பஞ்சாமிர்தம் – செப்டம்பர்

VSK TN
    
 
     

ப ஞ் சா மி ர் த ம்

இன்று (2024 செப்டம்பர் 2) அமாவாசை; பஞ்சாமிர்தம் வாசியுங்கள்

  1. சமுதாயத்திற்கு தனிநபர் இப்படியும் பங்களிக்கலாம்

மதுரையில் உள்ள ஏழுமலை ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிப்பு முடித்த மாணவர் பீமன், திண்டுக்கல் அருகே உள்ள காந்திகிராம கிராமப்புற கல்லூரியில் பொருளாதாரப் படிப்பைத் தொடர்கிறார். “இந்தப் பள்ளி, அதன் ஆசிரியர்கள் நல்லாதரவு இல்லாமல் இது சாத்தியமில்லை” என்கிறார்  பீமனின் தந்தை கொத்தனார் அழகுமுருகன். சமீபத்தில் பள்ளிக் கட்டிடத்தின் பராமரிப்புப் பணி மேற்கொள்ளுமாறு ஆசிரியர்கள் கேட்டபோது, அவர் உடனடியாக ஒப்புக்கொண்டார். மூன்று நாட்களில் பணி முடித்தார். ஆசிரியர்கள் அவருக்கு சம்பளம் கொடுக்க முயன்றபோது அவர் அதை கண்டிப்புடன் மறுத்துவிட்டார். “பீமன் காந்திகிராம கல்லூரியில் சேர தயாராகிக் கொண்டிருந்த போது விடுமுறை நாட்களில் அவருக்குப் பயிற்சி அளித்து, ஆங்கிலம் பேசக் கற்றுக் கொடுத்தேன். அந்த நேரத்தில், அவர் பள்ளியில் தோட்ட வேலை மேற்கொண்டார். அவரது தோட்ட வேலை பற்றி ஊடகங்களில் செய்தி வெளிவந்தது, பின்னர் ஒரு தனியார் ஸ்பான்சர் அவருக்கு உயர் படிப்புக்கு ரூ. 25,000 உதவித்தொகை வழங்கினார்” என்றார் அந்த பள்ளி ஆசிரியர். “நானும் எனது மகனும் பள்ளிக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளோம்; பள்ளிக்கும் அதன் மாணவர்களுக்கும் என்னால் முடிந்ததைச் செய்ய விரும்பினேன். இன்னும் நிறைய செய்யணும்னு ஆசை” என்கிறார் அழகுமுருகன்.

ஆதாரம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா, 2024 ஆகஸ்ட் 21. தகவல்: ஸ்ரீ பி. உமேஷ், மைசூரு.

2 நல்ல செய்தி என்றால் இது அல்லவா நல்ல செய்தி!

1 ஸ்ரீ கிருஷ்ணர் கம்சனை வதம் செய்த பிறகு கல்வி கற்க சாந்தீபனி முனிவரின் குருகுலத்திற்குப் போனார். அந்த குருகுலம் இருந்த இடம் உஜ்ஜயினி. 2 உஜ்ஜயினி மாவட்டத்திலேயே உள்ள நாராயணா என்னும் திருத்தலத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் குசேலரின் நட்பை அடைந்தார்; அங்கு அவர்கள் நட்பிற்கு ஒரு கோயிலும் உள்ளது. 3 திருமணம் செய்து கொள்வதற்காக ருக்மணியை ஸ்ரீ கிருஷ்ணர் கவர்ந்து வந்த போது எதிர்த்த ருக்மியை வீரதீரத்துடன் போராடி தோற்கடித்த இடம் உஜ்ஜயினியை அடுத்த தார் மாவட்டத்தில் அம்ஜேரா என்ற ஊர். 4 ஸ்ரீ கிருஷ்ணர் பக்தியுடனும் பணிவுடனும் பரசுராமரிடம் சுதர்சன சக்கரம் பெற்ற இடம் இந்தூர் அருகில் உள்ள ஜனப்பாவ் என்ற ஊர். கண்ணபிரான் தொடர்பான இந்த நான்கு சம்பவங்களும் நிகழ்ந்த ஊர்கள் மத்திய பிரதேச மாநிலத்தில் 150 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் அமைந்துள்ளன. இந்த நான்கையும் ஒருங்கிணைத்து ஆன்மிக சுற்றுலா தொகுப்பாக மேம்படுத்த இருப்பதாக மத்தியப் பிரதேச பாஜக அரசு அறிவித்தது. உலகெங்கும் உள்ள ஹிந்துக்களுக்கு, குறிப்பாக கிருஷ்ண பக்தர்களுக்கு, இது பேரானந்தத்தை அளிக்கிறது.

ஆதாரம் :  த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், 2024 ஆகஸ்டு 26.

3 ஹிந்துப் பெண் சிருஷ்டியை போற்றுகிறார்; இது உலகளாவிய சகோதரத்துவம்

அம்மா சப்பாத்தி சுட உட்காரும்போது, வீட்டுப் பிள்ளைகள், அடுப்பங்கரையை முற்றுகையிடுவோம். அம்மா முதல் உருண்டை மாவை எடுத்து, சிறிது நெய் தொட்டு, எங்களில் ஒருவரிடம் கொடுத்து, பசுமாட்டுக்கு ஊட்டிவிட்டு வரச் சொல்வார். பிறகுதான் அம்மா அடுப்பில் வாணலி வைப்பார்; அடுத்து கொஞ்சம்போல மாவை எடுத்து, நெய்தோய்த்து, அதால் வாணலியைத் துடைப்பார்; ஒரு ஓரமாக வைப்பார். அது எறும்புக்கு அல்லது காக்கைக்கு. அடுத்த முழு உருண்டை மாவை ரொட்டியாக தட்டுவார். இந்த முதல் ரொட்டியை ஒரு பக்கம் மட்டும் வேகவிட்டு, கடுகு எண்ணெய் தொட்டு, அதை தெரு நாய்க்குக் கொடுக்கச் சொல்வார். அடுத்த இரண்டு ரொட்டிகளும் தெருக்கோடி குருத்வாராவிற்கு. கூடவே கிண்ணத்தில் அன்றைய கூட்டு அல்லது தால். அதை ஏற்க அப்புறமாக குருத்வாரா பொறுப்பாளரான சர்தார்ஜியின் மனைவி வருவார். இதுபோல 40 வீடுகளில் அவர் சேகரிக்கும் உணவு அவர் குடும்பத்தினரும் பக்தர்களும் பசியாற உதவும். பசு, காகம், தெருநாய், குருத்வாரா என அனைவர் பங்கையும் அம்மா சமர்ப்பிக்கும் வரை நாங்கள் காத்திருப்போம். பசி இருந்தபோதிலும் காத்திருப்பது எங்களுக்கு நன்றாகவே இருந்தது.

ஆதாரம்: ஆங்கில நூல் ‘அன்னம் பஹு குர்வீத’, நூலாசிரியர் ஸ்ரீ ஜிதேந்திர பஜாஜ் (1996)

4 அக்காதாயியின் மனம் நிறைந்தது, ஊரார் வயிறும்தான்!

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் சுசட்டி கிராமத்தில் 2024 ஆகஸ்டு 25 அன்று ஊர்க்காரர்கள் 200 பேர் ஒன்றாக அமர்ந்து ‘ஹோளிகே ஊட்டா’ (போளி சகிதம் சாப்பாடு) விருந்து சாப்பிட்டார்கள். விருந்தளித்தவர் அந்த ஊரைச் சேர்ந்த அக்காதாயி லங்கோட்டி என்ற 65 வயது பெண்மணி. கர்நாடகாவில் குடும்பத் தலைவி ஒவ்வொருவருக்கும் மாதம் 2,000 ரூபாய்  வழங்குவோம் என்ற மாநில அரசின் கிரகலட்சுமி திட்டம் துவங்கப்பட்டு இடையில் நிறுத்தப்பட்டிருந்தது. “மீண்டும் அந்த திட்டம் தொடங்க வேண்டும், அப்படி நடந்தால் ஊரைக் கூட்டி சாப்பாடு போடுவேன்” என்று அக்காதாயி கிராமதேவதை அடவி லட்சுமி கோயிலில் நேர்ந்து கொண்டார். தற்போது திட்டம் மறுபடியும் தொடங்கிவிட்டதால் நேர்த்திக்கடனை செலுத்தும் விதத்தில் விருந்து படைத்தார். போளி தயாரிக்க கிராமத்துப் பெண்கள் 50 பேர் முன்வந்தார்கள். அது மட்டுமல்ல, அக்காதாயியின் நல்ல உள்ளத்தை கண்டு ஆளுக்கு 100 ரூபாயும் கொடுத்தார்கள். அக்காதாயி கிரகலட்சுமி திட்டத்தில் கிடைத்த தொகையில் சேமித்து வைத்திருந்த 10,000 ரூபாயை விருந்துக்கு செலவிட்டார். அவர் வீட்டில் அவரும் மனநிலை சரியில்லாத மகனும் மட்டும் தான். விவசாயம் பார்த்துக்கொண்டு எருமைப் பால் வியாபாரம் செய்யும் அக்காதாயியின் பக்தி, சக்தி வாய்ந்தது என்று ஊர்க்காரர்கள் சொல்கிறார்கள்.

ஆதாரம்: த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், 2024 ஆகஸ்டு 26.

5 சட்டத்தை மதித்தால்தான் சட்டத்திற்கு பலம்!

புதுக்கோட்டை மாவட்டத்தில்  உள்ள சிறிய நகரப் பஞ்சாயத்து (இன்று பேரூராட்சி) இலுப்பூரில் வரி வசூல், கடந்த 17 ஆண்டுகளாக 100 சதவீதத்தை எட்டியுள்ளது. டவுன் பஞ்சாயத்தில் வசிப்பவர்கள் அனைவரும் விவசாயப் பணிகளில் ஈடுபட்டு இந்த சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மாவட்டத்தில் உள்ள 8 டவுன் பஞ்சாயத்துகளில், 100 சதவீத வரி வசூலை எட்டிய ஒரே டவுன் பஞ்சாயத்து இலுப்பூர் ஆகும். மேலும், மாநிலம் முழுவதும் பல ஆண்டுகளாக தொடர்ந்து சாதனை படைத்த சில டவுன் பஞ்சாயத்துகளில் இதுவும் ஒன்று. 10 வார்டுகளில் 13,595 மக்கள் தொகை கொண்ட இலுப்பூர் நகர பஞ்சாயத்தில் 4,938 சொத்து மதிப்பீடுகளும், 407 தொழில் வரி மதிப்பீடுகளும் உள்ளன. 2014-15ல், சொத்துவரியாக ரூ.17 லட்சமும், தொழில் வரியாக ரூ.3.90 லட்சமும் வசூலிக்கப்பட்டது.

ஆதாரம்: த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், 2015 ஏப்ரல் 6.

000000000000000

Next Post

RSS Samanvay Baithak focused on Sangh centenary year celebrations, women safety, Bangladesh issue, conversion in TN.

Mon Sep 2 , 2024
VSK TN      Tweet       2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 , 2 ஆகிய தேதிகளில், கேரளா மாநிலத்தில், பாலக்காட்டில் சங்கத்தின் அகில பாரத ஒருங்கிணைப்பு (சமன்வய ) கூட்டம் நடைபெற்றது. அதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் கவலைக்குரிய அம்சங்கள் விவாதிக்கப்பட்டது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் பல அமைப்புகள், களத்தில் இருந்து அளித்த தகவல்கள் எங்களுக்கு அதிர்ச்சி அளித்தன. கிறிஸ்தவ மிஷினரிகள் மூலம் […]