VSK TN
இந்திய துணைகண்டத்தின் மிகப்பெரிய சாம்ராஜ்யமான மராத்திய சாம்ராஜ்யம் வருடம் 1674 முதல் 1818 வரை நீடித்தது. மராட்டியப் பேரரசை ஆட்சி செய்த மன்னர்களில் தலைச்சிறந்து விளங்கியவர், சத்ரபதி சிவாஜி அவர்கள்.16 வயது சிறுவனாக இருக்கும் பொழுது தொடங்கிய அந்த வீரனின் வேட்கையும், துணிச்சலும் பீஜப்பூர் சுல்தானின் கோட்டையை கைப்பற்றுவதிலிருந்து தொடங்கி மராத்திய சாம்ராஜ்யம் உருவாக நுழைவு வாயிலாக அமைந்தது. பல புதுமைகளை கண்ட இராணுவம், கொரில்லா தாக்குதல் என்றழைக்கப்படும் மறைமுகமான நிலப்பரப்பில் பதுங்கியிருந்து அதிவிரைவாக, அதிர்ச்சி வைத்தியம் அளித்து தன்னை விட பலம் வாய்ந்த எதிரிகளை கூட துவம்சம் செய்தல் என்று சிவாஜியின் போர் பாணியே தனி. சத்ரபதி சிவாஜி அவர்கள் புனே நகரின் அருகில் உள்ள சிவனேரிகோட்டையில், சஹாஜி மற்றும் ஜிஜாபாய் என்ற தம்பதியினருக்கு பிப்ரவரி 19ஆம் தேதி 1627ஆம் ஆண்டு பிறந்தார் . சிவாஜி தன தாயின் அரவணைப்பில் வளர்ந்தார்.
அவரது தாய் அவருக்கு தாய் மண் மீது வைக்கவேண்டிய பாசம் குறித்தும், மக்களின் மீது வைக்கும் அன்பு பற்றியும் தெளிவாக கூறி அவனை வளர்த்தார். அவரின் தனித்துவமான இராணுவ திறமைகள் மற்றும் சாதனைகள், சமஸ்கிருதம், இந்து பண்பாடு, கலைச்சிறப்புகள், அவரின் யுத்த தந்திரங்கள் மற்றும் அமைதிகால இராஜாங்கம் ஆகியவற்றை கற்று கொண்டார். தன்னை வளர்க்கும் சொந்த விஷயங்கள் மட்டும் கற்றுக்கொள்ளாமல் தனது அறிவினை பெருக்கும் காவியங்களான ராமாயணம் மற்றும் மஹாபாரதம் போன்ற புராண இதிகாசங்களையும் கற்று தன் பண்பினை நெறிப்படுத்திக்கொண்டார்.
1645ஆம் ஆண்டு தனது 17ஆம் வயதில் டோர்னா கோட்டையை தாக்கி கைப்பற்றினார். பிறகு 1647ஆம் ஆண்டு கொண்டனா மற்றும் ராஜ்கோட் கோட்டைகளை கைப்பற்றினார். பிறகு புனே தொடர்ந்து மேற்கத்திய கோட்டைகளையும் கைப்பற்றி தனது பேரரசை விரிவுபடுத்தினார். பிறகு நிறைய போர்களை அடுத்தடுத்து சந்தித்தார் சத்ரபதி சிவாஜி. 1964, 70 ஆம் ஆண்டுகளில் சூரத் நகரை தாக்கி சிவாஜி அவர்கள் சூரத் முழுவதும் கொள்ளை அடித்து தனது ராஜ்யத்தின் செல்வத்தினை பெருக்கிகொண்டார். பீஜப்பூர் சுல்தான் தன்னுடைய தலைமை தளபதியான அப்சல்கானை சிவாஜியிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்த ஆணையிட்டார். ஒரு மலையின் மேல் ஒரு கூடாரத்தில் படைகளின்றி தனியாக இருவரும் சந்தித்து கொண்டனர். இது தனக்கு அமைக்கப்பட்ட பொறியாக கூட இருக்கலாம் என்று சிவாஜி சற்று எச்சரிக்கையாக இருந்தார்.
அவரது யூகம் சரியானது. பேச்சுவார்த்தையின் போது எதிர்பாராத தருணத்தில் தளபதி அப்சல்கானின் (பிச்சுவா) கத்தி சிவாஜியின் மார்பை பதம் பார்த்தது. சிவாஜி அணிந்திருந்த உள்கவசம் அவரை காப்பாற்றியது. அதற்கு பதிலடியாக சிவாஜி மறைத்து வைத்திருந்த சிறிய அளவிலான புலி நெகங்கள் வடிவிலான உலோகத்தினால் அப்சல்கானை கொடூரமாக தாக்கினார். அப்சல்கானின் உயிர் பிரிந்தது. தளபதி இல்லாத பீஜப்பூர் படைகளை நோக்கி தாக்குதல் நடத்தும்படி சிவாஜியின் சமிக்கைகளுக்காக காத்திருந்த தமது படைகளுக்கு கட்டளையிட்டார். பிரதாப்கர் யுத்தம் நடந்த வருடம் 1659. பிஜப்பூரின் படைகளை நாலாப்புறமும் சிதறி ஓட விட்டது சிவாஜியின் படைகள்.
1666ல், ஔரங்கசீப் அவரின் ஐம்பதாவது பிறந்தநாள் விழாவில் சிவாஜியும், அவரின் ஆறு வயது மகன் சம்பாஜியையும் ஆக்ராவிற்கு வர அழைப்பு விடுத்திருந்தார். ஆக்ரா அரண்மனையில் அவருக்கு கிடைத்தது அவமானங்களுக்கும் அதிர்ச்சியும் தான். இருவரையும் வீட்டு காவலில் வைக்க உத்தரவிட்டார் ஔரங்கசீப். ஔரங்கசீப்’பின் சூழ்ச்சி வலைக்குள் தான் விழுந்ததை உணர்ந்த சிவாஜி அங்கிருந்து தப்பிக்க ஆயத்தமானார்.
சிவாஜியை கைது செய்த மகிழ்ச்சியில் ஔரங்கசீப் ராஜ்ஜியத்தில் உள்ள அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. அரண்மனை விழாக்கோலம் பூண்டது. அரண்மனைக்கு வரும் பூக்கூடையில் ஒன்றில் சிவாஜியும், மற்றொரு கூடையில் சம்பாஜியும் பதுங்கி தப்பி வெளியேறிய வருடம் 1666. பூனாவில் உள்ள கோட்டைக்கு சிவாஜி திரும்பியதை மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் கொண்டாடினர். பின்னர் சமாதான ஒப்பந்தம் சுமார் வருடம் 1670 வரை நீடித்தது. மொகலாய இளவரசர் பகதூர்ஷாவுடன் சிவாஜிக்கு இருந்த நட்பினால் ஔரங்கசீப்-க்கு பிறகு சந்தேகம் ஏற்பட்டது. இருவரின் ஒற்றுமையினால் தம்முடைய ஆட்சிக்கு சிக்கல் வந்துவிடும் என்று எண்ணினார். மீண்டும் ஔரங்கசீப் யுத்தத்தை தொடங்கினார். இம்முறை போரிட்ட சிவாஜி இழந்த பெரும் பகுதிகளை நான்கே மாதங்களில் மீட்டார்.
பூனா மற்றும் கொங்கன் பிரதேசங்கள் முழுமையாக தம் கட்டுப்பாட்டிற்குள் வந்தவுடன் சிவாஜி ராஜ்ஜியத்தை முழு ஹிந்து பேரரசாக அறிவித்தார். மராத்தியர்கள் சிவாஜியின் கட்டளைப்படி தக்காண பகுதிகள் முழுவதும் இந்து சுயாட்சி கொள்கைப்படி ஆட்சி நடத்தினர். அதில்ஷாவின் பகுதிகளான தமிழ்நாட்டின் வேலூர் கோட்டையும், செஞ்சி கோட்டையும் சிவாஜியால் கைப்பற்ற பட்டவையே. பின்பு தமது சகோதரர் வெங்கோஜியுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி வெங்கோஜி ஆண்டு வந்த தஞ்சாவூர் மற்றும் மைசூர் பகுதிகளுடன் அவைகளை இணைத்தார். தக்காண பகுதிகள் முழுவதும் மொகலாயர்களையும், சுல்தான்களையும் விரட்டி இந்து மக்கள் சுயாட்சி அமைய வேண்டும் என்கிற சிவாஜியின் லட்சியம் நிறைவேறியது. சிறந்த ஆட்சியாளராகவும், நிர்வாகியாகவும் விளங்கிய சத்ரபதி சிவாஜி அவர்கள், இறுதியில் இரத்தப்பெருக்கு நோயினால் பாதிக்கப்பட்டு, 1680 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி தன்னுடைய 53 வது வயதில் காலமானார். வாழும்வரை சக்ரவர்த்தியாக வாழ்ந்த சத்ரபதி சிவாஜி இன்றுவரை வீரத்தின் அடையாளமாக திகழ்கிறார் என்றால் அது மிகையில்லை.
திரு.அனுக்ரஹா ரவி.