நீர்நிலைகளை பாதுகாப்பதே பகவான் சேவை என்பதை அன்றே உணரவைத்த தண்டியடிகள் நாயனார்

VSK TN
    
 
     

திரு தண்டியடிகள் நாயனார்

      பெருவளம் கொழிக்கும் திருவாரூர் என்னும் பழமையான நகரம் சோழவளநாட்டில் உள்ள பல நகரங்களில் தலைசிறந்து விளங்கிய ஒன்றாகும். இத்தலத்திற்கு எத்தலமும் ஈடு இணையாகாது.

     “ஆரூரில் பிறக்க முக்தி” எனபது ஆன்றோர் வாக்கு. இத்தகு பெருமைவாய்ந்த திருவாரூர் என்னும் தலத்தில் தண்டியடிகள் வாழ்ந்து வந்தார்.இவர் பிறவியிலேயே கண்பார்வை  இழந்தவர்.  புறக்கண்ணற்ற இவர் அகக்ககண்களால் திருவாரூர் தியாகேசப்பெருமானின் திருத்தாளினை இடையறாது வழிபட்டு வந்தார்.

     கண்ணற்ற அடிகளார் இறைவனின் அருளால், குளத்தின் நடுவிலும், குளத்தைச் சுற்றிலும் அடையாளமாக செடிகளை நட்டுக்கயிறும் கட்டினார். மண்ணைவெட்டிகூடையில் எடுத்துக்கொண்டு வந்து கொட்டுவார்.நாயன்மாரின் நல்லெண்ணத்தைப் புரிந்து கொள்ள சக்தியற்ற சில வேதநெறிக்கு எதிரான சில மூர்க்கர்கள், இடையூறு பல விளைவிக்கத்தொடங்கினர்.

வேதநெறி எதிர்ப்பாளர் சிலர், நாயனாரை அணுகி “இவ்வாறு நீங்கள் மண்ணைத்தோண்டுவதால், இக்குளத்திலுள்ள ஜீவராசிகளெல்லாம் இறந்துபோக நேரிடும். உமது செயல் அறத்திற்குப் புறம்பானது” என்றனர்.

இதற்கு தண்டியடிகள், “கல்லிலுள்ள தேரைக்கும், கருப்பை உயிருக்கும் நல்லுணர்வு தந்து காக்கும் ஈசனுக்கு, இந்த ஜீவராசிகளை எப்படிக் காக்க வேண்டும் என்பது தெரியும். திரிசடையானுக்கு நான் செய்யும் இப்பணியால், சிறு ஜீவராசிகளுக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் எவ்வித தீங்கும் நேராது” என்றார்

  வேதநெறி எதிர்ப்பாளர்கள் மேலும் மேலும் இவரை எள்ளிநகையாடவே, தண்டியடிகள் கோபமுற்று,”எம்பெருமானருளால் கண்ணொளி பெற்று, நீங்களனைவரும் கண்ணொளி இழக்கநேரிட்டால் என்ன செய்வீர்கள்? என வினவினார். வேதநெறி எதிர்ப்பாளர்கள்நாங்கள் ஊரைவிட்டு ஓடிடுவோம் என்று கூறி, அவர் கையிலிருந்த மண்வெட்டி,கூடை,செடிகளனைத்தையும் பிடுங்கி எறிந்தனர். அவர்களின் தீச்செயலாள் மனம்நொந்த நாயனார், எம்பெருமானிடம் தம் துயர்துடைக்க வேண்டினார்.

     அன்றிரவு இறைவன் நாயனாரின் கனவில் வந்து, “அன்பன், அஞ்சற்க,உம்மை பழித்தது என்னை பழித்தது போலவே, நீர் உமது திருத்தொண்டை இடையறாது செய்க, உமது கண்களுக்கு ஒளி தந்து காப்போம் மற்றும் உன்னை இகழ்ந்தவர்களின் கண்களை ஒளியிழக்க செய்வோம்” என்றார்.

      இறைவன், அரசர் கனவிலும் தோன்றி, “மன்னா, எனது திருத்தொண்டன் குளத்திலே திருப்பணி செய்கிறான், அவன் கருத்தை கேட்டறிந்து நியாயம் வழங்குவாயாக” எனக்கூறி மறைந்தார்.பொழுதுபுலர்ந்ததும் எம்பெருமானின் கட்டளையை நிறைவேற்ற அரசன் புறப்பட்டான்.

      தண்டியடிகளார் அனைத்து இடையூறுகளையும் கூறி, அரசனிடம் நியாயம் வழங்கவேண்டினார்.

   அரசன் வேதநெறி எதிர்ப்பாளர்களை அழைத்து அவர்தரப்பு விஷயங்களை கேட்டறிந்தார். அவர்களும் நாயன்மாரிடம் சினத்துடன் செப்பியதைப்பற்றி கூறினர்.தண்டியடிகள் கண்ணொளிபெற்றால் நாங்கள் இவ்வூரைவிட்டு  செல்வோம் எனக்கூறினர்.

   மன்னன், அமைச்சர், அவையாலோசகர்கள், அடிகளார் மற்றும் வேதநெறி எதிர்ப்பாளர்களுடன் கலந்துரையாடி ஓர் முடிவிற்கு வந்தார்.

     மன்னன் தவநெறிமிக்க தண்டியடிகளாரிடம், “நீர் எம்மிடம் கூறியது போல் எம்பெருமான் திருவருளால் கண்பார்வை பெற்று காட்டுவீராக!” என பணித்தார். அடிகளார், திருக்குளத்தில் இறங்கி, “திரிசடையானே, நான் தங்களுக்கு அடிமையென உலகறியச்செய்ய எனக்கு கண்ணொளிதந்து அருள்காட்டும்” என இறைவனை வேண்டி, ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதிக்கொண்டே நீரில் மூழ்கினார். இறைவன் திருவருளால், நீரிடை மூழ்கிய அடிகளார் கண்ணொளி பெற்று எழுந்தார். திருக்கோயில் கோபுரத்தைக் கண்டு ஆனந்தக்கண்ணீர் வடித்தார். கரம் தூக்கி தொழுதார். அரசனை வணங்கினார். மன்னனும் சிரம்தாழ்த்தி நாயனாரை வணங்கினான். அதே சமயத்தில், அரசன் வேதநெறி எதிர்ப்பாளர்களை ஊரைவிட்டுச் செல்லப்பணித்தார். அவர்களும் கண்ணொளி இழந்து குருடர்களாய் நின்று தவித்தனர்.

     தண்டியடிகளும் தான் எண்ணியபடி, திருக்குளத்தை பெரிதாக கட்டிமுடித்தார். அடிகளாரின் அறப்பணியை அரசரும், மக்களும் கொண்டாடி பெருமிதம் கொண்டனர்.

      நாயனார் நெடுநாள் இப்பூவுலகில் வாழ்ந்து பேரின்ப நிலையை எய்தினார்.

– கட்டுரையாளர் திருமதி ராஜேஸ்வரி

Next Post

வன்முறை மற்றும் அகிம்சை இரு வழியிலும் ஆங்கிலேயனை எதிர்த்த வ.வெ.சு.ஐயர்

Fri Apr 1 , 2022
VSK TN      Tweet      வ.வெ.சு.ஐயர்      “3 இனிஷியல்” பெற்ற சில பேர் தமிழகத்திலும் இந்தியாவிலும் சரித்திரம் படைத்துள்ளனர் என்பது மிகவும் விசித்திரமானது. அத்தகையோர் சில பெயர்களை நினைவுபடுத்துகிறோம்: எம்.ஜி.ஆர் [மருதூர் கோபாலன் ராமச்சந்திரன்] நன்கு அறியப்பட்ட பரோபகாரி, சுறுசுறுப்பான நடிகர், நேர்மையான அரசியல்வாதி மற்றும் எல்லாவற்றையும் விட ஒரு நல்ல மனிதர். பொறுத்திருங்கள் நான் எம்.ஜி.ஆரைப் பற்றி எழுதவில்லை. VOC [வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை], ஒரு பிடிவாதமான […]