நமது சுதந்திர போராட்ட வரலாற்றில் ஜூன் 16, 1801 ஒரு முக்கியமான நாள். ஐரோப்பியருக்கு எதிராக பாரத நாட்டில் உள்ள அனைவரும் ஒரே அணியாக திரள வேண்டும் என்று மருதுபாண்டியர்கள், திருச்சியில் ஜம்பு தீவு பிரகடனம் வெளியிட்ட நாள் இது. இதை, வெள்ளையர் ஆட்சிக்கு எதிரான முதல் சுதந்திரப் போர் பிரகடனம் என்று கூட கூறலாம். குறிப்பிட்ட ஒரு நிலப்பரப்பிற்கு மட்டும் விடுதலை என்று அவர் கோரவில்லை, அவருடைய எண்ணமானது முழு பாரத தேசத்திற்குமான விடுதலை என்பதாக இருந்தது. ஜம்பு தீபகற்பம் என்பது பாரதம், இன்றைய பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பூடான், நேபாளம் உள்ளிட்ட பிரதேசங்களை உள்ளடக்கிய ஒரு குறிப்பீடாக இருந்து வந்துள்ளது, இதுவே அகண்ட பாரதமும் ஆகும்.இந்த பிரகடனத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் பொருள் பொதிந்தது
“ஜம்பு தீபகற்பத்திலுள்ள ஜம்புத் தீவில் வாழும் அந்தணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள், முசல்மான்கள் முதலான அனைவருக்கும் அறிவிப்பது என்னவென்றால் … “, இவ்வாறு தான் அந்த பிரகடனம் துவங்குகிறது. “ஜம்புத்தீவு வாசிகள் ஒவ்வொருவரும் போர்க்கோலம் பூண்டு ஒன்றுபட வேண்டும்” என்று குறிப்பிடுகிறார். . பாரதத்தில் உள்ள அனைவரும், தங்கள் ஜாதி, மதம் உள்ளிட்ட வேறுபாடுகளை களைந்து, ஓர் தாய் பிள்ளைகளாக ஒன்றாக போர்க்கோலம் பூண்டு ஐரோப்பியர்களை அழிக்க வேண்டும் என்று அவர் அறைகூவல் விடுக்கிறார்.
. “இந்த ஈனர்கள் ஆளும் பகுதிகளில் எல்லாம், மக்கள் ஏழ்மையில் உழல்கிறார்கள்; சோற்றுக்குப் பதில் நீராகாரம் தான் உணவு என்று ஆகிவிட்டது” என்று ஐரோப்பிய ஆட்சியின் அவலத்தை எடுத்துரைக்கிறார். இதை படித்தாலே, “சோழ நாடு சோறுடைத்து” எனும் பெருமைக்கு உரியவர்களாக இருந்த நாம், ஐரோப்பியர் ஆட்சியில் எப்படியெல்லாம் துன்பப்பட்டோம் என்பது புரியும். அடுத்து, “உங்களிடையே ஒற்றுமை இல்லாத காரணத்தால் ஐரோப்பியரின் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ளாமல், ஒருவரை ஒருவர் பழி தூற்றிக் கொண்டு, நாட்டை அந்நியரிடம் ஒப்படைத்து விட்டீர்கள்” என்று இந்த தேசத்தில் இருந்த சில சுயநல மன்னர்களை நேரடியாக சாடுகிறார்.
“உடம்பில் ஐரோப்பியனின் ரத்தம் ஓடாத அனைவரும் ஒன்று சேருங்கள்” என்று இறுதியாக முடிக்கிறார். இதன் பொருள், ஐரோப்பியர்கள் தரும் சொற்ப பணத்தில் வயிறு வளர்ப்போர் தவிர்த்து மற்ற அனைவரும் ஒன்று சேருங்கள் என்பதாகும். சுதேச அரசை நிறுவ விரும்பும் ஒவ்வொரு மன்னருக்கும், போர் வீரனுக்கும், ஒவ்வொரு சாமானியருக்குமான அறைகூவல் இது. இந்த பிரகடனத்தில் கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சம், அவர் பிரிட்டிஷ் என்று குறிப்பிடவில்லை, மாறாக ஐரோப்பியர்கள் என்று குறிப்பிடுகிறார். அதாவது பிரிட்டிஷ், போர்த்துகீசியர்கள், பிரெஞ்சு, டச்சு என அனைவரையும் ஒரே தட்டில் வைத்து தான் அவர் பார்க்கிறார். பிரிட்டிஷை வீழ்த்த பிரெஞ்சு நாட்டவருடன் கூட்டு போன்ற முட்டாள்தனத்தை எல்லாம் அவர் விரும்பவில்லை என்று தெளிவாக தெரிகிறது. ஐரோப்பியன் யாராக இருந்தாலும் அவன் அந்நியன், ஒழிக்கப்பட வேண்டியவன் ஐரோப்பியருக்கு உதவுபவர்களும், அதே தண்டனை பெற தக்கவர்கள் என்பதில் அவர் உறுதியாக நின்றார்.
இந்த பிரகடனத்திற்கு கிடைத்த வரவேற்பு பிரிட்டிஷாரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மருது பாண்டியரை பிடிக்க வேண்டும் என்ற வெறியில், இருவரும் சரண்டையாவிட்டால் காளையார் கோவில் கோபுரத்தை தகர்ப்போம் என்று மிரட்டல் விடுத்தனர். கோவிலை காக்க, ஹிந்து தர்மத்தை காக்க, இரு மாவீரர்களும் சரணடைந்தனர், 24 அக்டோபர் 1801 அன்று தூக்கிலடப்பட்டனர். அவர்கள் விதைத்து சென்ற வீரம் இன்று ஆலமரமாக வளர்ந்துள்ளது.
– திரு. சிவராம கிருஷ்ணன்


4 thoughts on ““The Marudhu Brothers who first gave the call for the freedom struggle””
Comments are closed.