நாமக்கல் கவிஞர்
பாரதத்தின் சுதந்திர யுத்த வேள்வியில் தங்களை அளித்த நல்லோர்கள் பலர். அவர்களின் ஒருவர் தான் நாமக்கல் கவிஞர் ராமலிங்கனார் காந்திய சிந்தனை கொண்டவர். சமயநெறியின் வழிநின்று சமத்துவம் பாடியவர். சமூக சீர்திருத்தத்தினை முன்னெடுத்தவர். தமிழறிஞர், தாய் தமிழை தேசம் முழுவதும் ஒலிக்கச் செய்ய உதவியவர். தமிழ் நதியினை தேசிய நீரோட்டத்தில் இணையச் செய்ய விரும்பியவர். பாரதியின் வழி நின்று எளிய நடை, எளிய பதம், புதிய சிந்தனை கொண்டு பாடல்கள் பல புனைந்தவர் அவர்.
பிறப்பு மற்றும் இளமை
இவர் தற்போதைய நாமக்கல் மாவட்டம் மோகனூரில் வெங்கட்ராமன் மற்றும் அம்மணி அம்மாள் ஆகியோருக்கு எட்டாவது குழந்தையாக பிறந்தார். இவரின் காலம் கிபி 19ஆம் நூற்றாண்டின் இறுதி காலாண்டு பகுதியான 19 அக்டோபர் 1988 ஆம் ஆண்டு.
நாமக்கல் மற்றும் கோயம்புத்தூரில் பள்ளிக்கல்விணை முடித்த அவர் திருச்சியில் இளங்கலை பட்டப்படிப்பினை நிறைவு செய்தார்.
அரசியல் ஈடுபாடு
ஆரம்ப காலத்தில் திலகரின் தீவிரவாத கொள்கையின் பால் ஈடுபாடு கொண்டிருந்த இவர், பிற்காலத்தில் காந்திஜியின் மீது கொண்ட பற்றால் காந்தியவாதியாக மாறினார். தனது தேசபக்தி நிரம்பிய பாடல்களால் தேசியத்தினையும் காந்தியத்தினை உயர்த்திப் பிடித்தவர். இவர் தேசியத்தையும் காந்தியத்தையும் இரு கண்களாக பாவித்தார். கரூர், நாமக்கல் வட்டார காங்கிரஸ் தலைவராகவும், திருச்சி மாவட்ட காங்கிரஸ் செயலாளராகவும் இருந்தார். தேசபக்தி மிக்க தமது பேச்சினால் பல இளைஞர்களை தேசத் தொண்டர்களாக மாற்றியவர். அரசின் தடையுத்தரவையும் மீறி, கூட்டங்களில் சொற்பொழிவாற்றினார். உப்பு சத்தியாகிர போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார். உப்பு சத்தியாகர போராட்டத்தில் பாடுவதற்கான வழிபாடலான “கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது” என்னும் பாடலை இயற்றி கொடுத்தார்.
புகழ்பெற்ற மேற்கோள்கள்
- கத்தியின்றி இரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது!
- தமிழன் என்று இனமுண்டு! தனியே அவனுக்கு ஒரு குணம் உண்டு!
- தமிழ் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!
- கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள், கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்..
- இச்சை கொண்ட நிமிஷமே நிச்சயம் சுதந்திரம்; பிச்சை கேட்க வேண்டுமோ, பிறர் கொடுக்க வல்லதோ? ‘வேண்டும்’ என்ற உறுதியே விடுதலைக்கு வழிவிடும்
படைப்புகளில் சில
- மலைக்கள்ளன் (நாவல்)
- காணாமல் போன கல்யாணப் பெண் (நாவல்)
- பிரார்த்தனை (கவிதை)
- நாமக்கல் கவிஞர் பாடல்கள்
- திருக்குறளும் பரிமேலழகர்
- திருவள்ளுவர் திடுக்கிடுவார்
- திருக்குறள் புது உரை
- கம்பனும் வால்மீகியும்
- கம்பன் கவிதை இன்பக் குவியல்
- என் கதை (சுய சரிதம்)
- அவனும் அவளும் (கவிதை)
- சங்கொலி (கவிதை)
- மாமன் மகள் (நாடகம்)
- அரவணை சுந்தரம் (நாடகம்)
சிறப்புகள்
கவிஞரின் நாட்டுப்பற்றை போற்றும் வகையில் மாநில அரசு அவரை முதல் அரசவைக் கவிஞராகவும், பின்னர் தமிழக சட்ட மேலவை உறுப்பினராகவும் நியமித்து சிறப்பித்தது.
மத்திய அரசு அவருக்கு பத்மபூஷன் விருதளித்து போற்றியது. தமிழ்நாடு அரசு இவர் வாழ்ந்த நாமக்கலில் உள்ள இல்லத்தை நாமக்கல் கவிஞர் ராமலிங்கனார் நினைவில்லம் ஆக்கியுள்ளது. இதில் நூலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. மேலும் சென்னையில் உள்ள அரசு தலைமைச் செயலக பத்து மாடி கட்டிடத்திற்கு இவரது பெயரை சூட்டியுள்ளது. தட்டரார தெரு என்று அழைக்கப்பட்டு வந்த இவர் வாழ்ந்த தெரு கவிஞர் ராமலிங்கம் தெரு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சாகித்ய அகாடமி தமிழ் பிரதிநிதியாகவும் பொறுப்பு வகித்தார்
மறைவு
பாரதியாரின் வழி வந்து பாமர மக்களுக்கும் புரியும் வகையில் கவிதைகளை ஏற்று அன்னை தமிழை அகிலமெங்கும் பறைசாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்த கவிஞர் 1972 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி இரவு 2 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவர் தன் வாழ்நாளில் பற்பல முயற்சிகளை மேற்கொண்டு காந்திய சிந்தனைகளை தேசிய சிந்தனையும் தமிழ் மக்கள் நெஞ்சத்தில் விதைக்க அரும்பாடுபட்டார். தம் கவிதைகளின் மூலம் மக்களுக்கு வீர உணர்ச்சியை சுதந்திர தாகத்தை ஏற்படுத்தினார்.
-சக்தி விஜய பாரதி