மூன்றாமாண்டு பயிற்சி வகுப்பு நிறைவு விழாவில் ஸர்ஸங்க சாலக் மோஹன்ஜீ பாகவத் கலந்து கொண்டு உரையாற்றினார்.
இப்போது நாம் சுதந்திரத்தின் 75ம் ஆண்டு விழாவைக் கொண்டாடி வருகிறோம்.
மறக்கப்பட்ட வரலாறை நினைத்துப் பார்க்கிறோம். எந்தக் கதைகளைக் கேட்டால் நமக்குள் உத்வேகம் பிறக்குமோ அப்படிப்பட்ட வரலாற்றுப் பக்கங்கள் ஆயிரக்கணக்கில் ,நமக்கு விழிப்புணர்வு தருகின்றன. நம் தேசப் பற்றும், தேசம் மீது மரியாதையும் கூடியது. நம் முன்னோர்களைப் போல் நாமும் தேச நலனுக்காகப் பாடுபடவேண்டுமென்ற எழுச்சியும், உற்சாகமும் தோன்றியது.
உலக அரங்கில் கூட பாரத தேசத்திற்கு மதிப்பு கூடியுள்ளதைக் காண்கிறோம். கடுமையான கொரோனா காலத்தில் கூட பாரதத்தின் பொருளாதார நிலை வீழ்ச்சியடையாமல் வளர்ச்சிப் பாதையில் செல்கிறது.நமது பாரதம் செல்லும் பாதையைத் தான் உலக நாடுகள் உற்று கவனிக்கின்றன.ஜீ 20யின் தலைமைப் பொறுப்பு பாரதத்துக்குக் கிட்டியுள்ளது.இந்த கௌரவம் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.
இப்போது புதிய நாடாளுமன்ற வளாகம் திறக்கப்பட்டு,
அதிலுள்ள நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் சித்திரங்கள் நமக்கு விழிப்புணர்வு தருவதாகக் கூறினார்.
ஆனால், தேசத்தின் பல பகுதிகளில் மொழி , இனம் , மதம் இன்னும் சில காரணங்களுக்காக நடக்கும் சர்ச்சைகள் களையப்படவேண்டும்.
மக்களிடையே ஒற்றுமை உணர்ச்சி வளரவேண்டும்.எல்லையில் எதிரிகளிடம் பலத்தைக் காட்டவேண்டுமே தவிர நமக்குள்ளே பலப் பரிட்சை கூடாது .
பாரத தேசம் ஒன்றில் தான் பல மொழியினர், பல மதத்தினர், பல இனத்தவர் தங்கள் தனித்தன்மையுடன் சுதந்திரமாக வாழ்கின்றனர்.
தேசம் என்று கூறினால் நாமெல்லோரும் இந்தியர்கள் தான்.
நமது பழமையான பண்பாடு எல்லோரையும் அரவணைத்துச் செல்லவே நமக்கு போதிக்கிறது.எல்லோரும் ஒன்று தான் ; பாரதத் தாயின் மைந்தர்கள் என்பதே ஸத்தியம்.
இளைஞர்கள் தங்கள் நேரத்தை நல்லவிதமாகப் பனய்படுத்தவேண்டும்.நல்லொழுக்கம், நல்ல பண்பாடு வளர்த்துக்கொண்டு சுயநலமின்றி தேசத்தின் மேன்மைக்கு உழைக்கவேண்டுமென்றார்.
ஸ்வயம் சேவகர்கள் தங்கள் ஆதர்ச புருஷராக புராணத்தில் அனுமனையும் வரலாற்றில் சத்ரபதி சிவாஜியையும் கொள்ளவேண்டும். அவர்களை நினைத்து பாரதத்தை விஸ்வ குரு ஆக்குவதே லட்சியம் என்று சங்கல்பம் செய்துகொள்ளவேண்டும் என்று ஸர்ஸங்க சாலக் தனது உரையில் குறிப்பிட்டார்.
விழாவில் தலைமையேற்று ஸ்வாமி.காடு.சித்தேஸ்வர் ஜீ உரையாற்றினார்.
உலகிலேயே அதிக ஜனத்தொகை , அதிக மொழிகள், கலாச்சாரங்களுடைய நம் பாரத தேசம் பலமுறை தாக்குதலுக்குள்ளானது.
நமது வளமை, நமது செல்வம் சூறையாடப்பட்டது.ஆனாலும் கூட நமக்கு ஏழ்மையில்லை காரணம் நாம் பண்பாட்டை மட்டுமே நமது செல்வமாக நினைப்பதால்.
நமது தேசம் பாணினி , அகஸ்தியர் ,பரத்வாஜர் ,பாஸ்கரர் ,ஆர்யபட்டா போன்ற ரிஷி ,முனி, அறிஞர்களை உருவாக்கிய தேசம் என்று பெருமைகொள்ளவேண்டும்..
ராமாயணம் ,மஹாபாரதம் தொடங்கி வரலாற்றுக் காலம் வரை நீதி தவறாமல் ஆட்சி செய்த அரசர்களின் வாழ்க்கை உலகுக்கே பாடமாக அமையும்.
அன்றும் இன்றும் என்றும் பாரதம் விஸ்வ குருவாகத் திகழ்கிறது.
உலகில் அதிகமான இளைஞர்களை உடைய நாடு பாரதம்.
இளைஞர் சக்தி வீணாகக் கூடாது.
மக்கள் தொகை அதிகரிப்பு பிரச்சனையில்லை. நம் பண்பாட்டை , பாரம்பரியத்தை, வரலாற்றை மறந்தது தான் பிரச்சனை.
சுதந்திரப் போர் நடந்துகொண்டிருந்த போதே வருங்கால இந்தியா குறித்து கனவு கண்டவர் டாக்டர். ஹெட்கேவார்.
அவர் துவங்கிய சங்கம் பாரதத்தை மீண்டும் அதன் பழைய உன்னத நிலைக்கு கொண்டு வரும்.
சுயநலமின்மை, தேச சேவை, ஞானம் ஒழுக்கம் , சமரசம், ஹிந்துத்வம் இதுவே சங்கம்.
இந்தத் தாக்கம் ஒவ்வொரு ஸ்வயம்சேவகர் மீதும் இருக்கும்.
தேசத்தை ஒற்றுமைப் பாதையில் வழிநடத்துவது சங்கம்.நமக்குள் இருக்கும் பல நல்ல குணங்களை, ஞானத்தை, சம்ஸ்காரங்களை வெளிக் கொண்டுவர இந்தப் பயிற்சி வகுப்பு உதவி செய்கிறது .
நமது இளைஞர்களைச் சுற்றி பல தீமைகள் உள்ளன.அதை அழிக்க முடியாவிட்டாலும் நல்லொழுக்கத்தை, நற்குணங்களைக் கடைபிடிப்பதன் மூலம் தீயவை நெருங்காமல் தவிர்க்கலாம்.சங்கம் அதை திறம்படச் செய்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.