KARAIKAL AMMAIYAR !

VSK TN
    
 
     

நாயன்மார்களில் பெண்பாற்புலவர்களில் மூவரில் ஒருவரும், முதல்வருமாய் திகழ்பவர் காரைக்கால் அம்மையார்.
காரைக்காலில் பிறந்தவரும், ஈசனே அம்மையே என்று அழைத்ததாலும், காரைக்கால் அம்மையார் என்று அழைக்கப்பட்டார். இவரது இயற்பெயர் புனித வதியார்.

காரைக்காலில் புகழ்பெற்ற வணிகர் குல தலைவனான தனதத்தனின் மகளாகப் பிறந்து, அருகில் இருக்கும் ஊரில் வணிகர் குல தலைவனான பரமதத்தனை மணமுடித்து செல்வச் செழிப்புடனும், இறையருளுடனும் திகழ்ந்தார் புனிதவதியார்.

அடியார்களை சோதிக்கும் ஈசன் புனிதவதியாரை விடுவாரா என்ன?? ஒரு நாள் புனிதவதியாரின் கணவர் இரண்டு மாம்பழங்களை அவரிடம் தந்து மதிய உணவிற்கு வைக்குமாறு கூறிச் செல்கிறார். அப்பொழுது அவர் வீட்டிற்கு ஈசனே சிவனடியாராக வருகிறார். அவருக்கு அமுது படைத்த புனிதவதியார் அந்த மாம்பழத்தை அவருக்கு படைத்து விடுகிறார். பிறகு மதிய உணவிற்கு வந்த பரமதத்தனுக்கு மீதி ஒரு மாம்பழத்தை அமுது படைக்கிறார்.அதை உண்ட பரமதத்தன் இதன் சுவை நன்றாக இருக்கிறதே, இன்னும் ஒரு மாம்பழத்தையும் எடுத்து வா என்று கூற இறைவனிடம் சென்று கைகளை பிசைந்து கொண்டு, இறைவா சிவனடியாருக்கு ஒரு மாம்பழத்தை படைத்து விட்டேனே! இப்பொழுது என் கணவருக்கு என்ன பதில் சொல்வது! என்று வேண்ட அவர் கைகளில் ஒரு மாங்கனி தோன்றுகிறது! அதனை மகிழ்ச்சியுடன் சென்று கணவருக்கு உண்ண கொடுக்கிறாள்.
அதை உண்ட கணவர் இதன் சுவை மிக அலாதியாக உள்ளதே! இது நான் கொடுத்த மாம்பழம் போல் இல்லையே! இது எங்கிருந்து பெற்றாய் என்று கேட்க, நடந்த விஷயங்களை அவரிடம் சொல்கிறார்.அதனை நம்பாதவராய் பரமதத்தன் அது எப்படி இறைவன் மாங்கனி தருவார்! எங்கே இன்னொரு முறை கேள்!? என்று கூற புனிதவதியார் மீண்டும் இறைவனிடம் கையேந்தி வேண்ட ஒரு மாங்கனி தோன்றுகிறது. இதைக்கண்டு மனம் பதைத்த பரமதத்தன் அதுமுதல் புனிதவதியாரிடம் மிகவும் பணிவுடனும், பக்தியுடனும் நடந்து கொள்ள ஆரம்பித்தார். பிறகு தான் பொருளீட்ட கடல் தாண்டிச் செல்வதாகக் கூறி ஊரில் இருந்து புறப்படுகிறார். கணவன் வரும் நாளை எதிர்நோக்கி சிவகாரியங்களைச் செய்தபடி காத்திருக்கிறார் புனிதவதியார். பல வருடங்கள் பின் அவர் மற்றொரு ஊரில் இன்னொரு திருமணம் செய்து குழந்தையுடன் இருப்பதாகத் தகவல் வரவே, தனது சுற்றத்தாருடன் சென்று அவரைக் காணச் செல்கின்றார். அங்கு புனிதவதியாரை கண்ட பரமதத்தன் அவரது இரண்டாம் மனைவி மற்றும் குழந்தையுடன் அவரது காலில் விழுந்து வணங்கி, தாயே நீ தெய்வ சக்தி பொருந்தியவள்! உன்னுடன் குடும்பம் நடத்தும் அளவிற்கு நான் பாக்கியம் இல்லாதவன்! எனது பெண் குழந்தைக்கு நான் புனிதவதி என்றே பெயரிட்டுள்ளேன், என்று கூறி அங்கிருந்த சுற்றத்தாரிடமும் இவள் தெய்வ பக்தி பொருந்தியவள் என்று எடுத்துக் கூறுகிறார்.இதைக் கண்டு நடுங்கி ஒதுங்கி நின்ற புனிதவதியார் சிறிது நேரம் என்ன செய்வது என்று தெரியாமல் விதிர்த்து நிற்கிறார். ஊராரும், சுற்றத்தாரும் பரமதத்தின் கருத்தை ஆமோதிக்க புனிதவதியார் மீண்டும் தன் அப்பன் ஈசனிடம் கையேந்துகிறார்.

ஆம்! இந்த முறை அன்னை கையேந்தியது மாங்கனிக்காக அல்ல! தங்க மாங்கனி போல பேரழகு திகழும் தனது உருவம் சதைகள் நீங்கி எலும்புடன் கூடிய பேயுருவாய் மாறவேண்டி!!!

ஈசனும் அவரது புனித நோக்கை உணரந்து பேயுரு அளிக்க, தேவர்கள் கூடி பூமழை பொழிய, தந்துபிகள் இசைக்க ஈசனின் பேயுரு கொண்ட பூதகணமாய் மாறி நின்றார்.மக்களனைவரும் பயந்து நடுங்கி ஓட, அம்மையார் ஈசனைத் தேடி நடக்கத் தொடங்கினார்.

கைலாயம் செல்ல எண்ணிய அம்மை, ஈசன் வீட்டிறிருக்கும் கைலாயத்தை காலால் மிதிப்பதா என்று தலையால் நடந்து ஈசனை நோக்கி நகர்கிறார்!!!

இதனைக் கண்ட உமை, ஈசனை நோக்கி

தலையினால் நடந்து இங்கு ஏறும்
எம் பெருமான் ஓர் எற்பின் யாக்கை அன்பு என்னே!

என்று வியந்து கூற, உமையொரு பாகன் உளம் கனிந்து,

வரும் இவன் நம்மைப் பேணும் அம்மை காண் உமையே!

என்று கூறுகிறார்.

ஈசனின் தரிசனம் கண்டு பாதம் பணிந்த அம்மை ஈசனிடம்,

இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டு கின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி
அறவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க என்றார்

ஈசனும் மனமகிழ்ந்து அவ்வரத்தை அருளி, திருவாலங்காடு சென்று தனது ஊர்த்துவ தாண்டவம் காண வரமளித்து, தனது காலடியில் அம்மையை அமர்த்திக் கொண்டார்.

அற்புதத் திருவந்தாதி, திருவாலங்காடு மூத்த திருப்பதிகம், திரு இரட்டை மணிமாலை ஆகிய அற்புத பக்தி இலக்கியங்களைப் படைத்தார்.

திருவாலங்காட்டில் காரைக்கால் அம்மையாருக்கு தனி சன்னதி உள்ளது. இன்றும் ஈசனின் ஆனந்த தாண்டவத்தை அவரது பாதத்தின் அடியில் அமர்ந்து ஆனந்தமாய் ரசித்தபடி, அங்கு வரும் பக்தர்களுக்கு பூரண அருளை வாரி வழங்கி, ஈசனை அடையும் வழியை உணர்த்திக் கொண்டேயிருக்கிறார் நம் அம்மை!

– சுமதி மேகவர்ணம் பிள்ளை

Next Post

हम विश्व मंगल साधना के मौन पुजारी हैं - डॉ. मोहनराव भागवत

Tue Apr 11 , 2023
VSK TN      Tweet     जयपुर, 8 अप्रैल। राष्ट्रीय स्वयंसेवक संघ के सरसंघचालक डॉ. मोहनराव भागवत ने कहा कि संगठित कार्य शक्ति हमेशा विजयी रहती है। हम विश्व मंगल साधना के मौन पुजारी हैं। इसके लिए सामर्थ्य-सम्पन्न संघ शक्ति चाहिए, क्योंकि अच्छा कार्य भी बिना शक्ति के कोई मानता नहीं है, कोई देखता […]