சமூகத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் உந்தப்படுபவரே உயர்ந்த மனிதர் – டாக்டர் அம்பேத்கர்

VSK TN
    
 
     

விடுதலை இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாக விளங்கியவர், ‘பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர்’. இவர் ஒரு சமூக சீர்திருத்தவாதியாக மட்டுமல்லாமல், மிகச்சிறந்த பொருளியல் அறிஞராகவும், அரசியல் தத்துவமேதையாகவும், பகுத்தறிவு சிந்தனையாளராகவும், சிறந்த எழுத்தாளர் மற்றும் பேச்சாளராகவும்,  வரலாற்று ஆசானாகவும் விளங்கியவர். பட்டியல் இன மக்களுக்கு மட்டுமல்லாமல், அந்த  மக்களின் வாழ்விருளைப் போக்க, உதித்த சூரியன். மகாத்மா காந்திக்கு பிறகு, சுதந்திர இந்தியாவின் மாபெரும் தலைவர் என்று போற்றப்பட்டவர், டாக்டர் பி.ஆர் அம்பேத்கர் அவர்கள். தன் வாழ்நாள் முழுவதையும் சமூகத்திற்கென அர்ப்பணித்த மாபெரும் சிற்பியான டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை காண்போம்.

அம்பேத்கர் அவர்கள் Annhilation of Caste என்றுதான் புத்தகம் எழுதினாரே தவிர Annhilation of Hinduism என்று எழுதவில்லை. அவர் ஹிந்துத்துவ அம்பேத்கர் தான்

 பாபா சாஹேப் அம்பேத்கர் அவர்கள் ஹிந்து மதம் தன்னை சீர்படுத்திக் கொள்ள வேண்டும் என்றுதான் தனது புத்தகத்தில் எழுதுகிறாரே தவிர ஒழிக்கப்பட வேண்டும் என்று எழுதவில்லை. அவரை ஹிந்து மதத்துக்கு எதிரானவர் போன்று கட்டமைக்கிறார்கள்.

‘பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்’ என அழைக்கப்படும் ‘பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர்’ அவர்கள், 1891ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் நாள், இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மாவ் (இப்போது மத்தியபிரதேசத்தில் உள்ளது) என்ற இடத்தில், ராம்ஜி மாலோஜி சக்பாலுக்கும், பீமாபாயிக்கும் பதினான்காவது குழந்தையாக, ஒரு மராத்திய குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை இராணுவப்பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார்.

“மகர்” என்னும் சமுதாயத்தில் பிறந்த பீமாராவ் ராம்ஜி அவர்கள், ‘சாத்தாராவில்’ உள்ள ஒரு பள்ளியில் தனது கல்வியைத் தொடர்ந்தார். இளம் வயதில், தனி மண்பானையில் தண்ணீர் குடிப்பது; குதிரை வண்டியில் போகும்போது, தாழ்த்தப்பட்ட பிரிவினர் என்றதும் இறக்கிவிடப்பட்டது; பள்ளியில் படிக்கும்போது, ஒதுக்கிவிடப்பட்டது என பல்வேறு துன்பங்களையும், துயரங்களையும் அனுபவித்தார். ஆனால், மகாதேவ அம்பேத்கர் என்ற பிராமண ஆசிரியர், இவர்மீது அன்பும், அக்கறையும் கொண்டவராக விளங்கினார். இதனால், தன்னுடைய குடும்ப பெயரான ‘பீமாராவ் சக்பால் அம்பாவடேகர்’ என்ற பெயரை, ‘பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர்’ என்று மாற்றிக்கொண்டார்.

1904 ஆம் ஆண்டு, இவருடைய குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தது. அங்கு “எல்பின்ஸ்டன் உயர்நிலைப்பள்ளியில்” சேர்ந்து கல்வியைத் தொடர்ந்தார். குடும்பத்தில் மிகவும் வறுமை சூழ்ந்த நிலையிலும், கல்வியை விடாமல் தொடர்ந்த அவர், 1907 ஆம் ஆண்டு தனது பள்ளிப்படிப்பை முடித்தார். பிறகு, பரோடா மன்னரின் உதவியுடன் மும்பை பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் படிப்பைத் தொடர்ந்த அவர், 1912ல் அரசியல் அறிவியல் மற்றும் பொருளாதாரத் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். சிறிதுகாலம் பரோடா மன்னரின் அரண்மனையில் படைத் தலைவராகவும் பணியாற்றினார்.

பரோடா மன்னர் ‘ஷாயாஜி ராவ்’ உதவியுடன் உயர்கல்வி கற்க அமெரிக்கா பயணம் ஆனார். உயர்கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற அம்பேத்கர் அவர்கள், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, பொருளாதாரம், அரசியல், தத்துவம் மற்றும் சமூகவியல் ஆகிய பாடங்களைக் கற்றார். 1915ல் “பண்டைய இந்தியாவின் வர்த்தகம்” என்ற ஆய்விற்கு முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் “இந்திய லாபப்பங்கு ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு” என்ற ஆய்வுக்கு, ‘கொலம்பியா பல்கலைக்கழகம்’ அவருக்கு ‘டாக்டர் பட்டம்’ வழங்கியது. மேலும், 1921 ஆம் ஆண்டு “பிரிட்டிஷ் இந்தியாவில் அரசு நிதியைப் பரவலாக்குதல்” என்ற ஆய்வுக்கு ‘முது அறிவியல் பட்டமும்’, 1923 ஆம் ஆண்டு “ரூபாயின் பிரச்சனை” என்ற ஆய்வுக்கு ‘டி.எஸ்.சி பட்டமும்’ பெற்றார். பிறகு சட்டப் படிப்பில் ‘பாரிஸ்டர் பட்டமும்’ பெற்றார்.

சமூகப்பணிகள்

1923 ஆம் ஆண்டுக்கு பிறகு, இந்தியாவிற்கு திரும்பிய அம்பேத்கர் அவர்கள், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அதுமட்டுமல்லாமல், சமூதாய அமைப்பிலும், பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைக்க போராட வேண்டும் என முடிவு செய்தார். ஜூலை 1924ல், ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக “பஹிஸ்கிருத ஹிதகாரிணி சபா” என்ற அமைப்பை நிறுவினார். இதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி மற்றும் சமூதாய உரிமைக்காக போராடினார். 1930 ஆம் ஆண்டு, லண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக புறப்படும் முன் அவர் கூறியது, “என் மக்களுக்கு என்ன நியாயமாகக் கிடைக்க வேண்டுமோ, அதற்காக போராடுவேன் என்றும், அதே சமயத்தில் சுயராஜ்ய கோரிக்கைகளை முழு மனதுடன் ஆதரிப்பேன் என்றும் கூறினார்.”

இரண்டாவது வட்டமேச மாநாட்டில், பிரதிநிதித்துவம் குறித்த பிரச்சனை முக்கியமாக விவாதிக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமையும், விகிதாச்சார பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தினார். இதன் விளைவாக, ஒரு தொகுதியில் பொது வேட்பாளரை தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும், அதே தொகுதியில் தாழ்தப்பட்ட சமூக வேட்பாளரை தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் அளிக்கும் “இரட்டை வாக்குரிமை” முறை தாழ்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், இதை ஏற்க மறுத்த காந்திஜி, உண்ணாவிரதம் மேற்கொண்டார். இதன் விளைவாக, செப்டம்பர் 24, 1931 ஆம் ஆண்டு காந்திஜிக்கும், அம்பேத்கருக்கும் இடையே “பூனா ஒப்பந்தம்” ஏற்பட்டு, தாழ்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமை என்பதற்கு பதிலாக, பொது வாக்கெடுப்பில் தனி தொகுதி என முடிவுசெய்யப்பட்டது.

சாதியமைப்பையும், தீண்டாமை கொடுமைகளையும் எதிர்த்து தீவிரமாக போராடிய அம்பேத்கர் அவர்கள், 1927 ஆம் ஆண்டு தாழ்தப்பட்ட மக்கள் மீதான தீண்டாமைக்கொடுமைகளை எதிர்த்து போராட்டத்தினைத் தொடங்கினார். பிறகு, 1930 ஆம் ஆண்டு தொடங்கிய நாசிக் கோயில் நுழைவு போராட்டத்தினை நடத்தி வெற்றி கண்டார். தீண்டாமை என்பது ஒரு சமூகப் பிரச்சனை மட்டுமல்லாமல், அது ஒரு அரசியல் பிரச்சினை எனவும் கருதிய அவர் தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தையும் கொண்டுவந்தார். இறுதியில், 1956 ஆம் ஆண்டு “புத்த மதத்திலும்” இணைந்தார்.

ஆகஸ்ட் 15, 1947 ஆம் ஆண்டு, இந்தியா விடுதலை பெற்ற பிறகு, காங்கிரஸ் அரசு அம்பேத்கரை சட்ட அமைச்சராக பதவிஏற்றுக்கொள்ளும்படி அழைத்தது. அதன்பேரில், விடுதலைப் பெற்ற இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசன சபையின் தலைவராகவும் பொறுப்பேற்றார். நவம்பர் 26, 1949 ஆம் ஆண்டு அம்பேத்கர் தலைமையிலான இந்திய அரசியல் அமைப்பு சட்ட வரைவுக்குழு நாடாளுமன்றத்திடம் சட்ட வரைவை ஒப்படைத்தது.    அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட இந்த அரசியல் அமைப்பு, குடிமக்களின் உரிமைகளுக்கு பலவகைகளில் பாதுகாப்பை அளிப்பதாக அமைந்ததோடு மட்டுமல்லாமல், இது ‘மிகச்சிறந்த சமூக ஆவணம்’ என வரலாற்று ஆசிரியர்களால் போற்றப்பட்டது. ஆனால் இச்சட்டத்தை கொண்டுவருவதில் நேருவுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால், 1951 ஆம் ஆண்டு தன் பதவியைத் துறந்தார்.

தற்போதைய அரசியல்வாதிகள் டாக்டர் அம்பேத்கரின் கருத்துக்களை தங்கள் விருப்பப்படி மக்களிடம் சேர்க்கின்றனர்.

திரு.ம.வெங்கடேசன் அவர்கள் தெரிவித்த‌ சில கருத்துக்களை இங்கு பார்ப்போம்.

பாகிஸ்தான் பிரிவினையின் போது இஸ்லாமியரை பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும் என்று முதலில் சொன்னவர் அம்பேத்கர்

ஒரு தேர்தலில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைச் சேர்ந்த தெங்கடி ஜி அம்பேத்கருக்காக வேலை செய்தார். காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டினரின் வேலையால் அம்பேத்கர் தோல்வியுற்றார். ஆர்.எஸ்.எஸ் தனக்கு வேலை செய்கிறார்கள் என்பது அவருக்கு தெரியாது. பின்னர் தெரிந்தபின் சங்கத்தோடு நட்போடுதான் இருந்தார் அம்பேத்கர் –

இந்த நாட்டின் மொழி என்பதால் சமஸ்கிருதத்தை ஆதரிக்கிறேன் என்று பாராளுமன்றத்தில் ஆதரித்தவர் அம்பேத்கர்

இஸ்லாமியரை அதிகமாக விமர்சித்தவர் அண்ணல் அம்பேத்கர். குருஜியும், வீர் சாவர்க்கர் கூட விமர்சித்திருக்க மாட்டார்கள்

ஹிந்துவாக சாகப்போவதில்லை என்று அம்பேத்கர் சொன்னவுடன் அவரிடம் கிறித்துவர்களும், இஸ்லாமியர்களும் மதம் மாற்ற பேரம் பேசினர். ஆனால் அவர் உடன்படவில்லை.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு வந்த அம்பேத்கர் அவர்களுக்கு, 1955ல் உடல் நலம் மோசமடைய தொடங்கியது. தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தன்னுடைய வாழ்வையே அர்பணித்த பாபாசாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், 1956 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் நாள் தில்லியிலுள்ள அவருடைய வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கும் பொழுதே உயிர் நீத்தார். பௌத்த சமயத்தில் அதிக ஈடுபாடு கொண்டமையால், பௌத்த சமய முறைப்படி இவருடைய உடல் “தாதர் சௌபதி” கடற்கரையில் தகனம் செய்யப்பட்டது. இவருடைய மரணத்திற்கு பின், இவருக்கு இந்தியாவின் உயரிய விருதான “பாரத ரத்னா விருது” 1990 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

 – கட்டுரையாளர் ;- அருள் சிவசங்கரன்

Next Post

ஈரோடு இளஞ்சிங்கம் "தீரன் சின்னமலை"

Sun Apr 17 , 2022
VSK TN      Tweet    “சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பிறந்ததாக மைசூர் மன்னர் ஹைதரலியிடம் சொல்,” என்று கர்ஜித்தான் அந்த இளைஞன். அன்றிலிருந்து அவன் தீரன் சின்னமலை என்று அழைக்கப்பட்டான்! ஈரோடு காங்கேயம் அருகே மேலப்பாளையத்தில் 1756 ஏப்ரல் 17ம் தேதி இரத்தினசாமி கவுண்டர் – பெரியாத்தாவுக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு தீர்த்தகிரி என பெயரிட்டனர். வசதியான செல்வாக்கு மிக்க குடும்பம், பழைய கோட்டை பட்டக்காரர்கள் வம்சாவழியைச் சேர்ந்த கவுண்டர் […]