டாக்டர் அம்பேத்கருக்காக ஆர்.எஸ்.எஸ்காரர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்த வரலாறு: 1954 தேர்தலில் பண்டாரா (மகாராஷ்ட்ரா) தொகுதியில் நடந்தது என்ன? டெங்கடிஜி விவரிக்கும் அனுபவம்
1952 தேர்தலில் மும்பையில் இரு உறுப்பினர் தொகுதியில் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரும் அசோக் மேத்தாவும் வேட்பாளர்கள். அந்தத் தேர்தலில் இருவரும் தோற்றனர், ஆனால் அசோக் மேத்தாவும் அவரது பி.எஸ்.பி கட்சியும் உயர் சாதி ஹிந்து வாக்குகளை அம்பேத்கருக்கு மாற்றுவதில் முற்றிலும் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. பாபாசாகேப் 14,374 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டார். காங்கிரஸின் நாராயண் கஜ்ரோல்கர் 1 லட்சத்து 37,950 வாக்குகளும், பாபாசாகேப் 1 லட்சத்து 23,576 வாக்குகளும் பெற்றனர். எனவே ‘தீண்டத்தகாதவர்’களுக்கும் மற்றவர்களுக்கும் இடையே உடைக்க முடியாத சுவர் இருப்பதாக அம்பேத்கரின் சீடர்களிடையே ஒரு உணர்வு பரவியது. இங்கிருந்து வாக்குகள் அங்கு செல்ல முடியாது, அங்கிருந்து வாக்குகள் இங்கு வர முடியாது. இரு தரப்புகளுக்கும் இடையிலான இடைவெளியை விரிவுபடுத்தும் இந்தச் செய்தியைக் கேட்ட தத்தோபந்த் டெங்கடியும், ஸ்ரீ குருஜியும் மிகவும் கவலைப்பட்டார்கள்.
இதற்கிடையில், 1954 ல், பண்டாரா மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. டாக்டர். அம்பேத்கர், அசோக் மேத்தா எனும் அதே ஜோடி தான் வேட்பாளர்கள்.. இரு உறுப்பினர் தொகுதியாக இருந்ததால், ஒரே நேரத்தில் இரண்டு வேட்பாளர்களுக்கு வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டியிருந்தது. அப்போது அம்பேத்கர் நிறுவிய ஷெட்யூல்டு காஸ்ட் பெடரேஷன் ஊழியர் கூட்டம் நடைபெற்றது. பண்டாரா தொகுதியில் ஏராளமான எஸ்.சிக்கள் இருந்தனர். இருப்பினும், அவர்களின் வாக்குகளின் அடிப்படையில் மட்டும் பாபாசாகேப் தேர்ந்தெடுக்கப்பட முடியாது. இதுவும் தெளிவாக இருந்தது. எஸ்.சி வாக்குகள் அசோக் மேத்தாவுக்குப் போகும்; அசோக் மேத்தாவிடமிருந்து ஒரு வாக்கு கூடப் பெறமாட்டோம் என்பது அனைவருக்கும் உறுதியாக தெரிந்தது. ஆனால், வேறு வழியில்லாததால் அசோக் மேத்தாவுக்கு நமது இரண்டாவது வாக்கை அளிக்க வேண்டும். அப்படியிருந்தும், மும்பையைப் போலவே இந்த முறையும் நடக்கும். அதிகபட்சம், அசோக் மேத்தா தேர்ந்தெடுக்கப்படுவார், ஆனால் பாபாசாகேப் தோல்வியடைவார். எனவே தங்களின் இரண்டாவது கருத்தை முடக்குவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. (இரண்டாவது கருத்து இல்லை என்று பொருள்)
இந்த கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது பாபாசாகேப் அங்கு வந்தார். அவரிடம் ”இரண்டாவது கருத்தை முடக்க முடிவு செய்துள்ளோம். ஏனென்றால் அப்படி செய்யாவிட்டால், நீங்கள் இழக்க நேரிடும்” என்றார்கள். இதைக் கேட்ட பாபாசாகேப் கோபமடைந்தார். அவர் கூறினார், “நான் தோற்க விரும்புகிறேன், ஆனால் மக்களே, மற்றொரு வாக்கை முடக்க உங்களை அனுமதிக்க மாட்டேன். இந்திய அரசியல் சாஸனம் உருவாக்கியது நான்தான். அதன் விதிகளைப் பயன்படுத்துவதில் இத்தகைய முறைகேடுகள் ஒருபோதும் அனுமதிக்கப்படமாட்டாது.” இப்போது மீண்டும் அதே கேள்வி: யாருக்கு வாக்களிப்பது?
அப்போது, வேறு ஒரு உயர் சாதியினரை நிறுத்தி, இரண்டாவது ஓட்டு அளிக்க வேண்டும் என கருத்து தெரிவிக்கப்பட்டது. அந்தக் கூட்டத்தில் தத்தோபந்த் டெங்கடியே இருந்தார். அதனால் இயல்பாகவே அவரது பெயர் வந்தது. பாபாசாகேப் தத்தோபந்த்தை வேட்பாளராக நிற்கச் சொன்னார். ஆனால் தத்தோபந்த் ஒரு சங்கப் பிரச்சாரக் என்பதால், தேர்தலில் நிற்கும் பேச்சே இல்லை. “என்னிடம் பணமோ வேறு வழியோ இல்லை” என்றார் டெங்கடி. பாபாசாகேப், “அதையெல்லாம் நாங்கள் பரிசீலிப்போம்” என்றார். தத்தோபந்த், “நான் இதைப் பற்றி என் மக்களிடம் கேட்க வேண்டும்” என்றார். அதன் பிறகு, தத்தோபந்த்ஜி குருஜியிடம் எல்லா விவரத்தையும் தெரிவித்தார். ‘தீண்டத்தகாதவர்’களையும் மற்றவர்களையும் ஒன்றிணைக்க இந்த தேர்தல் ஒரு சிறந்த வழி என்று ஸ்ரீ குருஜி உணர்ந்தார், ஆனால் தத்தோபந்தோ அல்லது வேறு எந்த சங்க கார்யகர்த்தரோ வேட்பாளராக நின்றால், சங்கத்து ஆள் வேட்பாளராகி தனது ஆதரவை வழங்குகிறார் என்று செய்தியாகும். எனவே ஸ்ரீ குருஜி, “நீங்கள் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்பது மட்டுமல்ல, நம்மில் யாரையும் கூட தேர்தலில் நிற்க விடாதீர்கள்” என்று டெங்கடிஜிக்கு அறிவுறுத்தினார்.. “அதற்குப் பதிலாக நீங்களே முழு அதிகாரத்தைப் பயன்படுத்தி பண்டாரா தொகுதியில் நம் கார்யகர்த்தர்கள் அனைவருடனும் பாபாசாகேபுக்காக பிரச்சாரம் செய்யுங்கள். சங்கத்தினர் பாபாசாகேபுக்காக பிரச்சாரம் செய்கிறார்கள் என்பது பாபாசாகேபுக்கும் தெரிய வேண்டும்; நம் சங்கப் பணி வளர்ச்சியை முன்னிட்டு மக்களின் கவனத்திற்கும் வர வேண்டும்” என்றார் ஸ்ரீ குருஜி.
அதன்படி, முடிவு செய்யப்பட்டு பண்டாரா மாவட்டத்தின் அனைத்து ஸ்வயம்சேவகர்களும் பாபாசாகேபை ஆதரித்து பிரசாரத்தில் விறுவிறுப்பாக ஈடுபட்டார்கள்.. இந்த தேர்தலில் பாபாசாகேப் தோற்றார்; எனினும் வாக்கு எண்ணிக்கையை பகுப்பாய்வு செய்யும் போது, அவர் எங்கிருந்து எவ்வளவு வாக்குகளைப் பெற்றார் என்று சோதித்தபோது, அந்த நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள எஸ்.சிக்களின் மொத்த வாக்குகளை விட அதிக வாக்குகள் தமக்குக் கிடைத்ததை அவர் உணர்ந்தார். உயர் வகுப்பைச் சேர்ந்த பலரும் அவருக்கு வாக்களித்துள்ளதால் அவருக்குத் திருப்தி.
பின்னர் நாகபுரியில் அவரை சந்திக்க ஷெட்யூல்டு காஸ்ட் பெடரேஷன் தலைவர்கள் வந்தனர். பாபாசாகேப் அவர்களிடம், “நீங்கள் அரசியலில் அதிக ஆர்வம் உள்ளவர்கள். எனக்கோ தர்மதத்தில் ஆர்வம் அதிகம். பண்டாரா தேர்தலில் நான் தோற்றுப் போனதில் எனக்கு வருத்தமில்லை, ஏனென்றால் தோற்றுவிடுவேன் என்று ஆரம்பத்திலிருந்தே எனக்குத் தெரியும், ஆனால் இம்முறை ஒரு விஷயம் மிகவும் நன்றாக இருந்தது. ‘தீண்டத்தகாதவர்’களுக்கும் உயர் சாதியினருக்கும் இடையே நான் கண்ட சுவர் இந்த பண்டாரா தேர்தலில் உடைக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் எஸ்.சிக்களைத் தவிர, உயர்சாதியினரிடமும் அதிக வாக்குகளைப் பெற்றேன். இனிமேலாவது நமது சிந்தனையை மாற்ற வேண்டும். ‘தீண்டத்தகாதவர்’கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக மட்டும் என்று இல்லாமல், அனைத்து சமூகத்தினரையும் சென்றடையும் வகையில் பணியை உருவாக்க வேண்டும்” என்று கூறினார். இதன் விளைவாக ஷெட்யூல்டு காஸ்ட் பெடரேஷனுக்கு பதிலாக குடியரசுக் கட்சி உதயமானது..
(தேவகிரி பிராந்த விஸ்வ சம்வாத் கேந்திரம் ஏப்ரல் 30 அன்று பகிர்ந்த ட்விட்டர் பதிவு).