‘நெகிழ்வுத்தன்மை இணைந்த உறுதி’ ஆர் எஸ் எஸ் மற்றும் ஹிந்து வாழ்க்கை முறை – Dr.மன்மோகன் வைத்யா

20
VSK TN
    
 
     
மானனீய மன்மோகன் வைத்யா அவர்கள் கட்டுரை
===============================================
ஆர்எஸ்எஸ் அமைப்பைப் பற்றி புரிய வைக்கவும், நாட்டின் இன்றைய முக்கியமான பிரச்னைகளில் ஆர்எஸ்எஸ்சின் நிலைப்பாடு குறித்து விளக்கவும், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் ஜி பகவத் அவர்கள் பங்கேற்ற 3 நாள் தொடர் சொற்பொழிவு தலைநகர் டில்லியில் சமீபத்தில் நடந்தது. அது முழு வெற்றியாக நடந்து முடிந்திருக்கிறது. சங்க வரலாற்றில் முதல் முறையாக நடந்த இந்த கலந்துரையாடல் எதிர்பார்த்ததை போலவே விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. விவாதம் தொடர்கிறது.
அந்த கலந்துரையாடலில் பங்கேற்றவர்களில் பலரும், சங்கத்தின் கருத்துக்களை நேரடியாக அறிந்திருக்காமல், தவறான பிரச்சாரங்களால் சங்கம் பற்றிய தவறான கண்ணோட்டங்களைக் கொண்டிருந்தவர்கள். இதன் காரணமாக, சங்கம் பற்றி அவர்கள் இதுநாள் வரை கேட்டதற்கு மாறாக ஆர்எஸ்எஸ் தலைவரின் பேச்சு அமைந்திருந்ததால் அவர்களிடம் சிறிது அவநம்பிக்கையும் இருந்தது.
ஆர்எஸ்எஸ் தலைவரின் பேச்சால் வாயடைத்துப்போன சங்க எதிர்ப்பாளர்கள், அந்த சொற்பொழிவில் ஏதாவது குறைகாண முயற்சித்தனர். ஆனால், குற்றம்சாட்டும் வகையில் அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை.
எனினும், வழக்கமான மற்றும் அதீத நம்பிக்கையின் அடிப்படையிலான அவர்களது முயற்சிகள், கடந்த காலத்தைப் போலவே நம்பகத்தன்மையற்ற விஷயங்களைத்தான் மையமாகக் கொண்டுள்ளன.
கம்யூனிஸ்ட் பிரச்சாரங்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டிய ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள் சிலரும், சில ஸ்வயம்சேவகர்களும் கூட, அவர்கள் பாணியில் பார்ப்பதும், அர்த்தமற்ற வாதங்களை தொடங்குவதும் ஆச்சரியமளிக்கிறது.
ஆர்எஸ்எஸ்சின் 2வது தலைவர் ஸ்ரீ குருஜியின் சொற்பொழிவுகள் மற்றும் சிந்தனைகளின் தொகுப்பான BUNCH OF THOUGHTS குறித்து ஆர்எஸ்எஸ் தலைவர் தெரிவித்த விளக்கம் சர்ச்சையாக்கப்பட்டுள்ளது. குருஜியிடம் இருந்து சங்கத்தை மோகன் பகவத் துாரமாகக் கொண்டுசென்றுவிட்டார் எனும் அளவுக்கு, இந்த ஆய்வு நீண்டு கொண்டிருக்கிறது. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.
உண்மையில், அந்த சொற்பொழிவுத் தொடரின் 2வது நாளில், ஹிந்து மற்றும் ஹிந்துத்வா குறித்து ஆர்எஸ்எஸ் தலைவர் ஆற்றிய சொற்பொழிவு முழுவதும், சங்கத்துக்கு ஸ்ரீ குருஜி வழங்கிய ஆக்கப்பூர்வ அறிவுரைகளின் அடிப்படையிலானது.
Bunch of Thoughts நுாலை, அதன் காலத்தின் அடிப்படையில் பார்க்க வேண்டியது அவசியம். தேசம், தேசிய அடையாளம், தேசத்துடன் சேர்ந்திருத்தல் பற்றிய விரிவான விவாதங்கள் மற்றும் கலந்துரையாடல்களுக்கு வழிவகுத்த சூழல்கள் நிறைந்த, சுதந்திரத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய வரலாற்றின் 1940 முதல் 1965 வரையிலான காலகட்டத்தைச் சார்ந்தது என்பது கவனத்திற்குரியது. (அது, ஸ்ரீ குருஜி ஆர்எஸ்எஸ் தலைவர் பொறுப்பு வகித்த ஒட்டுமொத்த காலகட்டம் அல்ல).
அந்த காலகட்டத்தின் கருத்துக்களை, மதத்தை மட்டுமே அடிப்படையாக்கி பாகிஸ்தான் என்ற ஒரு புதிய நாடு உருவாக்கப்பட்டதை மையமாக்கி நடந்த விரிவான உரையாடல்களின் ஒரு பகுதியாகப் பார்க்க வேண்டியது அவசியம்.
ஆர்எஸ்எஸ் தலைவராக ஸ்ரீ குருஜி பொறுப்பேற்ற போது அவரது வயது வெறும் 34 தான். அந்த வயதில், முக்கியமான பொறுப்பை அவரது தோள்களில் விதி ஏற்றிவைத்தது.
பின்பற்றுவதற்கு எந்த ஒரு முன்னுதாரணமும் இல்லாத நிலையில், இந்த அமைப்பை விரிவாக்கி வழிநடத்தி, பொறுப்புகளை வெற்றிகரமாக நிறைவேற்றுவது, ஒரு இளைஞருக்கு மிகப்பெரிய பணி.
ஆர்எஸ்எஸ் தலைவராக அவர் பொறுப்பேற்ற போது, பாகிஸ்தான் ஆதரவுக்குரல் பிரதான பிரச்னையாக மாறி, நாடு முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருந்தது.
வெள்ளையனே வெளியேறு இயக்கமும் தீவிரமாகி, சுயம்சேவகர்கள் பலரும் சிறையில் அடைக்கப்பட்டதோடு, சிலருக்கு மரணதண்டனையும் விதிக்கப்பட்டது.
கொந்தளிப்பான அந்த காலகட்டத்தில், பாகிஸ்தான் தனி நாடு என்ற கோரிக்கையோடு 1946ல் ஒரு தேர்தல் நடத்தப்பட்டது. முஸ்லிம் பெரும்பான்மை பகுதிகளில், இந்துக்கள் வன்முறைக்கும் ஒடுக்குதல்களும் ஆளாக்கப்பட்டனர்.
நேரடி நடவடிக்கையின் (Direct Action – பாகிஸ்தானை வலியுறுத்தி முகமது அலி ஜின்னா எழுப்பிய ஆவேச அழைப்பு) விளைவாக, வங்காளத்தில் இருந்த இந்துக்கள், பயங்கர வன்முறைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது; அதே வேளையில், துண்டாடப்பட்டது.
சொல்லொணா வன்முறைகளை எதிர்கொண்டு, அனைத்தையும் இழந்து, இந்தியாவில் இந்துக்கள் தஞ்சம் கோரிய, மிகப்பெரிய மனிதகுல இடப்பெயர்வு நடந்தது.
அந்த மக்களின் வேதனைகளுக்கு சாட்சியாக இருந்து, அவர்களுக்கு ஆதரவளித்து பாதுகாத்த ஒரே அமைப்பு, ஆர்எஸ்எஸ் மட்டும்தான். அந்த ஆண்டுகள் ஏற்படுத்திய மனரீதியான தாக்கம், மிகவும் விரிவானது. ஹிந்து சமூகத்திலும் நாட்டிலும் அந்த தாக்கம் இன்னும் நீடிக்கிறது.
காந்திஜியின் படுகொலையில், தவறான வகையில் ஆர்எஸ்எஸ் குறிவைக்கப்பட்டது. குற்றச்சாட்டுகளை அரசால் நிரூபிக்க முடியாத நிலையிலும், ஆர்எஸ்எஸ் மீது தடை விதிக்கப்பட்டது. இதுதான், சுதந்திர பாரதத்தில் காங்கிரசின் மோசமான வெறுப்பு அரசியலின் தொடக்கம். விசாரணை நடத்தி குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அரசு தயாராக இருக்கவில்லை.
பேச்சுவார்த்தைக்கு எந்த கதவும் திறக்கப்படவில்லை. தவறான குற்றச்சாட்டுகளால் ஸ்ரீ குருஜி சிறையில் அடைக்கப்பட்டார். இந்த அநீதிக்கு எதிராக, முன்னுதாரணமே இல்லாத வகையில் ஒரு அமைதியான சத்தியாக்கிரகத்தை சுயம்சேவக்குகள் நடத்தினர். கடைசியில், நியாயமற்ற அந்த தடை நீக்கப்பட்டது.
அதே வேளையில், கம்யூனிச சித்தாந்தம் விரிவாகி, தேசிய அடையாளத்தை சீர்குலைக்கும் பிரிவினைவாத சிந்தனை, திட்டமிட்டு முன்னிலைப்படுத்தப்பட்டு வந்தது.
இந்தியாவை கம்யூனிச சீனா 1962ம் ஆண்டு தாக்கியபோது, கம்யூனிஸ்ட்கள் வெளிப்படையாகவே சீனாவைப் புகழ்ந்து, தேசத்தை விட சித்தாந்தத்துக்கு விசுவாசத்தை வெளிப்படுத்தும் அளவுக்கு, பிரிவினைவாத சிந்தனை தீவிரமாக வளர்ந்திருந்தது.
அதே வேளையில், கிறிஸ்தவர்களின் மதமாற்ற நடவடிக்கைகளும் தீவிரமடைந்தது. அது தொடர்பாக ஜஸ்டிஸ் நியோகி கமிஷன் பரிந்துரை அடிப்படையில் காங்கிரஸ் ஆட்சி நடந்த ஒரிசா, மத்தியப்பிரதேசத்தில் மதமாற்ற தடை சட்டம் நிறைவேற்றப்பட்டன. இதற்கு எதிராக கிறிஸ்தவ சமூகத்துக்குள் மிகப்பெரிய போராட்டம் பரவியது.
கொந்தளிப்பு நிறைந்த அந்த காலகட்டத்தில், ஸ்ரீ குருஜி நாடு முழுக்கப் பயணம் செய்து, தேசிய மனசாட்சியைச் சீர்குலைத்து வந்த பிரச்னைகள் குறித்து விரிவாக விளக்கி வந்தார். 1965ம் ஆண்டு வரை நிலவிய சூழல்களை எதிர்கொள்வதற்கான சிந்தனைகள் மற்றும் மறுமொழிகள்தான் Bunch of Thoughts நுாலில் இடம்பெற்றுள்ளன.
எனினும், இந்த நுாலின் காலகட்டத்தைத் தாண்டி மேலும் 18 ஆண்டுகளுக்கு, ஸ்ரீ குருஜி பொது உரையாடலில் ஈடுபட்டார்.
ஆர்எஸ்எஸ் தலைவராக அவர் இருந்த போது வெளியிட்ட சிந்தனைகளின் அதிகாரப்பூர்வ தொகுப்பு, 2006ம் ஆண்டு அவரது நுாற்றாண்டு விழாவின் போது, 12 பகுதிகளாக (ஸ்ரீ குருஜி சிந்தனைக் களஞ்சியம்) வெளியிடப்பட்டன.
ஸ்ரீ குருஜி மற்றும் அவரது கருத்துகளை, பெரும்பாலும், அந்தந்த காலகட்ட பிரச்னைகள் குறித்த அவரது கருத்துகளை தெளிவாகப் புரிந்து கொள்ள விரும்புபவர்கள், இந்த தொகுப்பைப் படிப்பது நல்லது.
ஸ்ரீ குருஜிக்கு எதிராக எழுதுவதற்கு முன், அவரையும் அவரது கருத்துகளை ஆழமாகப் படித்துணர்வது அவசியம் என்ற அறிவுஜீவித நடவடிக்கையை எதிர்ப்பாளர்கள் வெளிப்படுத்தவில்லை.
12 பகுதிகள் மிகவும் விரிவானவை என்றால், அவரது கருத்துக்கள் சுருக்கமாகத் தொகுக்கப்பட்டுள்ள ‘ஸ்ரீ குருஜி – அவரது பார்வையும் வழிகாட்டுதலும் (திருஷ்டி அண்ட் தர்ஷன்)’ என்ற நுால் இருக்கிறது. இந்த நுாலும், ஸ்ரீகுருஜி மற்றும் அவரது கருத்துகளையும் விரிவாக விளக்கும்.
ஒவ்வொருவரும் இந்த நுாலைப் படிக்க வேண்டும் என்று மோகன் பகவத் வலியுறுத்தியுள்ள நிலையில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் 2வது தலைவரின் சிந்தனைகளில் இருந்து விலகுதல் என்ற கேள்வி எங்கே வருகிறது?
Bunch of Thoughts நுாலின் சில பகுதிகளில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மோகன் பகவத் அளித்த பதிலுக்கும், ஸ்ரீ குருஜியே தெரிவித்துள்ள கருத்துக்கும் வேறுபாடு எதுவும் இல்லை.
1970களில், டாக்டர் ஜிலானிக்கு ஸ்ரீ குருஜி அளித்த ஒரு பேட்டியில், இந்த நேரடி கேள்விகளுக்கு அவர் பதிலளித்துள்ளார். விமர்சகர்களுக்கு செலக்டிவ் அம்னீசியா இருப்பதாலோ, இதெல்லாம் அவர்களது உள்நோக்கப் பிரச்சாரத்துக்கு எதிராக இருப்பதாலோ, இது மிகவும் அரிதாக மேற்கோள் காட்டப்படும் பேட்டியாக இருந்து வருகிறது.
அந்த பேட்டியின் முக்கிய பகுதிகள் :
டாக்டர் ஜிலானி : ‘இந்தியராக்குதல்’ பற்றி அதிகமாகப் பேசப்பட்டுள்ளது. இதுகுறித்து நிறைய குழப்பங்கள் எழுந்துள்ளன. இந்த குழப்பத்தை எப்படி நீக்குவது என்று தயைகூர்ந்து நீங்கள் கூற முடியுமா?
ஸ்ரீ குருஜி : ‘இந்தியராக்குதல்’ என்பது, ஜனசங்கம் வழங்கிய கோஷம். அதில் எதற்காக குழப்பம்? இந்தியனாக்குதல் என்பதற்கு, அனைவரையும் இந்துக்களாக மாற்றுதல் என்று அர்த்தம் அல்ல. நாம் அனைவரும், ‘நாம் இந்த மண்ணின் குழந்தைகள், நாம் இந்த நாட்டுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும்’ என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். நாம், ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். நாம், ஒரே மூதாதையரின் சந்ததிகள். நமது லட்சியங்களும் பொதுவானவை. இதையெல்லாம் உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதுதான், இந்தியராக்குதல் என்பதின் உண்மையான அர்த்தம்.
இந்தியராக்குதல் என்பதற்கு, ஒருவரை அவரது மதத்தை கைவிடவேண்டும் என்று அர்த்தம் அல்ல. இப்படி நாங்கள் சொன்னதும் இல்லை, சொல்லப் போவதும் இல்லை. மாறாக, ஒட்டுமொத்த மனித சமூகத்துக்கும் ஒரே ஒரு மத அமைப்பு மட்டுமே இருப்பது பொருத்தமாக இருக்காது என்று நாங்கள் நம்புகிறோம்.
டாக்டர் ஜிலானி : நீங்கள் சரியாகச் சொன்னீர்கள். இது, நுாறு சதவீதம் சரியானது. இந்த தெளிவுக்காக உங்களுக்கு நன்றி. நீங்கள் உங்கள் தரப்பிலிருந்து தெளிவுபடுத்திவிட்டீர்கள். சிந்திக்கும் திறன் கொண்ட எந்த ஒரு நபரும், எந்த ஒரு நேர்மையான நபரும், உங்கள் கருத்துடன் முரண்பட மாட்டார்கள்.
மதவாத பிரச்னைக்கு நிரந்தரமாக முடிவுகட்டும் வழிகளை கண்டறிய, உங்களுடன் ஒத்துழைக்கக் கூடிய முஸ்லிம் இந்தியத் தலைவர்களுடன் நீங்கள் ஒரு சந்திப்பை நடத்துவதற்கு இதுதான் சரியான வேளை என்று நீங்கள் கருதவில்லையா? அப்படிப்பட்ட தலைவர்களைச் சந்திக்க நீங்கள் விரும்புகிறீர்களா?
ஸ்ரீ குருஜி : அப்படி ஒரு சந்திப்பை நான் விரும்புகிறேன் என்பது மட்டுமல்ல, வரவேற்கிறேன்.
ஸ்ரீ குருஜியை பிரபல பத்திரிகையாளர் குஷ்வந்த் சிங்கும் 1972ம் ஆண்டில் பேட்டி எடுத்துள்ளார். அந்த பேட்டியை நீங்கள் படித்தால், ஸ்ரீ குருஜியை தவறாகச் சித்தரிக்க, மீடியாக்கள் மற்றும் கம்யூனிஸ்ட்கள் மேற்கொண்டிருக்கும் தீவிர முயற்சிகள் பற்றிய தெளிவு கிடைக்கும்.
ஆரம்பத்தில் குஷ்வந்த்சிங் இப்படி எழுதுகிறார் : ‘‘ சில நபர்களைப் பற்றி அறியாத நிலையிலேயே, அவர்களைப் பற்றி மோசமான கருத்துகளை வளர்த்துக் கொள்கிறோம். நான் வெறுப்பவர்களின் பட்டியலில், குரு கோவல்கர் நீண்டகாலமாக முதலிடத்தில் இருந்தார். எனினும், ஒரு பத்திரிகையாளர் என்ற வகையில், அவரை சந்திக்கும் வாய்ப்பை என்னால் தடுக்க இயலவில்லை’’.
முடிவில் குஷ்வந்த்சிங் இப்படி எழுதுகிறார் : ‘‘நான் தாக்கம் பெற்றேனா? ஆம் என்று ஒப்புக்கொள்கிறேன். அவர் (ஸ்ரீ குருஜி), தனது கருத்தை ஏற்க வேண்டும் என்று என்னை வலியுறுத்தவில்லை. கலந்துரையாடலுக்கு அவர் தயாராக இருக்கிறார் என்ற உணர்வைத்தான் அவர் எனக்குள் ஏற்படுத்தியிருக்கிறார்’’.
இந்த இரு பேட்டிகளும், முழுமையாகப் படிக்க வேண்டியவை. எனினும், குருஜி பற்றிய விரிவான தகவல்கள் எதையும் படிக்காமலேயே, அவரைப் பற்றி விவாதிப்பதையும், அவதுாறு செய்வதையும், கம்யூனிஸ்ட்கள் ஒரு கலையாகவே மாற்றியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட பிரச்சாரத்தில் அவர்கள் உலகளவில்‘முன்னிலை’ பெற்றுள்ளனர்.
Bunch of Thoughts நுாலில் ஸ்ரீ குருஜி குறிப்பிட்டு விவாதித்துள்ள அதே பிரச்னைகள்தான், இன்றைய உலகிலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன; குறிப்பாக, (மத அமைப்புக்குள்) அடிப்படைவாதத்தை வலியுறுத்தும் ஒரு சித்தாந்தமும், ஜிகாதி மனநிலையும் தான் பயங்கரங்களுக்கும் ஒடுக்குதல்களுக்கும் வழிவகுக்கின்றன. பாரதத்திலும் அப்படிப்பட்டவர்கள் இல்லை என்று கூறிவிட முடியாது.
மேலும், மிஷனரி அமைப்புகளின் சட்டத்தை மீறிய வலுக்கட்டாயமான, சட்டவிரோதமான மதமாற்றங்களும், நகர்ப்புற மாவோயிசமும், இப்படிப்பட்ட நடவடிக்கைகளுக்கு சர்வதேச அளவிலான ஆதரவும், சமீபத்தில் நடந்த சில சம்பவங்களில் இருந்து வெளிப்பட்டுள்ளன. சமூகத்தில் அமைதியின்மை மற்றும் வன்முறையைப் பரப்பும் இந்த செயல்பாடுகளுக்கு நீண்ட வரலாறு உண்டு.
தேசத்தைக் கட்டமைக்கும் நடைமுறையில் பாரதத்தின் முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் சேர்ப்பது அவசியம் என்றாலும், சிறுபான்மையினர் என்ற பெயருடன் இயங்கும் தீவிரவாதிகள், ஜிகாதி மற்றும் பிரிவினைவாத சக்திகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது முக்கியம்.
இந்த வகையில், நாட்டுக்கான அச்சுறுத்தல் குறித்த ஸ்ரீ குருஜியின் எச்சரிக்கை, இன்றளவும் பொருந்துகிறது.
கால மாற்றங்களுக்கு ஏற்ப ஹிந்து வாழ்க்கை முறை தானாக தகவமைத்துக் கொள்கிறது. இது, சங்கப் பணிகளின் இயல்புக்கும் பொருந்தும். சங்கத்தின் 92 ஆண்டுகள் பயணத்தில், பல ஏற்ற இறக்கங்கள் இருந்துள்ளன. எதிர்ப்பு, ஒடுக்குமுறை, தீவிர பொய்ப்பிரச்சாரம் என பல முயற்சிகள் நடந்துள்ளன. இவையெல்லாவற்றையும் மீறி, அனைவரையும் அரவணைத்து, மிக விரிவாக அணுகி, சங்கத்தின் சிந்தனையும் பணியும் வளர்ந்து கொண்டே வருகிறது. ‘நெகிழ்வுத்தன்மை இணைந்த உறுதி’ என்ற சிறப்புத்தன்மை கொண்ட ஹிந்து தத்துவத்தின் உள்ளார்ந்த பண்புகளும், காலத்திற்கு ஏற்ற மாற்றங்களும்தான், இதன் பின்னணியில் உள்ள உண்மையான வலிமை. 
– டாக்டர் மன்மோகன் வைத்யா,
சஹ சர்கார்யவாஹ்(இணை பொதுச் செயலாளர்)
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம்(ஆர்எஸ்எஸ்).
***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Vijayadashami Speech 2018 by RSS Sarsanghachalak at Nagpur

Thu Oct 18 , 2018
VSK TN      Tweet     Rashtriya Swayamsevak Sangh Summary of the address of Parampujya Sarsanghchalak Dr. Mohanji Bhagwat on the occasion of Sri Vijayadashami – on Thursday 18th October 2018. Introduction :  We have assembled here to celebrate the auspicious occasion of this year’s Vijayadashami. This year is the 550th Prakash Parv of Shri […]