கு தேரோடும் வீதிகளை சுத்தம் செய்தபடியே திருஞானசம்பந்தர் பாடிய தேவாரப் பாடலை பாடுகிறார், நகராட்சியின் ஒப்பந்த தூய்மைப் பணியாளர் மீனாட்சி. ‘பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக தினமும் கோவிலை தரிசிக்க வரும் எத்தனையோ லட்சம் மக்களின் துயரை இந்த இறைவன் தீர்த்து
வைத்திருப்பார். இந்த இறைவனை நாம் ஏன் அசட்டை செய்கிறோம்?’ என்று தோன்றவே, தன்னையும் அறியாமல் ஒரு ஈடுபாடு ஏற்படத் தொடங்கியதாக கூறுகிறார் பட்டியல் சமூகத்தவரான மீனாட்சி. அதன் பின் கோயிலின் வரலாற்றை படித்து பெருமைகளை அறிந்து கொண்டார். தினமும் கோயில் வீதியை சுத்தம் செய்தால் மட்டும் போதுமா இறைவன் மனதில் இடம் பிடிக்க வேண்டாமா என்று மனதில் தோன்ற இவர் தேவார திருவாசகப் பாடல்களை வீட்டில் உட்கார்ந்து படித்து அதை தனது வேலை நேரத்தில் ஓதுகிறார். அப்போது மனதில் தெய்வ பக்தியுடன், சமூக சிந்தனையும் ஏற்படுகிறது, மனதில் தூய்மையான எண்ணங்கள் வருகிறது என்கிறார். சிவபெருமானிடம் கொண்ட அபார பக்தியினால் நேர்த்தியுடன் கடமை செய்து வருகிறார். இவரது தெய்வ சிந்தனை மேலும் மேலும் வளரட்டும் என இவரை வாழ்த்துவோம். இவருடைய அலைபேசி எண் 9488918773.
ஆதாரம்: பி.எஸ்.கே / இன்ஸ்டகிராம்
2 பள்ளி மாணவனின் நல்ல உள்ளம்
ஐந்து குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியிருக்கிறார் கர்நாடகா என். சி. சி பட்டாலியன் 8 அணியை சேர்ந்த கேடட் யதின் ஏ ஸாயி. ஜூன் 2 அன்று பெங்களூரு பிருந்தாவன் அப்பார்ட்மெண்ட் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததில் பேஸ்மென்ட் பகுதியில் ஏராளமாக தண்ணீர் புகுந்தது. அந்த பகுதியில் தான் உயர் மின் அழுத்த மெயின் லைன் இருந்தது. அபாயப் பகுதிக்கு மிக அருகில் ஐந்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்ததை அந்த அப்பார்ட்மெண்ட் வாசியான 17 வயது யதின் பார்த்தார். பாய்ந்து சென்று குழந்தைகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மின்கசிவை தடுப்பதற்காக மெயின் ஸ்விட்சை அணைக்க முயற்சி செய்யும்போது ஷாக் அடித்தது. மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்பார்ட்மென்ட் வாசிகளும் அவரது பள்ளிக்கூட நிர்வாகத்தினரும் அவரை அவரது பக்குவம், துணிச்சல், சமயோசிதம் ஆகியவற்றுக்காக பாராட்டினார்கள்.
ஆதாரம்: த டைம்ஸ் ஆப் இந்தியா / 2024 ஜூலை 9.
3 ஒரு மக்கள் பிரதிநிதியின் மனது
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள ஜவகர்லால் நேரு மருத்துவமனை பிணியாளர்களின் குடும்பத்தாருக்கு ஒரு ரூபாயில் சாப்பாடு கிடைக்க தொகுதி பாஜக எம்.எல்.ஏ வாசுதேவ் தேவனானி, சுவாபிமான் டிரஸ்ட் உதவியுடன் ஏற்பாடு செய்துள்ளார். தங்கும் வசதி, குடி தண்ணீர் வசதி ஆகியவற்றையும் ஏற்பாடு செய்யும்படி மருத்துவமனை நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளார். பிணியாளர்கள் உடல்நிலை குறித்து தகவல் தரும்படியும் உணவருந்தும் கூடம் ஏற்பாடு செய்யும்படியும் உத்தரவிட்டுள்ளார். அருகில் உள்ள அன்னபூர்ணா உணவகத்திலும் எட்டு ரூபாய்க்கு சாப்பாடு கிடைக்க ஏற்பாடு செய்துள்ளார். பாலிடெக்னிக் விரிவுரையாளராக இருந்த இவர் சட்டப்பேரவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஆதாரம்: த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் 2024 ஜூலை 8
4 வனவாசி மக்கள் ‘செப்பு’ மொழி பதினெட்டு!
தேசிய கல்விக் கொள்கையின் கீழ் சத்தீஸ்கரில் வனவாசி (பழங்குடி) பகுதியான ஜஷ்பூரை அடுத்த பகியா கிராமத்தில் ‘சாதரி’ என்ற வட்டார மொழியில் கல்வி கற்பிக்கப்படுகிறது. மாணவர்கள், ஆசிரியர்கள் பெற்ற அனுபவத்தை பகிர்ந்து கொள்கையில் மாநில முதல்வர் விஷ்ணு தேவ சாயி, இனி 18 வனவாசி மக்கள் பேச்சுவழக்கு மொழிகளில் தொடக்கக் கல்வி அளிக்கப்படும் என்று தெரிவித்தார். எழுத்தறிவு தேசிய அளவில் 76 சதவீதமாக இருக்கையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் அது 71 சதவீதமாக உள்ளது – குறிப்பாக வனவாசி பகுதிகளில் – என்பது குறித்து அரசு கவலை தெரிவித்துள்ளது. எனவே பல்வேறு மொழிகளில் கல்வி கற்பிக்கப்படுவதுடன் வனவாசி மக்கள் பகுதி பேச்சு வழக்கு மொழிகளும் பாடத் திட்டத்தில் சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதாரம்: த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் / 2024 ஜூலை 8
5 சீமையில் சிந்தை கவரும் சனாதனம்
இங்கிலாந்து ஹாரோ பகுதியில் வசிக்கும் இந்திய வம்சாவளி தொடக்கப்பள்ளி மாணவி போதனா சிவானந்தத்திற்கு வயது எட்டு. அதற்குள் இங்கிலாந்து மகளிர் செஸ் பயிற்சியாளர் லோரினா தி கோஸ்டா, பல கிராண்ட் மாஸ்டர்கள் ஆகியோரை ஒரு போட்டித் தொடரில் வென்று விட்டாள். அவளுக்கு ஐந்து வயது இருக்கும்போது அவளுடைய தந்தை வீட்டில் கிடந்த ஒரு செஸ் அட்டையை குப்பையில் போடப் போனார். அதை வைத்து விளையாடத் தொடங்கியவள்தான் போதனா. உலகெங்கும் கொரோனாவால் முழு அடைப்பு இருந்தபோது வீட்டிலேயே போதனாவின் செஸ் தவம் தொடர்ந்து நடந்தது. விளைவு, இன்று போதனா ஐரோப்பாவின் செஸ் பேரரசி. இத்தனைக்கும் நடுவில், உலகமே வியப்புடன் பேசிக் கொள்ளும் ஒரு விஷயம் போதனா நெற்றியில் கம்பீரமாக காட்சியளிக்கும் திருநீறு, குங்குமம் ஆகிய சனாதன ஹிந்து சமய சின்னங்கள்தான்.
ஆதாரம்: உலக ஊடகங்கள்
0000000000000000000