பஞ்சாமிர்தம்

VSK TN
    
 
     

ப ஞ் சா மி ர் த ம்

இன்று (2024 செப்டம்பர் 17) பௌர்ணமி; பஞ்சாமிர்தம் வாசியுங்கள்

1 சந்தியுங்கள்: ஆக்ராவின் ‘ரோட்டீவாலீ அம்மா’வை

ஆக்ரா நகரின் பரபரப்பான எம்.ஜி சாலை நடைபாதையில் ஒரு மண் அடுப்பு எரிகிறது, அது ‘ரோட்டீவாலீ அம்மா’ என்று அறியப்படும் மூதாட்டி பகவான் தேவியின் அடுப்பு. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு, அவரது கணவர் சரண் சிங் உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கை ஆனார். இரண்டு மகன்களும் இவர்களை விட்டுவிட்டு ஒதுங்கிக் கொண்டு விட்டார்கள். ஒரு நாளைக்கு 15 ரூபாய் கூலி கிடைக்கும் ஒரு இடத்தில் வேலை செய்தார். சில நாட்களுக்குப் பிறகு கணவர் போய்விட்டார், பிறகு அம்மா இங்கேயே அடுப்புப் பற்ற வைத்தார். சப்பாத்தி செய்து விற்று வாழ்க்கை நடத்துகிறார். தினமும் 500 முதல் 600 ரூபாய் வரை சம்பாதித்தார். லாக்டவுன் காலத்தில் வியாபாரம் நின்று போனது; கடன் வாங்கி காலம் கழித்தார். இப்போது மறுபடியும் கடை திறந்துவிட்டார். நான்கு ரொட்டி, ஒரு சப்ஜிக்கு 20 ரூபாய் வாங்குகிறார். யாரும் உதவவில்லையா என்று கேட்டால், “நான் உழைக்கிறேன், சம்பாதிக்கிறேன், சாப்பிடுகிறேன். யார் கையையும் ஏன் நம்பி இருக்க வேண்டும்?” என்கிறார்.

ஆதாரம்: தைனிக் ஜாகரண், 2020 அக்டோபர் 22.

2 ராமனை, கண்ணனைப் போற்றும் இந்தோனேசிய முஸ்லிம்கள்

புகழ்பெற்ற சமஸ்கிருத-ஹிந்தி இலக்கியவாதியும் நவ பாரத் டைம்ஸ் பத்திரிகை ஆசிரியருமான டாக்டர் வித்யா நிவாஸ் மிஸ்ரா (1926-2005) முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள இந்தோனேசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அந்த நாட்டில் உள்ள சில பழங்கால நினைவுச் சின்னங்களைப் பார்வையிட புறப்பட்டார். அவருடன் சென்றவர் சுதர்சன்; அந்நாட்டு கலைத்துறை இயக்குனர். சுதர்சன் ஒரு முஸ்லிம். போரோபுதூருக்குச் செல்லும் வழியில், பளிங்குப் பலகைகளில் சிலர் எழுத்துக்களை பொறிப்பதைப் பார்த்தனர். அது என்னவென்று அறிய மிஸ்ரா விரும்பினார். சுதர்சன் விளக்கினார்: “யாராவது இறந்தால் கல்லறையில் மகாபாரதத்தின் அல்லது ராமாயணத்தின் ஒரு வசனத்தை ஜாவானிய மொழியில் பொறிப்பது எங்கள் வழக்கம். நாங்கள் முஸ்லீம்களாக இருந்தாலும், ராமரையும் கிருஷ்ணரையும் ஆழ்ந்த பக்தியோடு வணங்குகிறோம்”. இதைக் கேட்டு மிஸ்ரா ஆச்சரியமடைந்ததைக் கண்டறிந்த சுதர்சன் மேலும் கூறினார்: “நாங்கள் 700 ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டிருக்கலாம். ஆனால், எங்கள் முன்னோர்களை முற்றிலும் மறந்துவிட வேண்டும் என்பதில்லை. ராமாயணமும் மகாபாரதமும் இன்றும் எங்களுக்கு உத்வேகம் அளிக்கின்றன.” மிஸ்ராஜி அந்த இந்தோனேசிய முஸ்லீம் அறிஞரின் முகத்தையே பார்த்தபடி  மௌனமானார்.

ஆதாரம்: கேசவ் சம்வாத் வார  இதழ், 2007 ஆகஸ்ட் 7.

3 சென்னை சென்ட்ரல் செந்தாமரையின் பொன் மனம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஏப்ரல் 21 அன்று நடைமேடையில் தங்கச் சங்கிலியைக் கண்ட தூய்மைப் பணியாளரான பெண்மணி செந்தாமரை, அதை ரயில்வே போலீஸாரிடம் ஒப்படைத்தார். அவர் ஒரு நாற்காலிக்கு அடியில் சங்கிலியைக் கண்டதாக போலீசார் தெரிவித்தனர். காணாமல் போன விலை உயர்ந்த பொருளை தேடி யாரும் வராததால், அதை ரோந்து பணியில் இருந்த ஜிஆர்பி (அரசு ரயில்வே போலீஸ்) சப்-இன்ஸ்பெக்டர் மார்கபந்துவிடம் ஒப்படைத்தார். செயின் சுமார் 32 கிராம் எடையுள்ளதாக பொலீஸார் தெரிவித்தனர். செந்தாமரையை அவரது நேர்மைக்காக ரயில்வே காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டினர். காணாமல் போன பொருட்கள் குறித்த ஆவணங்கள் அல்லது விவரங்களுடன் பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறை அதிகாரிகளை அணுகினால், போலீசார் தங்கச் சங்கிலியைத் திருப்பித் தருவார்கள் என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம்: DTNEXT, சென்னை ஆங்கில நாளிதழ், 2023 ஏப்ரல் 26.

  1. நிமல் ராகவன்: நிஜ வாழ்வில் ஒரு ஹீரோ

நிமல் ராகவன் துபாயில் லாபகரமான ஒரு ஐ.டி வேலையில் இருந்தார். 2018ல்  கஜா புயல் அழிவின் தடத்தை விட்டுச் சென்றது. வீடுகள் இடிந்து விழுந்தன, தென்னை மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டன, நீர் ஆதாரங்கள் மாசுபட்டன. பேராவூரணியில் அவரது சொந்த விவசாயக் குடும்பம் கணிசமான இழப்புகளைச் சந்தித்தது. துபாய் வேலையை உதறினார். பலரைக் கூட்டி மீட்புப் பணி செய்தார். ஊரில் விவசாயிகள் நெல் விவசாயத்தைக் கைவிட்டு தென்னை விவசாயத்திற்கு மாறியிருப்பதை கண்டார். காரணம் நெல்லுக்கு அதிக தண்ணீர் தேவை. ஏரி, குளம் கண்மாய் இவற்றில் தண்ணீர் இல்லை. அதற்கு காரணம் ஆக்கிரமிப்பு, தூர்வாராதது. தான் என்ன செய்ய வேண்டும் என்று ராகவனுக்கு தெரிந்து விட்டது. 564 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள பேராவூரணி ஏரியுடன் அவரது பயணம் தொடங்கியது. ஏரியை ஆழப்படுத்தினர் ஏரி நிறைந்தது; சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீர் 350 அடியில் இருந்து 40 அடிக்கு உயர்ந்தது. இவ்வாறு நாடு நெடுக ஒவ்வொன்றாக நீர்நிலைகளை புத்துயிர் பெறச் செய்தார். இது வரை 140 குளங்களை புதுப்பித்துவிட்டார். இந்த மாற்றத்திற்கு ஊர்மக்கள் முன்வந்து உடன் உழைத்து நிதியும் வழங்கச் செய்தார். அதுதான் ராகவனின் சிறப்பு.

ஆதாரம்: ஸ்டேட்ஸ்மேன் வெப், 2023 அக்டோபர் 2.

5 வீரர்கள் தந்த வீரம் வெற்றி தந்தது!

ஆண்டு 2009 ல் சிறுவன் நிதேஷ் குமார் ரயில் விபத்தில் இடது காலை இழந்தார். அவர் பாரத கப்பற்படை அதிகாரி விஜேந்திர சிங்கின் புதல்வர். ஆறு மாதம். படுத்த படுக்கையாய் இருந்த அவருக்கு வாழ்க்கையே அஸ்தமித்துப் போனதாக தோன்றியது. எதிர்பாராத இடத்திலிருந்து உந்துதல் கிடைத்தது.  புணே நகரில் உள்ள செயற்கை கால் மையம் சென்றார். அங்கே கார்கில் போரில் கால் இழந்த  ராணுவ வீரர்கள் விளையாடிக் கொண்டிருப்பதை 15 வயது  நிதேஷ் பார்த்தார். சில நாட்களில் அவர்களுடன் விளையாட்டில் சேர்ந்துகொண்டார். விரைவில் ஐஐடி நுழைவுத் தேர்வில் வென்று ஹிமாச்சல் பிரதேசம் ஐஐடி மண்டியில் மின்பொறியியல் தேறினார். இதற்குள் அவர் பாரா-பாட்மிண்டன் ஆட்டத்தில் கொடிகட்டிப் பறந்தார். அண்மையில் பாரிஸ் பாராஒலிம்பிக்ஸில் பாரதத்திற்கு தங்கம் வென்றார்.

ஆதாரம்: த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், 2024 செப்டம்பர் 3.

00000000000000000000

Next Post

पंचाम्रित

Tue Sep 17 , 2024
VSK TN      Tweet    ।। पंचाम्रित ।। आज (2024 सेप्टंबर 17) पूर्णिमा है, और आपके समक्ष ‘पंचाम्रित’!  1 मिलिए: आगरा की रोटीवाली अम्मा से आगरा शहर के व्यस्त एम.जी रोड फुटपाथ पर मिट्टी का चूल्हा जलता है। यह चूल्हा बुजुर्ग भगवान देवी का है, जो ‘रोटीवाले अम्मा’ के नाम से मशहूर हैं। करीब […]

You May Like