“தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா…”
“தமிழன் என்றோர் இனமுண்டு
தனியே அதற்கோர் குணமுண்டு…”
இவை எல்லாம் எண்ணற்ற திராவிட மேடைகளில் காலம் காலமாக முழங்கி வரும் வரிகள். இவற்றுக்குச் சொந்தக்காரர் நாமக்கல் கவிஞர், வே ராமலிங்கம் பிள்ளை. இந்த வரிகளை மட்டும் படித்துவிட்டு, இன்றைய திராவிட மாடல்களுக்கு அடித்தளம் அமைத்தவர்களில் இவரும் ஒருவர் என்ற எண்ணம் தோன்றலாம்.
இன்றைய சமூக நீதி வியாபாரிகள் எப்படி தாதாஸாஹேப் அம்பேத்கரை தவறாக மேற்கோள் காட்டுகிறார்களோ, அப்படித்தான் நாமக்கல் கவிஞரையும் தமிழ் வியாபாரிகள் மேற்கோள் காட்டுகிறார்கள். நாமக்கல் கவிஞர் அடிப்படையில் ஒரு தேசியவாதி, அதிலும் குறிப்பாக காந்தியவாதி.
கத்தி யின்றி ரத்த மின்றி
யுத்த மொன்று வருகுது
சத்தி யத்தின் நித்தி யத்தை
நம்பும் யாரும் சேருவீர்
மகாத்மா காந்தியடிகளின் உப்பு சத்தியாகிரகத்திற்கு தென்னிந்தியாவில் ஊக்கமளித்த இந்த அமர கவிதை நாமக்கல் கவிஞர் எழுதியது.
நாமக்கல் கவிஞர் முதல், மாபோசி, ஜீவானந்தம், புலமைப்பித்தன் வரை எந்த உண்மையான தமிழறிஞரும் அரசியல் சார்ந்த மொழிவாதத்தை ஏற்கவில்லை. சொல்லப்போனால், நாமக்கல் கவிஞர் திராவிட அரசியல் கருத்தியலை நேரடியாகவே எதிர்த்துள்ளார். இதற்கு அவரது தேசியவாத சிந்தனை மட்டும் காரணமல்ல. தேசியத்துடன் சேர்த்து, தெய்வீகத்தையும் அவர் போற்றினார்.
“தேவாரம் திரு வாசகமும்
திகழும் சேக்கிழார் புகழும்
ஓவாப் பெருங்கதை ஆழ்வார்கள்
உரைகளும் தமிழன் வாழ்வாகும்”
தமிழ் மொழியின் வாழ்வுக்கே தமிழ்மொழியின் ஆன்மீகம்தான் காரணம் என்கிறார் கவிஞர். வழக்கம் போல, இந்த வரிகளை “தமிழ்! தமிழ்!” என்று முழங்கும் எந்த திராவிட மேடையிலும் கேட்க முடியாது.
திராவிட மாடல் பஹூத்தறிவுவாதிகள் எந்தக் கருத்தையும் முழுமையாக ஆழமாகப் பார்க்க மாட்டார்கள் என்பது யதார்தம். நுனிப்புல் மேய்வது மட்டும்தான் அவர்களுக்குக் கைவந்த கலை. இதனால், இன்றும் அந்த மேடைகளில் நாமக்கல் கவிஞரைக் கேட்க முடிகிறது. ஒரு நான்கு வரிகள் கீழே சென்று படித்தால், உடனே நாமக்கல் கவிஞரை “சங்கி!” என்று சொல்லிவிடுவார்கள்.
உண்மையான மொழிப்புலமை, அது சார்ந்த ஆய்வு இவற்றில் ஈடுபடும் எந்த அறிஞரும் பொய்யை ஏற்க மாட்டார். மொழிப்பிரிவினை, தனித்தமிழ், பார்பனர் சூழ்ச்சி, இத்யாதிக் கருத்துகள் ஆழமில்லாத பொய்கள். திராவிட இயக்கம் அதன் உச்சத்தில் செயல்பட்ட காலத்திலேயே இவற்றைப்பற்றி கேள்வி கேட்டவர் நாமக்கல் கவிஞர்.
“தமிழர் வேறு, சம்ஸ்க்ருதம் வேறு, என்பது பாதிரியார்களால் தோண்டப்பட்ட பள்ளம். இந்தப் பள்ளத்தைப் பதுங்கு குழியாக மாற்றியவர் மறைமலை அடிகள்.” என்பார் ஆனது ஆசான் திராவிடமாயை சுப்பு. தமிழை வளர்க்கிறேன், காக்கிறேன் என்ற பெயரில் ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி சுதந்திர இந்தியாவிலும் தொடர்கிறது என்பதை நாமக்கல் கவிஞர் உணர்ந்தார். இதனால், துவக்கத்தில் இருந்தே தனித்தமிழ் இயக்கத்தை எதிர்த்தார்.
கவிஞர் தனித்தமிழ் பற்றிக் கூறும்போது,
“அந்நிய மொழிப் பெண்ணை மணந்துக்கொண்டு, இடைவிடாது கடலோடி, தூர தேசங்களோடு நெடுங்காலமாக வியாபாரம் செய்துகொண்டு இருந்தவர்கள் நாட்டில் வழங்கிய மொழி எப்படித் தனித்தமிழாக இருந்திருக்க முடியும்?” என்கிறார்
(தமிழ் மொழியும், தமிழரசும் ப. 22).
மேலும், இந்த தனித்தமிழ் அரசியல் துவங்கிய காலத்திலேயே வாழ்ந்தவர் நாமக்கல் கவிஞர். அவர் செந்தமிழ் கடுந்தமிழ் என்று அந்நாளைய தமிழை இரண்டாகப் பிரிக்கிறார். “இயல்பான தமிழ்மொழியில் பிறமொழிக் கலப்பு இருந்தது, இருக்கிறது. அந்த மொழிகள் பிடிக்காதவர்கள் யாருக்கும் புரியாமல் தமிழ் சொற்களை மட்டுமே பயன்படுத்திப் பேசுகிறார்கள். இந்தக் கடுந்தமிழைத்தான் தனித்தமிழ் என்று சொல்கிறார்கள்.” என்ற மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஓர் உண்மையை வெளிப்படுத்துகிறார் கவிஞர்.
இறுதியாக தமிழ் என்ற பெயரில் இங்கு நடந்த கேலிக்கூத்துகளைப் பார்த்து அந்த உண்மையான தமிழறிஞர் சொன்னது,
“ஐரோப்பிய அநாகரீகங்களில் மோகங்கொண்டு தெய்வ நிந்தனை பேசித் திரிவதற்குத் தமிழ் நாட்டில் தமிழரசு வந்தாலென்ன? இங்கிலீஷ் அரசே இருந்தாலென்ன?”
-ராகவேந்திரன் SS