சிவனுக்கே தாயான அம்மை
எம் ஆர் ஜம்புநாதன்
‘சிவன் தன் தாய், பக்தியும் தமிழும் தந்தாய்’ என்று சொல்லுமளவுக்கு , தொண்டிற்கு சிறந்த உதாரணமாய் விளங்கிய ஒரு மாதரசியைப் பற்றி அவரது பிறந்த நாளில் சிந்திப்போமே!
ஈசன் அவனல்லாது இல்லை எனநினைந்து
கூசி மனத்தகத்துக் கொண்டிருந்து – பேசி
மறவாது வாழ்வாரை மண்ணுலகத் தென்றும்
பிறவாமைக் காக்கும் பிரான். (திருவிரட்டை மணிமாலை)
என்ற பாடலில் எவ்வளவு அழகாக அனன்ய பக்தியை – இறைவன் பால் மாறாக் காதலை வெளிப்படுத்தி உள்ளார் பாருங்கள் !
பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாங் காதல்
சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன்
அவர்க்கே யெழுபிறப்பும் ஆளாவோம் என்றும்..
என்ற வரிகளைப் படிக்கையில் பின்னாளில் ஆண்டாள் அருளிய ‘எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் ..’ என்ற திருப்பாவை பாசுரம் நினைவுக்கு வருமே!
பக்தியின் நோக்கம் மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்து இறுதியில் வீடு பேறு என்னும் முக்தியை அடைவதே, இந்த அம்மை நமக்கெல்லாம் எப்படி வழி காட்டுகிறார் என்பதை சேக்கிழார் பெரியபுராணத்தில் கீழ்க் கண்ட பாடலில் குறிப்பிடுகிறார்:
இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி
அறவா நீ ஆடும்போதுன் அடியின் கீழிருக்க என்றார் (60)
‘அப்படியே ஆகட்டும்’ என்று சிவன் வாழ்த்த, பெருமான் நடன திருக்கோலத்துடன் விளங்கும் ஐந்து சபைகளில் ஒன்றான இரத்தின சபையாம் திருவாலங்காட்டில் (சென்னை- திருத்தணி பாதையில் சுமார் 6 கி.மீ. உள்ளே) இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர் தான் என்றைக்கும் நம் போற்றுதலுக்குரிய காராய்க்கால் அம்மையார்!
சிவனடியார்கள் அறுபத்து மூவர் வரலாற்றை எழுதிய சேக்கிழார், முப்பதாவதாக வரிசைப் படுத்தி, காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கையை 66 பாடல்கள் வாயிலாக மிகச் சிறப்பாக விளக்கியுள்ளார்.
சோழ நாட்டில் காரைக்கால் (இன்றைய புதுச்சேரி மாநிலம்) என்ற துறைமுக நகரில் தனதத்தன் என்ற பெரும் வணிகரின் மகளாக பிறந்தாள் புனிதவதி. பக்தி நெறியிலும் கோயில் திருப்பணிகளிலும் விருந்தோம்பலிலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட குடும்பம். அதனால் புனிதவதியும் இயல்பாகவே அவற்றைப் பின்பற்றினாள். ‘சிவனடியாருக்கு செய்யும் தொண்டு சிவனுக்கு செய்வதே’ என்று அவள் தாய் சொன்ன வாக்கு , புனிதவதிக்கு ஒரு தாரக மந்திரம்.
அதே சமயத்தில், நாகப்பட்டினத்தில் நிதிபதி என்ற வணிகர் வாழ்ந்து வந்தார். அவர் தனதத்தன் குடும்பத்தைப் பற்றியும் புனிதவதி பற்றியும் கேள்விப்படுகிறார். அவருடைய மகன் பரமதத்தனுக்கு புனிதவாதியை மண முடிக்க எண்ணி, கல்வியிலும் குணத்திலும் சிறந்த மூத்தவர்கள் இருவரை அனுப்பி முறைப்படி பேசி பெண் கேட்டு வரச்செய்கிறார். இருவீட்டார் மனமொப்பி, புனிதவதி – பரமதத்தன் திருமணம் இனிதே நிறைவேறுகிறது.
புனிதவதியைத் தவிர தனக்கு வேறு குழந்தை இல்லாத காரணத்தைச் சொல்லி வேண்டியதால் தனதத்தன் ஆசைப்படியே, பரமதத்தன் காரைக்காலிலேயே மாமனார் ஏற்படுத்திக் கொடுத்த தங்க நகை வியாபாரம் செய்ய ஒப்புக் கொள்கிறார். மாமனாரும் மனமகிழ்ந்து அவர்களை அருகாமையில் தனி வீட்டில் குடியமர்த்துகிறார். மனமொத்த தம்பதிகளாக வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கின்றனர் புனிதவதி-பரமதத்தன்.
புனிதவதியும் பதிவிரதா தர்மத்தை முழுமையாகக் கடைபிடிப்பவள். இல்லறத்தானின் கடமைகளை தன் கணவனுக்கு உறுதுணையாக இருப்பவள். சிவனடியார்கள் உருவத்தில் சிவனையே கண்டு, அவர்களுக்கு அமுது படைப்பதை பெரும் நற்பேறு என்று கருதி தொண்டு செய்பவள் அவள்.
சராசரி பெண்ணைப் போல வாழ்வதற்கு பிறந்தவளா புனிதவதி? அவளுடைய உயர்வை உலகறியச் செய்ய திருவுளம் கொண்டான் எம்பெருமான். அதனை அவன் நிகழ்த்தும் விதமே அற்புதமானது. தேர்வு நடத்தாமல் நமக்கு சான்றிதழ் கிடைக்குமா? இல்லையென்றால் உலகம் தான் ஒப்புக்கொள்ளுமா? அவன் சோதனை என்று சொல்வது நமக்கு வேண்டுமானால் இரக்கமற்ற செயலாகத் தோன்றலாம். பக்குவப்பட்ட ஆன்மாக்களிடத்தில் தான் அவனும் சோதிப்பான். அடியார்களும் சோதனைகளை தங்கத்தைப் புடம் போடுவது போன்று, இதுவும் அவனது இன்னொரு திருவிளையாடல் என்றே கொள்ளுவார்கள். அப்படித்தான், புனிதவதி வாழ்வில் ஒரு அற்புதம் நிகழ்ந்தது.
ஒருநாள் பரமதத்தன் வழக்கம் போல் கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கிறான், அவனைக் காண வந்த ஒருவர் இரண்டு மாம்பழங்களைக் கொடுத்து விட்டு போகிறார். நன்கு பழுத்து மனத்துடன் விளங்கின. அவற்றை தன் சிப்பந்திமூலம் வீட்டிற்கு கொடுத்து விடுகிறான். புனிதவதியும் கணவனுக்கு மதியம் சாப்பாட்டுடன் பரிமாறலாம் என்று பத்திரப்படுத்தி வைக்கிறாள். சமையல் செய்யத் துவங்கி அரிசியைக் களைந்து உலையில் வைத்து விட்டு, காய்கறிகளைத் திருத்திக் கொண்டிருக்கிறாள். வாசலில், குரல் கேட்கிறது ‘ அன்னம் இடுங்கள் தாயே ‘ என்று. புனிதவதி போய் பார்க்கிறாள் அங்கே ஒரு வயது முதிர்ந்த சிவனடியார். பார்த்தாலே தெரிகிறது வெகுதூரம் நடந்த களைப்பும் பசியும் அவரை வாட்டுகிறது என்று. அவரை கைகால் கழுவிக் கொண்டு உள்ளே வரச் சொல்லி, நீர் அருந்தக் கொடுத்து ஆசுவாசப் படுத்தினாள். ‘சோறு மட்டும் தான் தயாராகியுள்ளது, சிறிது பொறுக்க முடியுமா’ என்று அடியாரைக் கேட்க, அவரோ ‘ அது முடியாதம்மா, எது உள்ளதோ அதனைக் கொண்டு பசியாற்று’ என்கிறார், அதற்குமேலும் தாமதிக்காமல் இலையிட்டு, சாதமும் தயிரும் கணவன் அனுப்பிய மாம்பழங்களில் ஒன்றையும் படைக்கிறார். அவரும் திருப்தியாக உண்டு வாயார வாழ்த்திச் சென்று விடுகிறார்.
அரை மணி நேரம் சென்ற பின், பரமதத்தன் மதிய உணவுக்கு வீட்டிற்கு வருகிறான். அந்த நேரத்தில் சமையல் முடிந்திருக்கிறது. சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, காலையில் கொடுத்து அனுப்பிய மாம்பழங்கள் நினைவுக்கு வருகின்றன, மனைவியும் கணவன் ஆசைப்பட்ட படி மீதம் இருந்த ஒன்றைப் பரிமாறுகிறாள். அதனை உண்டு மகிழ்ந்த கணவன், இன்னொன்றையும் கொண்டு வரச் சொல்ல, அடுக்களைக்குள் சென்று என்ன செய்வது என்று கண் கலங்கி இறைவனை வேண்டுகிறாள். ஆசுதோஷியான சிவ பெருமான் உடனே அவள் ஏந்திய கைகளில் மாங்கனி ஒன்றை இட்டார். அதனை கணவன் இலையில் சமர்ப்பித்தார். முதல் பழத்தின் சுவையை விட இந்த பழம் இன்னமும் அதிகமாக உள்ளதே, இதுவரை அனுபவித்தறியா சுவையாய் இருக்கிறதே என்று துருவ ஆரம்பித்த கணவனிடம், நடந்தவற்றை எல்லாம் எடுத்துரைத்தாள் புனிதவதி. இதை எல்லாம் கேட்ட பரமதத்தன், நம்புவதா வேண்டாமா என்று தயங்கி. “அப்படியானால் , இங்கே என் கண் முன்னே இன்னொரு மாங்கனியையும் வரவழைக்க முடியுமா ? ” என்று கேட்டான். அசையாத பக்தி கொண்ட புனிதவதியும் மீண்டும் இறைவனை வேண்ட, இன்னொரு கனியும் அருளினான் சிவபெருமான். கண்டு வியந்து போகும் வேளையிலும் பரமதத்தனின் மனதில் இன்னொரு எண்ணமும் ஓடலாயிற்று.
‘ இவள் ஒரு தெய்வப் பிறவி’ என்பதை உணர்ந்த பரமதத்தன், மனைவியை இன்னமும் கூடுதல் மதிப்புடன் நடத்தத் துவங்கி, வழக்கமான கணவன்- மனைவி தாம்பத்தியத்தைத் தவிர்த்தான். வெகு விரைவில், கடல் கடந்து வியாபாரம் செய்யப் போகிறேன் என்று சொல்லி கப்பலேறிப் போனான். பல கீழை நாடுகளுக்கு சென்று மீண்டும் காரைக்காலுக்கோ நாகப்பட்டினத்திற்கோ திரும்பாமல் பாண்டிய நாட்டில் ஒரு பெரு நகருக்குச் சென்று வியாபாரத்தைத் தொடர்ந்தான். (சேக்கிழார் இந்த இடத்தில் மதுரை என்று சொல்லவில்லை. பெருநகரம் என்று அவர் சொல்வதை வைத்து உரையாசிரியர்கள் குறிப்பால் புரிந்து கொண்டு எழுதியுள்ளதாகத் தோன்றுகிறது)
அங்கேயே வியாபாரத்தில் செழித்து வளர, சில காலத்தில் இன்னொரு பெண்மணியைக் கைபிடித்து வாழத் துவங்கினான். பெண் வீட்டாரிடம் முதல் மனைவி பற்றிய விவரங்களைக் கூறவில்லை, சில மாதங்களில் ஒரு அழகிய பெண்குழந்தையும் அவர்களுக்கு வாய்க்கலாயிற்று. முதல் மனைவி மீதிருந்த மரியாதையின் காரணமாய் தன் குழந்தைக்கு புனிதவதி என்றே பெயரிட்டான். இப்படியே பல ஆண்டுகள் ஓடி விட்டன.
இதனிடையில் காரைக்காலில், ஊர் திரும்பாத கணவனையே மனதில் இருத்தி இறைவனை வேண்டி வந்தாள் பக்தையான மனைவி. தந்தை-தாய், ஊரார் ஆறுதல் சொல்லி பல ஊர்களுக்கும் கப்பலில் சென்று வழக்கமாக வியாபாரம் நாடுகளுக்கும் சென்று காணாமல் திரும்புகின்றனர்.
இறுதியாக, காரைக்காலைச் சேர்ந்த ஒரு வணிகர், பரமதத்தன் இருந்த நகருக்கு தொழில் நிமித்தமாகச் செல்ல, அங்கே ஒரு கோயிலில் சிறுமி புனிதவாதியை தெய்வாதீனமாகக் காண்கிறார்,அவள் வீட்டிற்குச் சென்று பார்த்தால் அங்கே பரமதத்தனைக் கண்டு இறைவனுக்கு நன்றி சொல்லி நடந்த விஷயங்களை எடுத்துக் கூறுகிறார். காரைக்காலுக்கு திரும்ப வந்து, ஊர் மக்களிடம் தெரிவிக்க அனைவரும் புனிதவதியை அலங்கரித்து பல்லக்கில் ஏற்றி வண்டி கட்டிக்கொண்டு பாண்டிய நாட்டிற்கு வந்து சேர்கிறார்கள். கேள்விப்பட்ட பரமதத்தன் தன் மனைவி குழந்தை குடும்பத்தினர் என அனைவருடன் வந்து, புனிதவதியை வணங்கி நமஸ்கரிக்கிறான். ‘ உங்களுடைய பக்தன் ஆகிய நான், சரீர சம்பந்தம் வைத்துக் கொள்ள இயலாது, மன்னித்தருள வேண்டும். எங்கள் குடும்பத்திற்கு தாங்கள் ஆசி அளிக்க வேண்டும் ” என்று இறைஞ்சுகிறான் .
இந்த இடத்தில் புனிதவதி சிந்திக்கிறாள். இறைவன் அளிக்கும் உத்தரவைப் புரிந்து கொண்டு ஒரு பிரார்த்தனையைச் சிவனிடம் சேர்ப்பிக்கிறாள். “ஈங்கிவன் குறித்த…….
இனி இவனுக் காகத்
தாங்கிய வனப்பு நின்ற
தசைப்பொதி கழித்திங் குன்பால்
ஆங்குநின் தாள்கள் போற்றும்
பேய்வடி வடியே னுக்குப்
பாங்குற வேண்டும்.” என்று
பரமர்தாள் பரவி நின்றார்.” (49)
என்று இதனை சேக்கிழார் வர்ணிக்கிறார். அதாவது, கணவனுக்காகத் தானே இந்த வனப்பும் உடலும். அவருடன் வாழ்வதற்கில்லை என்று முடிவான பின், இனி எனக்கு இவை வேண்டாம், இறைவா பேயுருவுடன் உன்னுடைய சிவகணங்களில் ஒன்றாக உன் திருவடி தாமரை நிழலிலேயே வாழும் வரத்தைத் தா ” என கையேந்துகிறார்.
உள்ளம் உருகிய பிரார்த்தனையின் வலிமையே தனி அல்லவா? சிவபெருமானும் அந்த நொடியிலேயே, தசைகள் நீங்கிய எலும்புருவத்தை அருள தேவர்கள் பூமாரி பொழிய உற்றார் உறவினர்கள் அச்சத்துடன் வணங்கி அகன்றார்கள்.
உலகில் பிறந்த அனைவருக்கும், தன் மேனி அழகின் மீது ஒரு கர்வமும் வனப்பைப் பேணவும் அதற்காக நேரத்தையும் பொருளையும் செலவிடுவதையும் பார்க்கிறோம். அதிலும் பெண்களுக்கு இந்த குணம் இன்னமும் அதிகம் என்று சொல்வார்கள். இங்கேதான் பேய் வடிவத்தை விரும்பிப் பெற்ற புனிதவதி தனித்து விளங்குகிறாள்.
இந்த இடத்தில் அவர் ஏன் பேய் உருவத்தை நாம் சிந்திக்கலாம். சாதாரணமாக, ஒரு பெண் துறவறத்தை ஏற்றுக் கொள்ளும் வழக்கம் அந்த நாட்களில் இல்லை. பேய் உருவம் பெற்றதும் சொந்தக் காரர்கள் ஒதுங்கியதும் முற்றிலுமாகச் சிவ பக்தியிலும் தொண்டிலும் மூழ்க பெரும் வாய்ப்பானது. நாம் பேச்சு வழக்கில் ஒரு சொல்லாடலைக் கேட்டிருப்போம். “அவன் அல்லது அவள் பேய் போல் வேலை செயிகிறான்(ள் )” என்று. அதாவது, எடுத்த காரியத்தை முடிக்காமல் வேறு எதிலும் கவனத்தைச் செலுத்தாமல் செய்து முடிப்பவர்களைப் பற்றித் தான் குறிப்பிடுவோம். மனிதர்களைப் பற்றியே இப்படி குறிப்பிடும்போது, பேயுருவம் கொண்ட சிவ கணங்களைப் பற்றி எண்ணிப் பாருங்கள்!!
அதன்பின், பல சிவஸ்தலங்களுக்கும் சென்று பல பாடல்களைப் பாடி இறைவனைத் தரிசித்து இறுதியில் கைலாயம் நோக்கி நடக்கலானார். வெகு காலம் பயணித்து, மலை அடிவாரம் வந்து காலால் மலையேறக் கூடாது தலையால் மலை ஏறுகிறார். அவர் வருவதைக் கண்டு வியந்து போன பார்வதியிடம் சிவபெருமான் ‘எம் அம்மை ‘ என்று விளக்குகிறார், அப்படித்தான் காரைக்கால் அம்மையாகிறார் புனிதவதியான அந்த மாதரசி,
சிவபெருமான் ஆணைக்கிணங்க, மீண்டும் பூவுலகம் திரும்பி திருவாலங்காட்டில் நிரந்தரமாகத் தங்கி, அன்னை-அத்தன் ஆனந்த நடனத்தை, ஊர்த்துவ தாண்டத்தைக் கண்டு ரசித்து இறைவனின் திருவடி நிழலைச் சேர்ந்தார்.
அவருடைய தமிழ்த் தோண்டும் மிகவும் உயர்ந்தது. அவருடைய, திருவிரட்டை மணிமாலை, அற்புதத் திருவந்தாதி, திருவாலங்காட்டு திருப்பதிகம் போன்றவை சைவத் திருமுறை பதினொன்றில் தொகுக்கப்பட்டுள்ளன. ஆதியும் அந்தமும் இல்லா இறைவனுக்கு அந்தாதிகளில் காரைக்கால் அம்மை மூத்தவர் என்று போற்றப்படுகிறார். அவருடைய பாடல்கள் ஒலி நயம், பொருள் நயம் மிக்கவை.
கோவில் பிரகாரங்களில் ஏனைய நாயன்மார்கள் வரிசையில், அமர்ந்து கொண்டுள்ள கோலத்தில் உள்ள ஒரே ஒருவர் காரைக்கால் அம்மையார் தான். காரைக்கால் கோயிலில் அவருக்குத் தனிச் சந்நிதி உள்ளது. ஆண்டுதோறும் ஆணி மாதம் பௌர்ணமி அன்று அவர் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் மாங்கனித் திருவிழா நடைபெறுகிறது. மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பக்தி சிரத்தையுடன் கலந்து கொண்டு இறைவன்- இறைவி- அம்மையின் அருள் பெற்றுச் செல்கின்றனர்.
தமிழகம் காரைக்கால் அம்மையைப் போன்ற மகான்களால் பல தாக்குதல்களுக்கு இடையேயும் பக்தி நெறியிலிருந்து வழுவாமல் இருக்கும் என்று நம்பலாம்.