Sardar Vedha Rathinam Pillai

VSK TN
    
 
     

சர்தார் வேதரத்தினம் பிள்ளை

1897-ம் ஆண்டு பிப்ரவரி 25 ம் தேதி வேதாரண்யத்தில் அப்பாகுட்டி பிள்ளைக்கும், தங்கம்மாள் அம்மையாருக்கும் மூன்றாவது மகனாகப் பிறந்தவர் வேதரத்தினம் பிள்ளை. இவரது மூதாதையர் தாயுமானவர் வழிவந்தவர் ஆகையால் சைவத்தையும், தெய்வபக்தியையும், தமிழையும் ஊட்டி அறநெறி வழுவாது வளர்த்தனர் பிள்ளையை. திண்ணைப்பள்ளியில் ஆரம்பக் கல்வியைக் கற்றவர், நாகைப்பட்டினத்தில் உயர்கல்வி கற்றார். பிள்ளையிடம் பன்மொழிகளைக் கற்றுக் கொள்ளும் ஆர்வம் இருந்ததால், தாய்மொழியாம் தமிழ் மட்டுமின்றி கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, சமஸ்கிருதம், வங்காளம், ஆங்கிலம், உருது ஆகிய மொழிகளில் அவர் தேர்ச்சி பெற்று விளங்கினார்.

1920 ம் ஆண்டு ‘பெல்காமி’ல் காந்திஜி தலைமையில் நடந்த காங்கிரஸ் மகாநாட்டில் கலந்து கொண்ட பிள்ளைக்கு உள்ளிருந்த விடுதலை வேட்கை தீவிரமானது. 1913 ல் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் திரு.சத்தியமூர்த்தி அந்நிய ஆடைகளை பகிஷ்கரிக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி பேசியததைக் கேட்டதிலிருந்து அவ்வகைத் துணிகள் அணிவதை விடுத்து, பருத்தியாலான சுதேசித் துணிகளையே அணிய ஆரம்பித்து குடும்பத்தினருக்கும், ஊரார்க்கும் சுதேசித் துணிகளின் முக்கியத்துவத்தை விளக்க ஆரம்பித்தார்.

1924 ம் ஆண்டு முதல் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினராகவும், 25 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியின் கூட்டங்களுக்குப் பிரதிநிதியாகவும் பொறுப்பு வகித்துள்ளார். 1926 ம் ஆண்டு வேதாரண்யத்தில் நடந்த 33 வது மாகாண அரசியல் மாநாட்டிற்கு சர்தார் வல்லபாய் படேல் அவர்கள் தலைமை வகித்தபோது, இவர் வரவேற்புக் குழுச் செயலாளராகப் பணியாற்றினார்.

1930 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிஞர் திரு.இராஜாஜி தலைமையில் வேதாரண்யத்தில் ‘உப்பு சத்தியாகிரகம்’ நடத்துவதாககத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கான சகல ஏற்பாடுகளையும் முன்கூட்டியேத் திட்டமிட்டு செய்து வைத்தவர் வேதரத்தினம் பிள்ளை. இதற்காக பிரிட்டிஷ் அரசாங்கத்தால் சிறைபிடிக்கப்பட்டார். அவர்தம் உப்புநிலங்கள் பிரிட்டிஷாரால் ஏலம் விடப்படட்டன. அன்றைய சென்னை மாகாணத்தில் இங்ஙனம் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்பட்டது வேதரத்தினம் பிள்ளை அவர்களின் சரித்திரத்தில் மட்டுமே எனில் இவரது தேசபக்தி ஆங்கிலேயரை எவ்வளவு தூரம் சுட்டெரித்திருக்கும் என சொல்லி புரிய வேண்டிய அவசியமில்லை.

இதற்காக பிள்ளை அவர்களுக்கு
6 மாத சிறைவாசமும், 200 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது . இவர் பல விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டதற்காக 1932 ல் ஒரத்தநாட்டிலும், 1937 ல் சாத்தான்குள வழக்கில் இராஜதுரோகம் புரிந்ததாகவும், 1937 ல் யுத்த மறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காகவும் கைது செய்யப்பட்டு அவ்வப்போது பல மாத சிறைவாசம் அனுபவித்துள்ளார்.

1929 முதல் 1939 வரை ஜில்லா காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும் திறம்பட பணிபுரிந்தார். தென்னாட்டில் பயணம் மேற்கொண்ட திரு.இராஜேந்திர பிரசாத் மற்றும் வல்லபாய் படேல் அவர்கள் இவரின் கட்சி நிர்வாகத்திறனை நேரில் கண்டவர்கள் ‘இந்திய நாடு முழுதும், இவர்போல் செயலாற்றும் குழு வேறில்லை’ என புகழாரம் சூட்டினர்.

1937 முதல் 1939 வரை சென்னை சட்டமன்ற உறுப்பினராகத் தஞ்சை மாவட்ட திருத்துறைப்பூண்டியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார். பின்பு 1946 ல் நடந்த இரண்டாவது பொதுத்தேர்தலில் இராஜாஜியின் வற்புறுத்தலின் பேரில் நின்று பிள்ளை அவர்கள் வெற்றியும் கண்டார். காந்திஜியின் ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்திலும் பங்குகொண்டு சிறைவாசம் அனுபவித்தார். 1957 ல் நடைபெற்ற பொதுத்தேர்தலிலும் இவர் போட்டியிட்டு வெற்றி கண்டார்.
1946 ல் வேதாரண்யத்தில் கஸ்தூரிபாய் காந்தி தொண்டு கன்யா குருகுலம் எனும் கிராமிய மகளிர் மேம்பாட்டுத் தொண்டு நிறுவனத்தை தொடங்கினார். இந்நிறுவனம் இன்றளவும் ஆதரவற்றோர் இல்லம், கைவிடப்பட்ட பெண் குழந்தைகளுக்கு உணவு, உடை, இருப்பிடம் மற்றும் கல்வியை வழங்கி வருகிறது.

இதயக் கோளாறு காராணமாக ஆகஸ்டு 24 ந் தேதி 1961 ம் ஆண்டு சர்தார் வேதரத்தினம் பிள்ளை இயற்கை எய்தினார்.

 

 

 

திருமதி.அம்பிகா சாமிநாதன்

Next Post

Savarkar

Wed Feb 26 , 2025
VSK TN      Tweet    இந்திய அரசியலில் இன்றும் கூட சர்ச்சைக்குரிய தலைவர் உண்டென்றால் என்றால் அது விநாயக் தாமோதர் சாவர்க்கர் தான். அவரை பெரிதும் நேசிக்கும் தொண்டர்களுக்கு அவர்  ” ஸ்வதந்த்ர வீர் சாவர்க்கர் ” . அவர் வீரர் தான் . இவர் வெளியில் உலவினால் தமக்கு அச்சுறுத்தல் என்று பயந்த பிரிடிஷ் அரசு இவரை பயங்கரவாதியாக வகைப்படுத்தியது. அந்தளவு புரட்சிகர சிந்தனையுடையவர். லண்டனில் மாணவராக இருந்தபோதே இந்தியாவில் பிரிட்டிஷ் காலனி […]

You May Like