பக்தி பாடல்கள் மூலம் எல்லோரையும் சென்றடைந்த T.M.சௌந்தரராஜன்

VSK TN
    
 
     

 

     டி.எம்.எஸ்’ என்றும், ‘டி. எம் சௌந்தரராஜன்’ என்று அழைக்கப்படும், ‘டி.எம்.எஸ்’ அவர்கள், 1946லிருந்து 2007 ஆம் ஆண்டு வரை, தமிழ்த் திரையுலகில் ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக இருந்து, தென்னிந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகர்களான எம்.ஜி. ராமச்சந்திரன், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன், ஜெய்ஷங்கர், ரவிச்சந்தர், நாகேஷ், என்.டி. ராமராவ், ஏ. நாகேஸ்வர ராவ், ரஞ்சன், காந்தா ராவ், டி.எஸ். பாலையா, ஜக்கையா போன்றோருக்குப் பின்னணிக் குரல் கொடுத்தவர். பின்னணித் துறையில், ‘டி.எம்.எஸ்’ மற்றும் ‘பி.சுசீலா’ அவர்களது ஜோடி பெரிதும் பேசப்பட்டது. அவர்கள் இருவரும் இணைந்து பல்வேறு திரைப்பாடல்களைப் பாடியுள்ளனர். திரைப்பாடல்கள் மட்டுமின்றி, பல பக்திப் பாடல்களையும் பாடிய டாக்டர் டி.எம். சௌந்தரராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகள் பற்றி காண்போம்.

டி.எம். சௌந்தரராஜன் அவர்கள், தமிழ்நாட்டில் மதுரையில், மார்ச் 24 ஆம் தேதி, 1922 ஆம் ஆண்டில், மீனாட்சி ஐயங்கார் என்பவருக்கு இரண்டாவது மகனாக ஒரு சௌராஷ்டிர பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். அவரது மூத்த சகோதரர், வேத நூல்களைக் கற்று அறிஞராகத் திகழ்ந்தவர்.

ஆரம்ப கால வாழ்க்கை

தன்னுடைய ஏழு வயதில் இருந்தே, தனது குரல்வளத்தின் மீது அக்கறைக் காட்டத் தொடங்கிய அவர், மதுரையிலுள்ள சௌராஷ்டிரா மேல்நிலைப் பள்ளியின் இசை ஆசிரியராக இருந்த சின்னகொண்டா சாரங்கபாணி பாகவதர் என்பவரிடம் கர்நாடக சங்கீதம் கற்றார். பின்னர், காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் முறையாக, இரண்டு ஆண்டுகள் இசைப் பயிற்சி பெற்ற அவர், தனது 21வது வயதிலிருந்து தனியாக கச்சேரிகளில் பாடி வந்தார். பல ஆண்டுகளாகக் கச்சேரிகளில் பாடிய அவரை, சுந்தரராவ் நட்கர்னி என்ற இயக்குனர் கவனித்தார். ஆகவே, அவரது அடுத்த படமான ‘கிருஷ்ண விஜயம்’ (1950) என்னும் திரைப்படத்தில் “ராதே நீ என்னை விட்டுப் போகாதேடி” என்ற பாடலைப் பாடுவதற்கு ஒப்பந்தம் செய்தார். இந்தப் படம், 1946ல் எடுக்கப்பட்டிருந்தாலும், 1950ல் தான் வெளியானது. இதில், டி.எம்.எஸ். அவர்கள் ஐந்து பாடல்கள் பாடியுள்ளார். இதுவே அவர் திரையுலகில் நுழைவதற்கான ஒரு வழியை வகுத்தது.

திரையுலக வாழ்க்கை

1950ல் வெளியான ‘கிருஷ்ண விஜயம்’ படத்தைத் தொடர்ந்து, அதே ஆண்டில் டி.எம். சௌந்தரராஜன் அவர்கள், ‘மந்திரி குமாரி’ என்ற படத்தில், ‘அன்னமிட்ட வீட்டிலே’ என்ற பாடலைப் பாடினார். பிறகு ‘தேவகி’, ‘சர்வாதிகாரி’ போன்ற படங்களில் பாடுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது. 1951ல் வெளியான ‘தேவகி’ என்ற படத்தில் வந்த ‘தீராத துயராலே’ என்ற பாடலைப் பாடி, நடிக்கவும் செய்திருந்தார். 1952ல், ‘வளையாபதி என்னும் படத்தில், ஜமுனா ராணியுடன் இணைந்து இரண்டு பாடல்களைப் பாடினார். இதற்குப் பின், சில ஆண்டுகள் வாய்ப்புகள் ஏதும் கிடைக்காமல் இருந்ததால், கே.வி. மகாதேவனுடன் இணைந்து பக்திப் பாடல்கள் பாடினார். 1955ல் வெளியான ‘செல்லபிள்ளை’ என்ற திரைப்படத்தில், ஆர். சுதர்சனம் அவர்களின் படைப்பான இரண்டு டூயட் பாடல்களை, எம்.எஸ். ராஜேஸ்வரியுடன் சேர்ந்து பாடினார்.

இதற்கிடையில், சிவாஜி கணேசன் அவர்களுக்குப் பின்னணிப் பாடிய சி.எஸ். ஜெயராமனுக்கு பதிலாக, டி.எம்.எஸ் அவர்களைப் பாட வைக்கும் நோக்கமாக மருதகாசி அவர்கள், அவரை இசையமைப்பாளார் ஜி. ராமநாதன் என்பவரிடம் அறிமுகம் செய்து வைத்தார். ‘சிவாஜி கணேசன் அவர்களுடைய குரலுக்கு டி.எம்.எஸ்ஸின் குரல் பொருந்துமா?’ என்று ஐயம் கொண்டார், இசையமைப்பாளார். ஆகவே, சிவாஜிக்கு, டி.எம்.எஸ்சை அறிமுகம் செய்து வைத்தார். ஒரிரண்டு சந்திப்புகளிலேயே, அவரது குரலைப் படித்த அவருக்கு, ‘சுந்தரி சௌந்தரி’ மற்றும் ‘ஏறாத மலைதனிலே’ என்ற பாடல்கள் பாட வாய்ப்பு கிடைத்தது. சிவாஜியின் குரலைப் போலவே, அவர் பாடியதால், மிகவம் மகிழ்ச்சி அடைந்த ஜி. ராமநாதன், அப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் பாட வாய்ப்பு வழங்கினார். மேலும், அப்படத்தின் எல்லா பாடல்களும் வெற்றிப் பெற்று, மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதால், டி.எம்.எஸ் அவர்கள் மிகவும் பிரபலமானார். பின்னர், ஆர். ஆர். பிலிம்ஸ் தயாரிப்பான ‘கூண்டுக்கிளி’ என்ற படத்தில், ‘கொஞ்சும் கிளியானப் பெண்ணை’ என்ற பாடலைப் பாடும் வாய்ப்பைக் கைப்பற்றினார், டி.எம்.எஸ். இந்தப் பாடலைக் கேட்ட எம்.ஜி.ராமசந்திரன் அவர்கள், அவரது குரல் வளத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்டு, அவரது அடுத்த படமான ‘மலைக்கள்ளன்’ என்ற திரைப்படத்தில், தஞ்சை ராமையா தாஸ் எழுதிய ‘எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்’ என்ற பாடலைப் பாடும் வாய்ப்பை வாங்கிக் கொடுத்தார். இந்தக் காலக்கட்டங்களில், இவருக்கு ‘வேடன் கண்ணப்பா’, ‘ரிஷி ஸ்ரிங்கார்’, ‘நீள மலைத் திருடன்’ போன்ற பாடங்களில் பாட வாய்ப்புகள் அடுத்தடுத்து வந்தது. பின்னர், ‘குமுதம்’ என்ற படத்தில், எம்.ஆர்.ராதா அவர்களின் குரலைப் பின்பற்றும் விதமாக, ‘சரக்கு இருந்தா அவுத்து விடு’ என்ற பாடலை, அவரைப் போலவே பாடி அனைவரின் மனத்தையும் கவர்ந்தார். 1955 ஆம் ஆண்டுக்குப் பின்னர், சிவாஜி அவர்களின் வற்புறுத்தலின் பேரில், அவருக்குப் பின்னணிப் பாடினார். 1977 ஆம் ஆண்டு வரை, எம்.ஜி.ஆரின் மறைவு வரை, மற்றும் 1995 வரை சிவாஜியின் மறைவு வரை அவர்கள் இருவருக்கும், அவரே பின்னணிப் பாடி வந்தார். 1950 களில் இருந்து 1980 வரை, தமிழ்த் திரையுலகின் பின்னணித் துறையில், முடிசூடாமன்னனாகத் திகழ்ந்தார்.

 

விருதுகளும், அங்கீகாரங்களும்

11000 தமிழ்ப் பட பாடல்களையும், 2500 பக்திப் பாடல்களையும் பாடி, பல்வேறு இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணிபுரிந்து, பல பாடல்களுக்கு இசையமைத்து, ‘பட்டினத்தார்’, ‘அருணகிரிநாதர்’, ‘கல்லும் கனியாகும்’ & ‘கவிராஜ காலமேகம்’ போன்ற சில தமிழ்ப் படங்களில் நடித்த டி.எம். சௌந்தரராஜன் அவர்கள் பெற்ற விருதுகளும், அங்கீகாரங்களும் எண்ணிலடங்காதவை.

அவருக்குக் கிடைத்த விருதுகள் மற்றும் அங்கீகாரங்களில் சில

  • 2012 – ‘கைராலி ஸ்வராலயா யேசுதாஸ் விருது’
  • 2003 – இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்ம ஸ்ரீ விருது’ வழங்கப்பட்டது.
  • தமிழ்நாடு அரசின் ‘கலைமாமணி விருது’ பெற்றார்.
  • “பாரத் கலாச்சார் ” விருது
  • “சவுராஷ்டிரா சமூக அங்கீகாரம்” விருது
  • வாழ்நாள் சாதனையாளர் எம்.ஜி. ஆர் நினைவு விருது
  • வாழ்நாள் சாதனையாளர் சிவாஜி நினைவு விருது

‘பாடகர் திலகம்’, சிங்கக் குரலோன்’, ‘இசை சக்கரவர்த்தி’, இசைக்கடல்’, ‘எழிலிசை மன்னர்’, ‘குரலரசர்’, ‘டாக்டர்’ பட்டம் போன்ற பல்வேறு பட்டங்களையும் பெற்றுள்ளார்.

  • 1964 – “அறிஞர் அண்ணாத்வாரியா அங்கீகாரம்” பெற்றார்.
  • மலேசிய, சிங்கப்பூர், பிரஞ்சு, ஐக்கிய ராஜ்யம், கனடா, சிட்னி, பிரிஸ்பேன், மெல்போர்ன், மற்றும் பெர்த்தில் வாழும் தமிழ் ரசிகர்களின் அங்கீகாரத்தையும் பல முறைப் பெற்றுள்ளார்.
  • மறைந்த பிரதமர் திருமதி. இந்திரா காந்தி மற்றும் மொரார்ஜி தேசாய் அவர்களிடமிருந்து தனிப்பட்ட பாராட்டுப் பெற்றார்.
  • இந்திய ஜனாதிபதிகளான டாக்டர் சர்வபள்ளி ராதாக்ருஷ்ணன், வி.வி.கிரி, ஆர் வெங்கட்ராமன், மற்றும் ஜெயில் சிங் போன்றோரிடமிருந்தும் தனிப்பட்ட பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

– ஹேமந்த் குமார்

மதுரை

 

 

 

Next Post

நீர்நிலைகளை பாதுகாப்பதே பகவான் சேவை என்பதை அன்றே உணரவைத்த தண்டியடிகள் நாயனார்

Tue Mar 29 , 2022
VSK TN      Tweet    திரு தண்டியடிகள் நாயனார்       பெருவளம் கொழிக்கும் திருவாரூர் என்னும் பழமையான நகரம் சோழவளநாட்டில் உள்ள பல நகரங்களில் தலைசிறந்து விளங்கிய ஒன்றாகும். இத்தலத்திற்கு எத்தலமும் ஈடு இணையாகாது.      “ஆரூரில் பிறக்க முக்தி” எனபது ஆன்றோர் வாக்கு. இத்தகு பெருமைவாய்ந்த திருவாரூர் என்னும் தலத்தில் தண்டியடிகள் வாழ்ந்து வந்தார்.இவர் பிறவியிலேயே கண்பார்வை  இழந்தவர்.  புறக்கண்ணற்ற இவர் அகக்ககண்களால் திருவாரூர் தியாகேசப்பெருமானின் திருத்தாளினை இடையறாது […]