சுதந்திர போராட்ட வீரரும் சிறந்த தமிழ் எழுத்தாளரும் பதிப்பாளருமான பரலி. சு. நெல்லையப்பரின் நினைவு நாள் இன்று. மகாகவி சுப்பிரமணிய பாரதியாரால், ‘தம்பி’ என்றழைக்கப்பட்ட சிறப்புக்குரியவர் பரலி. சு. நெல்லையப்பர். கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் தொண்டர். மகாத்மா காந்தியின் வழியில் சென்றாலும் ஜீவா போன்ற புரட்சி இயக்கத்தவர்களுடன் இறுதிவரை ஆழ்ந்த நட்புறவு கொண்டிருந்தார்.
பரலி சு நெல்லையப்பர், தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பரலிக்கோட்டை என்னும் சிற்றூரில் 1889ஆம் ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி சுப்பிரமணிய பிள்ளை, முத்துலட்சுமி அம்மாளுக்கு இரண்டாவது மகனாக பிறந்தார்.
இவரது அண்ணன் பரலி. சு. சுந்தரம்பிள்ளை வ.உ.சிதம்பரனாரோடு இணைந்து சுதேசி இயக்கத்தை பரப்புவதிலும் வலுப்படுத்துவதிலும் முனைப்போடு ஈடுப்பட்டவர். சுதேசி கப்பல் நிறுவனத்தின் பங்குகள் பலவற்றை திருச்சி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விற்று பல்லாயிரம் ரூபாயை திரட்டி கொடுத்தவர்.
மதுரை வத்தலக்குண்டில் பிறந்த சுப்பிரமணிய சிவாவை தூத்துக்குடிக்கு அழைத்து வந்து வ.உ.சிக்கு அறிமுகம் செய்து வைத்தவர். சுப்பிரமணிய சிவாவால் வந்தே மாதரம் பிள்ளை என்று அழைக்கப்பட்டவர்.
நெல்லையப்பரின் தம்பியான பரலி சு. குழந்தைவேலன். நெல்லையப்பரோடு இணைந்து வ.உ.சி.யின் கப்பல் நிறுவனத்தில் கணக்கராக வேலைப் பார்த்தவர். பின்னாளில் லோகோபகாரி என்னும் இதழை நடத்துவதில் நெல்லையப்பருக்குத் துணைநின்றவர்.
நெல்லையப்பர் திருமணம் செய்துகொள்ளவில்லை. எனவே, தன்னுடைய இறுதிக் காலத்தில் பூங்கோதை என்னும் பெண்ணைத் தத்தெடுத்து வளர்த்தார்.
நெல்லையப்பர் பள்ளி படிக்கும் காலத்திலேயே தமிழிலக்கிய, இலக்கணங்களைக் கற்று, கவிதை எழுதும் திறமை பெற்றிருந்தார். 1907ஆம் ஆண்டில் பள்ளிப் படிப்பை முடித்த சில நாட்களிலேயே தூத்துக்குடியில் வ.உ.சி. நடந்திய சுதேசி கப்பல் நிறுவனத்தில் கணக்கராகப் பணியாற்றத் தொடங்கினார்.
அதே வருடம் மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள சூரத் நகரில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசு மாநாட்டில் கலந்துக் கொள்வதற்கு வ.உ.சி. உள்ளிட்டவர்களைத் அழைத்து செல்வதற்காக தூத்துக்குடிக்கு வந்த மகாகவி பாரதியை வ.உ.சி.யின் வீட்டில் முதன்முறையாக பார்த்தார்.
அங்கிருந்த பாரதியின் கவிதைகள் அடங்கிய நான்கு பக்க வெளியீடு ஒன்றைப் படித்தும் அவரது இந்தியா இதழைப் படித்த நெல்லையப்பர் பாரதியின் மேல் தீராத அன்பு கொண்டார்.
வ.உ.சி., சுப்பிரமணிய சிவம், சுப்பிரமணிய பாரதி, நீலகண்ட பிரமச்சாரி, அரவிந்தர், வ.வே.சு.ஐயர் முதலிய விடுதலைப் போராட்ட வீரர்களுடன் பழகிய நெல்லையப்பர் தானும் விடுதலைப் போராட்டங்களில் பங்கேற்றார்.
வ.உ.சி ஆங்கிலேயர்களின் வீடுகளில் வேலைபார்த்த வேலையாட்களை திரட்டி நடத்திய வேலை நிறுத்த போராட்டத்திற்கு நெல்லையப்பர் பெரிதும் உதவினார். வ.உ.சி நடத்திய பேரணிகளில் பங்கேற்றார்.
கப்பல் நிறுவனம் நடத்தியதற்காகவும் ஊர்வலம் நடத்தியது, வந்தே மாதரம் எனக்கூவியது ஆகிய குற்றங்களுக்காகவும் 1908ஆம் ஆண்டு மார்சு 12ம் தேதி வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா ஆகியோர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு பாளையம்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதை கண்டித்துக் கூட்டம் ஒன்றை நடத்துவதற்கான துண்டறிக்கை ஒன்றினை நெல்லையப்பர் அச்சிட்டு வெளியிட்டார். அதற்காக அவரை காவல்துறை கைது செய்தது. அவர் பாளையம்கோட்டைச் சிறையில் வ.உ.சி உள்ளிட்டோருடன் அடைக்கப்பட்டார்.
பின்னர் 1930ம் ஆண்டில் வேதாரண்யத்தில் நடைபெற்ற உப்புச் சத்தியாக்கிரகத்தில் கலந்துகொண்டார். அதனால் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை பெற்றார்.
1932ஆம் ஆண்டில் காந்தியடிகளின் கட்டளையை ஏற்று சென்னை சிந்தாரிப்பேட்டையில் கள்ளுக்கடை மறியல், அந்நியத் துணிக்கடை முன்பு ஆர்ப்பாட்டம் ஆகிய போராட்டங்களை நெல்லையப்பர் தலைமையேற்று நடத்தினார்.
1941ஆம் ஆண்டில் நடைபெற்ற தனிநபர் சத்தியாகிரகம் என்னும் தனியாள் அறப்போராட்டத்தில் கலந்துகொண்டார். அதனால் பெல்லாரி சிறையில் ஆறு மாதங்கள் அடைக்கப்பட்டார்.
கோவை சிறையில் வ.உ.சி. அடைக்கப்பட்ட போது அவரை விடுதலை செய்ய நெல்லையப்பர் பல முயற்சிகளை மேற்கொண்டார். கோவையில் வழக்கறிஞர் சி. கே. சுப்பிரமணிய முதலியார் உதவியோடு கோவை-பேரூர் சாலையில் நெல்லையப்பர் ஆசிரமம் ஒன்றை அமைத்துத் தங்கினார்.
அவ்வப்பொழுது சிறைக்குள் சென்று வ.உ.சி.யைச் சந்தித்து, அவர் இடும் கட்டளைகளை அந்த ஆசிரமத்தில் இருந்தவாறே நிறைவேற்றினார். 1912ஆம் ஆண்டின் நடுவில் வ.உ.சி.யை மலையாள நாட்டிலுள்ள கண்ணனூர் சிறைக்கு மாற்றியதும், நெல்லையப்பர் சொந்த ஊருக்குத் திரும்பினார்.
பின்னர் 1912ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வ.உ.சி விடுதலை பெற்று சென்னை சிந்தாரிப்பேட்டையில் குடியேறினார். அவரைக் காண்பதற்காக அங்கு வந்த நெல்லையப்பர் தன் இறுதி காலம் வரை சென்னையிலேயே தங்கினார்.
பாரதியாரின் பக்தர்
மகாகவி சுப்பிரமணிய பாரதியார் மேல் அளவற்ற அன்பும் பக்தியும் கொண்டிருந்த நெல்லையப்பர், குரோம்பேட்டையில் தான் வாழ்ந்த பகுதிக்கு பாரதிபுரம் எனப் பெயர் சூட்டினார். அங்கிருந்த பிள்ளையாருக்கு பாரதி விநாயகர் என்றும் பெயரிட்டார்.
பாரதியார் சென்னையில் வசித்து வந்த போது அவர் பணியாற்றிய இதழ்களில் பாரதியாரின் கவிதைகளை வெளியிட்டார். அதில் கிடைத்த பணத்தை பாரதியாருக்கு அனுப்பி வைத்தார்.
பாரதியார் புதுவையில் இருந்த போதும் அவருக்கு தேவைப்பட்ட பணத்தை திரட்டி புதுவை நண்பர்கள் யாருடைய பெயருக்காவது அனுப்பி பாரதிக்குக் கிடைக்கச் செய்து வந்தார்.
1921 செப்டம்பர் 11ஆம் நாள் பாரதியார் உயிரிழந்த போது அவரது உடலை சுடுகாட்டிற்குத் தூக்கிச் சென்றவர்களுல் நெல்லையப்பரும் ஒருவர்.
பாரதியின் மறைவுக்குப் பின்னர் அவரின் புகழைப் பரப்பும் நோக்குடன் தனது லோகோபகாரி இதழில் பாரதியாரின் பேட்டிகளை வெளியிட்டார். ஆண்டுதோறும் அவரது நினைவு நாளில் பாரதிவிழாவையும் நடத்தினார்.
1923ஆம் ஆண்டில் தன் நண்பர்கள் சிலரோடு இணைந்து பாரதி பிரசுராலயம் என்னும் நிறுவனத்தைத் தொடங்கி அதன்வழியாக குயில்பாட்டு, கண்ணன் பாட்டு, பாரதி அறுபத்தாறு ஆகிய பாடல்கள் அடங்கிய தொகுதி ஒன்றை வெளியிட்டார்.
1953ஆம் ஆண்டில் பாரதியார் படைப்புகளை தமிழக அரசு வெளியிடுவதற்காக அமைத்த குழுவில் நெல்லையப்பர் இடம்பெற்றார்.
எழுத்தாளர்
சிறந்த எழுத்தாளரும் கவிஞருமான நெல்லையப்பர் ஏறத்தாழ 50ஆண்டுகளாகத் தான் எழுதிய கவிதைகளைத் தொகுத்து 142 பக்கங்களில் நெல்லைத் தென்றல் என்னும் நூலாக 1966ஆம் ஆண்டு வெளியிட்டார். மேலும் பாரதி வாழ்த்து, உய்யும் வழி ஆகிய கவிதை நூல்களை வெளியிட்டார்.
பல்வேறு இதழ்களில் பணியாற்றிய பொழுது தலையங்கம், செய்திக் கட்டுரைகள், மதிப்புரைகள் எனப் பலவற்றை தன்னுடைய இயற்பெயரிலும் பாரி என்னும் புனைப் பெயரிலும் எழுதினார்.
பாரதியார், வ.உ.சி ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை முறையே பாரதியார் சரித்திரம், வ.உ.சிதம்பரம்பிள்ளை என்னும் பெயரில் நூல்களாக வெளியிட்டார்.
நெல்லையப்பர் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட காலத்தில் அவருடைய கட்டுரைகளும், விமர்சனங்களும், பதிப்புரைகளும் நூற்றுக்கணக்கில் வெளிவந்தன. ஆயினும் மிகச் சிலவே இன்று நூல் வடிவில் கிடைக்கின்றன.
எளிய தமிழில் பெரிய விஷயங்களை எழுதித் தமிழ்ப் பத்திரிகை வசன நடைகளை வளர்த்தவர்களில் நெல்லையப்பரும் ஒருவர்.
இறுதிக்காலம்
தேச நலனுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்த பரலி சு நெல்லையப்பர் திருமணம் செய்துகொள்ளவில்லை. அதனால் தன் இறுதிக்காலத்தில் பூங்கோதை என்ற பெண்ணை தத்தெடுத்து வளர்த்தார்.
பரலி.சு.நெல்லையப்பரின் வயோதிக காலத்தில் சுதந்திர போராட்ட வீரர்களுக்கான உதவித்தொகையை மத்திய அரசு வழங்கி வந்தது. ஆனால் 1967ம் ஆண்டு நெல்லையப்பரின் பொருளாதார நிலை உயர்ந்துவிட்டதாக முதல்வர் அண்ணா தலைமையிலான அப்போதைய தமிழக அரசு தெரிவித்ததால் அவரது உதவித்தொகை நிறுத்தப்பட்டது.
பின்னர் எழுத்தாளர் எதிரொலி விசுவநாதன், அன்றைய சட்ட மேலவை உறுப்பினர்களாக இருந்த நாமக்கல் வெ. இராமலிங்கம், தி. க. சண்முகம் ஆகியோரின் முயற்சியால் 1969ஆம் ஆண்டு முதல் மீண்டும் நெல்லையப்பருக்கு மத்திய அரசின் உதவித் தொகை கிடைத்தது.
இறுதியில் 1971ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28ம் தேதி பரலி.சு.நெல்லையப்பர் சென்னை குரோம்பேட்டையில் உள்ள தன் இல்லத்தில் மறைந்தார்.
அவரது நினைவுநாளான இன்று தேச விடுதலைக்காகவும் தேசத்துக்காக போராடியவர்களுக்கும் பரலி சு. நெல்லையப்பர் செய்த தொண்டுகள், தமிழ் மீது அவர் கொண்டிருந்த பற்று ஆகியவற்றை நினைவுக்கூறுவோம்.
–திருமதி.நிரஞ்சனா