ஸ்வாமி சத்யமித்ரானந்த கிரி மறைவுக்கு ஆர்.எஸ்.எஸ் இரங்கல்

18
VSK TN
    
 
     

பூமிப்பந்தின் 70 நாடுகளில் ஹிந்துத்துவத்தை, சனாதன தர்மத்தை பிரசாரம் செய்துவந்த ஸ்வாமி சத்யமித்ரானந்த கிரி 87 வயதில் ஜூன் 25 அன்று இறைவன் திருவடி அடைந்தார். 
ஆக்ராவில் 1932 ல் அவதரித்த சுவாமிஜியின் சிறுவயதுப் பெயர் அம்பிகா பிரசாத். பெற்றோர் ஆழ்ந்த தெய்வபக்தி உள்ளவர்கள். எனவே அவர்கள் வாழ்க்கையில் நேர்மை முதலிய பண்புகள் நிறைந்து காணப்பட்டது. ஒரு முறை அவர்களின் வயலில் தங்க நாணயம் ஒன்று கிடைத்தது. அம்பிகா பிரசாதின் தந்தை நல்லாசிரியர் விருது பெற டில்லி சென்றார். விருது பெறுவதற்கு முன் ஜனாதிபதி டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் கரங்களில் அந்த தங்க நாணயத்தை ஒப்படைத்து “நியாயப்படி இது அரசுக்குத்தான் சொந்தம்” என்று கூறினார். தந்தையின் நற்பண்பு தனயனின் வாழ்விலும் அப்படியே பதிந்தது. 
படிப்பு முடித்த பின் அம்பிகா பிரசாத் தவ வாழ்க்கையில் ஈடுபடும் ஆர்வம் கொண்டவராக துறவு பூண்டார் சத்யமித்ரானந்த கிரி என்ற துறவுப் பெயர் ஏற்றார். 27 வயதிலேயே அவர் ஜோதி மடத்தின் சங்கராச்சாரியார் ஆனார். சங்கராச்சாரியாராக நாடு முழுதும் அவர் யாத்திரை செய்தபோது மடங்களில் துறவிகளை மட்டும் சந்தித்துவிட்டு நின்றுவிடாமல் பழங்குடி மக்களையும் குக்கிராமங்களில் வசிக்கும் எளியோரையும் நகரங்களில் குடிசைப் பகுதிகளில் வசிப்போரையும் சந்தித்து ஆசி வழங்கினார். அவர்களுக்கு சேவை செய்வதே அவரது வாழ்வின் முக்கிய பணி ஆயிற்று. 
37வது வயதில் அவர் சங்கராச்சாரியர் பீடத்தின் பொறுப்பை சீடரிடம் ஒப்படைத்துவிட்டு உலக நாடுகளில் வசிக்கும் ஹிந்துக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த தொடர்ந்து சுற்றுப்பயணம் செய்து வந்தார். தாயகத்திலும் அவரது தொண்டுகள் தொடர்ந்தன. 
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்துடன் அவர் நெருங்கிய தொடர்பில் இருந்தார். ஒருமுறை சங்கத்தின் நாகபுரி மூன்றாம் ஆண்டு பண்பு பயிற்சி முகாமின் நிறைவு விழாவில் தலைமை ஏற்க அவர் அழைக்கப்பட்டார். அப்போது சர்சங்கசாலக் ஸ்ரீகுருஜி. விழாத் தலைவர் வரும்போது அவரை நாகபுரி ரயில் நிலையம் சென்று வரவேற்பது குருஜியின் பழக்கம். இதை அறிந்திருந்த சுவாமிஜி என்னை வரவேற்க குருஜி ரயில் நிலையம் வரக்கூடாது. அப்போதுதான் நான் விழாவில் கலந்து கொள்வேன் என்று நிபந்தனை விதித்தார். ஏனென்றால் ஸ்ரீ குருஜியிடம் அவருக்கு அவ்வளவு மதிப்பு இருந்தது. 
2006 ல் ஸ்ரீகுருஜி நூற்றாண்டு விழா கமிட்டியின் தலைவராக சுவாமி சத்யமித்ரானந்தா பொறுப்பேற்றார். விஸ்வ ஹிந்து பரிஷத்தின் பணி உலகெங்கும் பரப்புவதில் சுவாமிஜிக்கு முக்கிய பங்கு இருந்தது. இந்தத் துறவி கார்கில் போர் முனைக்கு சென்று பாரத ராணுவ வீரர்களை ஊக்குவித்து குறிப்பிடத்தக்கது. பஞ்சாபில் பாகிஸ்தான் தூண்டுதலால் சமுதாயத்தைப் பிளவு படுத்தும் முயற்சி நடைபெற்ற போது சுவாமிஜி 300 துறவிகளுடன் மாநிலம் முழுதும் பாத யாத்திரை மேற்கொண்டார். அமிர்தசரஸ் பொற்கோவிலில் வழிபட்டார். அப்போது அமரர் அசோக் சிங்கல் அருடன் இருந்தார். ராம ஜென்மபூமி விடுதலை இயக்கத்தின் அங்கமாக சுவாமிஜி பல்வேறு நாடுகளில் ராமலீலா திருவிழாவை ஏற்பாடு செய்தார். 
இதற்கெல்லாம் சிகரமாக சுவாமிஜி ஹரித்வாரில் தாம் நிர்மாணித்த பாரத மாதா கோயிலை திறந்து வைக்க 1983ல் பிரதமர் இந்திரா காந்தியை அழைத்தார். ஆர் எஸ் எஸ் மீது அபிமானம் கொண்ட இந்தத் துறவி விடுத்த அழைப்பை தட்டிக்கழிப்பதற்காக இந்திரா காந்தி தனக்கு வேறு வேலை இருப்பதாக சொன்னார். ’தாங்கள் விழாவில் கலந்து கொள்கிறீர்கள் என்பது ஒரு துறவியின் சங்கல்பம்’ என்று மட்டும் சுவாமிஜி இந்திரா காந்தியிடம் சொன்னார். இதையடுத்து ’ஒரு துறவியின் சங்கல்பம் வீணாகக் கூடாது, நான் வருகிறேன்’ என்று கூறி இந்திரா விழாவில் கலந்து கொண்டார். பின்னர் உஜ்ஜயின் கும்பமேளாவில் சுவாமிஜி க்ஷிப்ரா நதியில் புனித நீராட தீர்மானித்தார். தன்னுடன் புனித நீராட வருமாறு கும்பமேளா துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்த 3,500 துப்புரவுத் தொழிலாளர்களை அழைத்தார். அவருடன் புனித நீராடி எழுந்த அந்த மக்களின் கண்களும் ஆனந்தக் கண்ணீரில் புனித நீராடின! 
பாரத மாதாவுக்கு திருக்கோயில் கட்டிய முன்னாள் சங்கராச்சாரியார் பத்மபூஷண் சுவாமி சத்யமித்ரானந்த கிரி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் சர்சங்ககாலக் மோகன் பாகவத்தும் சர்க்கார்யவாஹ் சுரேஷ் ஜோஷியும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையிலிருந்து; 
“சுவாமிஜி நம்மையெல்லாம் விட்டுப் பிரிந்தது மிகுந்த வேதனை தரும் விஷயம். அவர் பாரதத்தின் ஆன்மீகத்துக்கு சக்திவாய்ந்த ஆதாரமாக விளங்கினார். புனிதமும் நட்பும் தொண்டும் சமர்ப்பணமுமாக வாழ்ந்த அவர் ஊரில் புனிதமான சூழ்நிலையை, சமநிலையை ஏற்படுத்த உறுதுணை புரிந்தார். சுவாமிஜி சமுதாய நல்லிணக்கத்துக்காக சொல் செயல் சிந்தனை அனைத்தாலும் பாடுபட்டார். ஏற்றத்தாழ்வை அழித்தொழிப்பதில் இந்த்த் துறவி தீவிர கவனம் செலுத்தினார். அவரது மறைவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவது நம் அனைவரின் கடமை”. . 

                                                                                                                                                                                                                                                                                                                                                                                  

Leave a Reply

Your email address will not be published.

Next Post

கல்வி உதவித்தொகை வழங்கும் விழா, சென்னை

Sat Jul 6 , 2019
VSK TN      Tweet     பல்வேறு அமைப்புகள் சார்பில் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு ரூபாய் 8.20 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது  சென்னையில் டாக்டர் ஹெட்கேவார் ஸ்மாரக் சமிதி, பாரதி சேவா சங்கம், ஸ்ரீமதி அன்னம்மாள் விவேகானந்தர் அறக்கட்டளை, ஜன சேவா அறக்கட்டளை, மாதவ சேவா சமிதி, தமிழ்நாடு சேவா நிதி உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் 120 ஏழை மாணவர்களுக்கு ரூபாய் 8.20 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா […]