OndiVeeran – The Obscure Freedom Fighter Who Exterminated The British.

VSK TN
    
 
     

 

18ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களை எதிர்த்து அவர்களை கதிகலங்குமாறு செய்த ஒண்டிவீரனின் வீர தீர செயல்களை நாம் அறியும்போது பூரிப்பு ஏற்படுகிறது. ஒண்டிவீரன் அருந்ததியர் சமூகத்தில் பிறந்தவர், பிறந்த தேதி, ஊர் போன்ற விவரங்களின் ஆவணங்கள் இல்லை. அவர் பூலித்தேவரின் படையில் முக்கிய தளபதியாக செயல்பட்டவர். பூலித்தேவரும் ஒண்டிவீரனும் ஒருவரின்றி மற்றவர் இல்லை என வரலாற்று விவரங்களின் மூலம் அறியலாம். ஆக, ஒண்டிவீரனைப் பற்றி அறியவேண்டும் என்றால் பூலித்தேவரின் சரித்திரமும் தெரிந்துக்கொள்ளும் அவசியம் உள்ளது.

பூலித்தேவரின் முன்னோர்கள் ராமநாதபுரத்தை சேர்ந்தவர்கள். திசைகாவலுக்காக திருநெல்வேலி வந்தனர். அங்கே, நெற்கட்டும் செவ்வேல் அருகே கோட்டை அமைத்து ஆட்சி செய்தார்கள். அவர்களின் வாரிசாக பிறந்தவர் பூலித்தேவர். அந்த பகுதியில் இருந்த அருந்ததியர் மக்களின் நிலங்களை இருளப்பிள்ளை என்பவர் தன் பலத்தை பயன்படுத்தி பிடுங்கிக்கொண்டார். அருந்ததிய மக்கள் பூலித்தேவரிடம் தங்களுக்கு உதவுமாறு முறையிடு செய்தார்கள். அவர்களின் நிலங்களை இருளப்பிள்ளையிடமிருந்து மீட்டுத் தந்தார் பூலித்தேவர். அதற்குப்பிறகு அருந்ததியினர் பூலித்தேவரை தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டனர். இவ்வாறு மீட்டுக்கொடுக்கப்பட்ட நிலங்களில் ஒன்று ஒண்டிவீரனின் தாத்தாவின் நிலம். எட்டு பிள்ளைகள் பெற்ற அவரின் மூத்த மகனின் மகன்தான் ஒண்டிவீரன்.

பாளையக்காரன் பூலித்தேவரின் வலிமையே அவருடைய படை தான். அவரது படை வீரர்கள் தங்களது பாளையத்துக்காகவும் பூலித்தேவருக்காகவும் தங்களது உயிரை கொடுப்பதை பெருமையாக நினைத்தார்கள். அந்த அளவிற்கு பூலித்தேவரும் படைவீரர்களுக்கு எந்த குறையும் இல்லாமல் பார்த்துக்கொண்டார்.

பூலித்தேவரின் தலைமை தளபதியான ஒண்டிவீரன் அவரின் போர் வாளாகவே  கருதப்பட்டார். போர் திட்டங்கள் தீட்டுவதிலும் மறைந்திருந்து தாக்குவதிலும், எதிரியை நிலைகுலைய செய்வதிலும் மிகவும் வல்லமை கொண்டவர். திருநெல்வேலி, நெற்கட்டான் செவ்வேல், வாசுதேவநல்லூர், களக்காடு, கங்கைகொண்டான், திருவில்லிபுத்தூர் ஆகிய இடங்களில் ஆங்கிலேயருக்கு எதிராக சண்டையிட்டு வெற்றிகளை குவித்தவர் ஒண்டிவீரன்.

ஆற்காடு நவாபிடமிருந்து வரி வசூலிக்கும் உரிமையை பெற்ற ஆங்கிலேயர்கள் பூலித்தேவரிடம் வரி வசூலிக்க ஆள் அனுப்பினார்கள். வரி கட்ட மறுத்தார் பூலித்தேவர். அப்போதுதான் செம்மண்ணில் அதிகம் நெல் விளைவித்ததால் ‘நெற்கட்டும் செவ்வேல்’ என்று இருந்த பெயர் ‘நெற்கட்டான் செவ்வேல்’ என்று மாறியதாக சொல்கிறார்கள்.

வரி கொடுக்க மறுத்ததை ஒட்டி ஆங்கிலேயர்கள் தென்மலைக்கு வந்து முகாமிட்டு பூலித்தேவரிடம் ஒரு தூதுவரை அனுப்பினார்கள். தூதுவர் ஆங்கிலேயரின் படைபலத்தைப்பற்றி எடுத்துக்கூறி, அவ்வளவு அதிகமான படைபலம் கொண்டவரிடம் போரிடுவதைவிட சமாதானமாக போவதே சரி எனச்சொன்னார். “சமாதானம் வேண்டாம், போரிட வேண்டும் என்றால் ஆர்க்காடு நவாபிடமிருந்து வரி வசூலிக்கும் உரிமம் பெற்றதன் சான்றாக எங்களிடம் உள்ள பட்டத்து வாளையும் பட்டத்துக்குதிரையையும் பிடித்துக்கொண்டு போர் துவங்கும் அடையாளமாக எங்களின் முகாமில் உள்ள வெண்கல நகராவை முழங்கச் செய்ய வேண்டும். இந்த நிபந்தனையை நீங்கள் பூர்த்தி செய்தால் நீங்கள் சுத்த வீரர்கள் என்று ஒப்புக்கொள்கிறோம்,” என்று அவர் சொன்னார்.

பூலித்தேவர் அந்த நிபந்தனைகளை ஒப்புக்கொண்டு தனது தளபதிகளை கூப்பிட்டு அவர்களிடம் சூழ்நிலையை விளக்கி ஆலோசனை கேட்டார்.  ஒண்டி வீரன் தீர சிந்தித்து தேவரிடம் ரகசியமாக பட்டத்து வாளையும் குதிரையையும் கொண்டுவருவதை தான் ஏற்றுக்கொள்வதாக கூறினான். பூலித்தேவருக்கு ஒண்டிவீரனின் திறமையறிந்தும் அந்த நிபந்தனையில் இருக்கும் ஆபத்தை சிந்தித்து அவர் தனியே செல்வதை தடுக்க முயன்றார். ஆனால் ஒண்டிவீரனின் வற்புறுத்தலினால் அவர் சம்மதிக்க நேரிட்டது.

ஒண்டிவீரன் மாறுவேடத்தில் ஆங்கிலேயர் தங்கியிருந்த தென்மலைக்குச் சென்று தனக்கு செருப்பு மற்றும் குதிரை சேனை தைக்க தெரியும் என்று வேலை கேட்டு அங்கே சாமர்த்தியமாக வேலையில் அமர்ந்துவிட்டார். தன்னை அநாதை என்று சொல்லிக்கொண்ட அவர், சில நாட்களிலேயே அங்கிருந்த சூழ்நிலையை நன்கு புரிந்துக்கொண்டார். பட்டத்து வாள் இருக்கும் இடத்தை தெரிந்துக்கொண்டார். குதிரையிடம் பாசத்துடன் பழகினார், குதிரையும் அவரிடம் நாளடைவில் பழகத் துவங்கியது.

ஒரு இரவு ஆங்கிலேயர்கள் மது அருந்திவிட்டு அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார்கள். தனக்கு சரியான நேரம் பார்த்து பட்டத்து வாளை எடுத்துக்கொண்டு குதிரையிடம் சென்றார் ஒண்டிவீரன். கட்டப்பட்டிருந்த கயிற்றை அவிழ்க்கும்போது குதிரை சற்று பதற்றம் அடைந்து திமிர்ந்து கொண்டு பலமாக கனைக்க, ஆங்கிலேய சிப்பாயிகள் விழித்துக்கொண்டனர்.

உடனே அங்கிருந்த புல் கட்டிற்குள் தன்னை மறைத்துக்கொண்டார் ஒண்டிவீரன். குதிரையிடம் ஓடி வந்த வீரர்கள் அவிழ்ந்துகிடந்த கயிற்றை எடுத்து கட்டப்போகும்போது முளைக்காம்பு தரையில் சரியாக பதியாமல் ஆடுவதை பார்த்தார்கள். அதை தரையிலிருந்து பிடுங்கி வேறொரு இடத்தில் வைத்து அடித்தனர். அங்கேதான் மறந்திருந்த ஒண்டிவீரனின் இடது கை இருந்தது. மது போதையில் இருந்த சிப்பாயிக்கள், இதுகூட உணராமல் முலைக்காம்பை நன்றாக அடித்து அதில் குதிரையை கட்டிவிட்டு சென்றுவிட்டார்கள்.

கையில் முளைக்காம்பு அடிக்கும் வலியை பொறுத்துக்கொண்டிருந்தார் ஒண்டிவீரன். அதற்குப்பிறகும் வலியை பொறுத்துக்கொண்டு ஆரவாரம் ஆடங்கும் வரை காத்துக்கொண்டிருந்தார். வலது கையால் முளைக்காம்பை வெளியே உருவி இடது கையை விடுவிக்க முயன்றார். ஆனால் முடியவில்லை. அப்போ அவர் வைத்திருந்த பட்டத்து வாளை எடுத்து முளைகாம்பில் மாட்டியிருந்த கையை வெட்டிவிட்டு ரத்தம் சொட்ட சொட்ட குதிரையை அவிழ்த்து நிசப்தமாக அங்கிருந்து வெளியேறினார். செல்லும்போது நெற்கட்டான் செவ்வேலை நோக்கி வைத்திருந்த பீரங்கிகளை ஆங்கிலேய சிப்பாய்களின் கூடாரத்தை நோக்கி திருப்பி வைத்து, அதன் பிறகு அங்கிருந்த வெண்கல நகராவை போர் முழக்கமிட்டு குதிரை மீது ஏறி நெற்கட்டான் செவ்வேலை நோக்கி பறந்துச் சென்றார்.

நகராவின் சப்தத்தை கேட்டு ஆங்கிலேயர் இரவில் அவசர அவசரமாக எழுந்து வந்து பீரங்கிகளின் விசைச்சங்கிலியை பிடித்து இழுத்தார்கள். அவைகள் அவர்களது கூடாரத்தையே தாக்க, பலர் உயிரிழந்தனர்!

ஒண்டிவீரன் பூலித்தேவரை சென்றடைந்தார். அவர் கையில் பட்டக்கத்தியை கொடுத்து மயங்கி விழுந்தார். ஒண்டிவீரனின் தியாகமும் தீரச்செயலையும் கண்டு மெய்சிலிர்த்த பூலித்தேவர், அவருக்கு உடனே மருத்துவ ஏற்பாடுகளை செய்தார். ஒண்டிவீரன் ஒரு கையை இழந்ததை பார்த்து கவலை கொண்டார் பூலித்தேவர். பிறகு இதனை ஒண்டிவீரனிடம் வெளிப்படுத்த, அவரோ, “என் தலைவனே, என் கை மட்டும் தானே போச்சு? உங்களை கேட்டால் எனக்கு தங்கத்தில் கூட கை வைப்பீர்கள். இப்படி இருக்க எனக்கு என்ன கவலை?” என்று பூலித்தேவரிடம் சொன்னார். பூலித்தேவரும் அவருக்கு தங்கத்தில் கை செய்து அவர் இடது கை இருந்த இடத்தில் பொருத்தியதாக கூறப்படுகிறது.

பூலித்தேவரின் கோட்டையை தகர்க்க 18 பவுண்டு பீரங்கி குண்டுகள் தேவைப்படும் சூழ்நிலையில் ஆங்கிலப்படையிடம் 14 பவுண்டு குண்டுகள் மட்டுமே இருந்தன. இதை தெரிந்து அவர்களின் தளபதியான அலெக்சாண்டர் ஹெரான் கப்பம் வசூலிப்பதற்காக தேவரை பயமுறுத்த தூதுவரை அனுப்பியிருந்தான். ஆனால் பூலித்தேவரும் அவரது தளபதியான ஒண்டிவீரனும் நிபந்தனைகளை நிறைவேற்றிவிட்டார்கள்.

அதற்குப்பிறகு கோட்டையை தகர்க்க ஹெரான் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது. 1755 ம் ஆண்டு மே மாதம் 22ம் தேதி கோட்டையை தகர்க்க முடியாமல் முற்றுகையை முடித்துக்கொண்டு மதுரையை நோக்கி திரும்பிச்சென்றது ஆங்கிலப்படை.

இந்த அனைத்து விவரங்களும் ஆங்கிலேயர் ஆவணப்படுத்தி வைத்துள்ளனர். 1755ல் படையெடுப்பு நடந்ததும் அதில் ஆங்கிலேய படைக்கு அலெக்ஸாண்டர் ஹெரான் தலைமை தாங்கியிருக்கிறார். இந்த படையுடன் ஆற்காடு நவாப் முகம்மது அலியின் படையும் அதன் தளபதியாக ஆற்காடு நவாபின் அண்ணன் மகபூஸ் கான் இருந்தார். ஆங்கிலேயரின் சுதேசிப்படையும் சேர்ந்து வந்ததாகவும் அதன் தளபதியாக கான்சாஹிப் இருந்ததாகவும் தேளிவாகிறது.

இன்று அருந்ததி மக்கள் அந்த பகுதியில் எந்த நிலத்திற்கும் சொந்தக்காரர்களாக இல்லை. ஆங்கிலேயர்கள் காலத்தில் அருந்ததியினரை பட்டியல் சமுதாயமாக அறிவித்து, இன்று வரை அவர்களின் சமுதாய நிலைமை இவ்வாறாகவே உள்ளது. ஆனால் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு அவர்கள் நிலம் வைத்திருந்து விவசாயமும் செய்து வந்தனர் என்று ஒண்டிவீரனின் வரலாற்றின் மூலம் தெளிவாக தெரிகிறது.

ஒண்டிவீரன் பூலித்தேவரின் மறைவிற்குப் பின்னால் அவரது படையில் தொடர்ந்து இருந்து சண்டையிட்டது தெரிய வருகிறது. அவர் 1771 ம் ஆண்டு ஆகஸ்டு 20ம் தேதி வீர மரணம் அடைந்தார் என வரலாறு கூறுகிறது.

பாளையங்கோட்டையில் ஒண்டிவீரன் நினைவுச் சின்னமாக அவருடைய  சிலையை நிறுவி அன்றைய முதல்வராக இருந்த செல்வி ஜெயலலிதா அவர்கள் 2016ல் மார்ச் 1 அன்று காணொளி காட்சி மூலமாக திறந்துவைத்தார். 2021ம் வருடம் இவருடைய 250வது  நினைவு தினத்தை தமிழக அரசு அனுசரித்தது.

மக்கள் ஒண்டி வீரனை தங்கள் தெய்வமாக வழிபடுகின்றனர். கையை இழந்தும் சவாலில் வெற்றிப்பெற்று ஆங்கிலேயரை கூண்டோடு ஒழித்தவர் என்ற ஒண்டிவீரனின் பெருமையை இன்றும் அந்த பகுதியில் மக்கள் பெருமையுடன் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

– யமுனா ஹர்ஷவர்தனா

Next Post

M.C.Rajah- The Forgotten Model For Social Justice And Integration Of Dalits.

Sun Aug 21 , 2022
VSK TN      Tweet    ராவ்பகதூர் எம்.சி.ராஜா பிள்ளை அவர்கள் அகில இந்திய அளவில் ஷெட்யுல்ட் இன மக்களை ஒருங்கினைத்த முதல் சமூகப் பிரதிநிதி.1916 முதல் 1943 வரை ராவ்பகதூர் ராஜாவின் அரசியல் எழுச்சி என்பது மறந்து போன ( இருட்டடிப்பு செய்யப்பட்ட) வரலாற்று உண்மை. பாபாசாகேப் அரசியலுக்கு வருவதற்கு முன்னரே, ராவ்பகதூர் எம்.சி. ராஜா பிள்ளை (1916 இல்) சென்னை மாகான ஆதி திராவிடர் மஹாஜன சபையின் மாகான செயலாளர். அப்போது பாபாசாகேப் […]